நல்லூர் கந்தசுவாமி கோயில் வளாகத்தை சுற்றி சில மாற்றங்களுடன் இம்முறை வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் ஆலயத்திற்கு பின்புறம் உள்ள பருத்தித்த...
நல்லூர் கந்தசுவாமி கோயில் வளாகத்தை சுற்றி சில மாற்றங்களுடன் இம்முறை வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் ஆலயத்திற்கு பின்புறம் உள்ள பருத்தித்துறை வீதி இரும்புத் தகடுகளால் முற்றாக அடைக்கப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் நாளையதினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.
கடந்த ஆண்டு நல்லூர் பெருந்திருவிழா நேரங்களில் அதிகரித்த பக்தர்களின் எண்ணிக்கை காரணமாக வீதித்தடைகளில் பல அசம்பாவிதங்கள் ஏற்பட்டு பக்தர்கள் பலர் மயக்கமுற்றதுடன் திருட்டுக்கும் வழிவகுத்தது.
இதன்போது ஒரு சிலர் வீதித்தடைகளை உடைத்து சென்றதுடன் பொலிஸார் தலையிட்டு வீதித்தடைகளை தளர்த்த நடவடிக்கை எடுத்திருந்தனர்.
ஆனால் இம்முறை மீண்டும் குறித்த விடயங்கள் எதுவும் கவனத்திற் கொள்ளாமல் பருத்தித்துறை வீதி இரும்புத் தகடுகளால் முற்றாக அடைக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் ஆலய முன் வீதியில் ஆலயத்திற்கு மக்கள் சுதந்திரமான முறையில் நடந்து செல்வதற்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் மாற்றுத் திறனாளிகள் பாதைகளை உபயோகிக்க முடியாதவாறும் இராணுவச் சோதனைச் சாவடிகள் போன்ற அமைப்பையுடைய புதிய வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் கிளம்பியுள்ளது.
பொதுமக்கள் அதிகளவில் வரும்போது வீதிகளில் இவ்வாறு தடைகளை ஏற்படுத்துவது தேவையற்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் முடிந்தவரை தடைகளை தளர்த்த யாழ் மாநகரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.