குரோதி வருடத்தில் எல்லா உலகிலும் மக்கள் எப்பொழுதும் கோபம் போலி எண்ணத்தில் சிந்திப்பவர்களாகவும் அற்ப குணமுடையவர்களாகவும் விளங்குவர். நெல்விளை...
குரோதி வருடத்தில் எல்லா உலகிலும் மக்கள் எப்பொழுதும் கோபம் போலி எண்ணத்தில் சிந்திப்பவர்களாகவும் அற்ப குணமுடையவர்களாகவும் விளங்குவர். நெல்விளைச்சல் மத்திமமாகவும் வருட மழை வீழ்ச்சி அரைவாசியே மழை பொழியுமாம். மேலும் குரோதி வருஷ ஜாதகத்தின்படி முன்மழை மிகுதி பின்மழை சமம், உணவுப்பொருள் விருத்தி, கமத்தொழில் விருத்தி, கைத்தொழில் விருத்தி, அரச சேவை நிறைவு, கல்வி விருத்தி, சமய முன்னேற்றம், பொருட்கள் விலையேற்றம் உண்டாகலாம்.
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி புது வருடம் பிறக்கும் நேரம்:
மங்களகரமாக குரோதி வருஷம் வாக்கிய பஞ்சாங்கப்படி பங்குனி 31ம் நாள் (13.04.2024) சனிக்கிழமை இரவு 8.15 மணியளவில் குரோதி வருஷம் பிறக்கின்றது. அன்றைய தினம் மாலை 4 மணி15 நிமிடம் முதல் நள்ளிரவு 12.15 வரையிலான காலம் விஷு புண்ணிய காலமாகும் .
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி புது வருடம் பிறக்கும் நேரம்:
குரோதி தமிழ் வருஷ பிறப்பு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி பங்குனி 31ம் நாள் (13/04/2024) சனிக்கிழமை இரவு 9.04 மணியளவில் குரோதி வருடம் ஆரம்பமாகின்றது. மேலும் அன்றைய தினம் திருக்கணிதத்தின்படி விஷு புண்ணிய காலமாக பங்குனி 31ம் நாள் (13.04.2024) மாலை 5.04 மணி முதல் நள்ளிரவு 1.04 வரை விஷு புண்ணிய காலமாக திருக்கணிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாக்கிய, திருக்கணித பஞ்சாங்கத்தின்படி குரோதி வருஷத்தில் தோஷ நட்சத்திரங்களாக மிருகசீரிடம், திருவாதிரை புனர்பூசம் 1ம் 2ம் 3ம் பாதம் சித்திரை, விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை, அவிட்டம் இவற்றில் பிறந்தோர் தவறாது மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்து நல்ல கருமங்களை செய்து சங்கிரம தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி மருத்துநீர் விஷுபுண்ணிய காலத்தில் அதாவது பங்குனி 31ஆம் நாள் (13.04.2024) மாலை 4.15 இல் இருந்து நள்ளிரவு 12.15 வரையான காலத்தில் விஷு புண்ணிய காலமான இந்நேரத்தில் மருத்துநீர் தேய்த்து சிரசில் புன்கிலையும் காலில் ஆலிலையும் வைத்து ஸ்நானம் செய்து தோஷ நிவர்த்தி பெறுவது நன்மையானதாகும்.
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி விஷு புண்ணிய காலமாக பங்குனி 31ம் நாள் (13.04.2024) மாலை 5.04 முதல் பின் இரவு 1.04 வரையிலான காலம் விஷு புண்ணிய காலமாகும். இப்புண்ணிய காலத்தில் மருத்துநீர் வைத்து தலையில் ஆலிலையும் காலில் இலவம் இலையும் வைத்து ஸ்நானம் செய்வது மிகவும் சிறப்பானதாகும்.
குரோதி வருஷ பிறப்பு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை துயில் எழுந்து ஸ்நானம் செய்து நித்திய கருமங்களை முடித்து கண்ணாடி தீபம் பூரண கும்பம் முதலான மங்கல பொருட்களை தரிசித்து சூரியனுக்கு பொங்கல் பூஜை வழிபாடுகள் மேற்கொண்டு விருந்தினர்களை உபசரித்து சிரார்த்தம், தர்ப்பணம் செய்ய இருப்போர் அதனையும் நிறைவேற்றி, உறவினர் நண்பர்களுடன் முன்போல் போஜனம் மேற்கொண்டு சுகந்த சந்தன புஷ்பாதிகளை அணிந்து புது வருடத்தில் செயற்படுத்தக்கூடிய நற்கருமங்களை சிந்தித்து மங்களகரமாக வாழ்வோமாக.
அத்துடன் ஸ்நானம் செய்ததன் பின்னர் இஷ்ட தெய்வங்களை வழிபட்டு முதியோர் பெரியோர்களிடம் ஆசி பெற்று எள்ளு அன்னம், நெல்லிக்காய் துவயல் முதலியவற்றுடன் அறுசுவை பதார்த்தங்களையும் போஜனம் செய்வது சிறப்பானதாகும்.
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி குரோதி வருடப்பிறப்பு புத்தாடை நிறமாக கபிலம், பட்டு போன்ற வெண்மையான பட்டாடை அல்லது வெள்ளை கரை கொண்ட புதிய பட்டாடை அணிவது சிறப்பானதாகும்.
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி குரோதி வருஷ பிறப்பு புத்தாடையாக கருநீல நிற பட்டு அல்லது நீல கரை வைத்த புது வஸ்திரம் அணிவது சிறப்பானதாகும்.
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி புத்தாடை ஆபரணமாக நீலக்கல் அல்லது வைரம் போன்ற ஆபரணம் அணிந்து கொள்வது சிறப்பானதாகும். அதேவேளையில் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி புதிய ஆபரணமாக இந்திர நீலம் பதிக்கப்பட்ட ஆபரணங்களை அணிவது சிறப்பானதாகும்.
புதுவருஷ கைவிஷேட புது நேரங்கள்
குரோதி வருஷ கைவிஷேட நேரங்களாக வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சித்திரை முதல் நாள் (14/04/2024) ஞாயிற்றுக்கிழமை பகல் 7.57 ல் இருந்து 9.56 வரையிலும் அதே நாள் 9.59 ல் இருந்து 12.01 வரையிலான நேரமும் அதே நாள் ஞாயிற்றுக்கிழமை பகல் மாலை 6.17 ல் இருந்து 8.17 வரையிலான காலமும் மறுநாள் சித்திரை இரண்டாம் நாள் திங்கட்கிழமை பகல் 9.08 ல் இருந்து 9.51 வரையிலான நேரமும் அதே நாள் திங்கட்கிழமை பகல் 9.55ல் இருந்து 10.30 வரையிலான காலமும் கை விஷேடத்திற்குரிய சுப நேரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குரோதி வருஷம் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி கைவிஷேட நேரங்களாக சித்திரை 1ம் நாள் ஞாயிற்றுக்கிழமை பகல் 10.00 மணியில் இருந்து 11.15 வரையிலான நேரமும் அதேநாள் மாலை 6.30 இல் இருந்து 7.45 வரையிலான நேரமும் சித்திரை 2ம் நாள் திங்கட்கிழமை அதாவது (15.04.2024 )காலை 6.00 ல் இருந்து 7.25 வரையிலான நேரமும் அதே நாள் திங்கட்கிழமை பகல் 9.35 இல் இருந்து 10.35 வரையிலான நேரம் கைவிஷேட நேரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குரோதி வருஷம் வியாபாரம் செய்தல் புதுக்கணக்கு பதிதல் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சித்திரை 2ம் நாள் (15.04.2024) திங்கட்கிழமை பகல் 9.08 ல் இருந்து 9.51 வரையிலான நேரமும் அதே நாள் திங்கட்கிழமை பகல் 9.55 இல் இருந்து 10.30 வரையிலான நேரமும் சித்திரை 05 அதாவது (18.04.2024 )வியாழக்கிழமை பகல் 10.49 இல் இருந்து 11.50 வரையிலான நேரம் வியாபாரம் செய்வதற்கும் புதுக்கணக்கு பதிவதற்கும் சிறப்பானதாகும்.
திருக்கணித பஞ்சாங்கத்தின் படி குரோதி வருஷப்பிறப்பின் வியாபாரம் புது கணக்குப்பதிதல் சித்திரை 2ம் நாள் (15.04.2024) திங்கட்கிழமை பகல் 10.00 ல் இருந்து 11.30 வரையிலான காலமும் சித்திரை 20ம் நாள் (03.05.2024) வெள்ளிக்கிழமை காலை 9.00 இல் இருந்து 10.15 வரையிலான காலமும் சித்திரை 23 (05.05.2024) திங்கட்கிழமை காலை 9.30 இல் இருந்து 10. 40 வரையிலான காலமுமம் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி வியாபாரம் புதுக்கணக்கு பதிவதற்கான சுப நேரங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வாக்கிய பஞ்சாங்கத்தின் படி கிரக சஞ்சாரம்:
குருசார பலன் குரு வருஷதியாக சித்திரை மாதம் 17ம் திகதி (30.04.2024) வரை மேஷ ராசியில் சஞ்சாரம் செய்யும் மழையும் விளையும் அகமலிவும் ஜனங்களுக்கு சுகமும் பயிர்கள் சிரமப்பட்டு விருத்தி ஆதலும் ஏற்படும். சித்திரை 18 (01.05.2024)முதல் வருடாந்தம் வரை அதாவது வருடம் முழுவதும் ரிஷப ராசியில் குரு பகவான் சஞ்சாரம் செய்வதால் நன்மழை, அகவிலை சமம், பசுக்கள், சிசுக்கள், கர்பஸ்தரிகளுக்கு பாதிப்பும் ஏற்படலாம். சனிசார பலன் சனி வருடம் முழுவதும் கும்பராசியில் சஞ்சரிப்பதால் அல்ப மழை, பயிர்க்கேடு, அகவிலை ஏற்றம், அரசர் புலவர்களுக்கு கஷ்டங்கள் ஏற்படலாம். ராகு கேது சார பலன் வருடம் முழுவதும் மீனராசியில் வருடம் முழுவதும் ராகுவும் கன்னி ராசியில் கேதுவும் நிற்பதால் நன்மழையும் பயிர் செழிப்பும் ஏற்படும்.
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி முகூர்த்த விஞ்ஞாபனம் சித்திரை 23ம் நாள் (06.05.2024)முதல் ஆனி 22ம் நாள் (06.07.2024) வரையும் பங்குனி 08ம் நாள் முதல் பங்குனி 19 வரையிலான காலத்தில் சுக்கிரன் அஸ்தமனமாக இருப்பதால் அக்காலத்தில் குறித்த சுப முகூர்த்தங்களுக்கு பிரிதி செய்வது நல்லதாகும்.