பௌத்த கலாச்சாரத்துக்கு சமனாக கிழக்கு மாகாண கலாச்சாரங்களையும் என்னால் பாதுகாக்க முடியும் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்...
பௌத்த கலாச்சாரத்துக்கு சமனாக கிழக்கு மாகாண கலாச்சாரங்களையும் என்னால் பாதுகாக்க முடியும் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதியொன்றில் நேற்று இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ஸவினை ஆதரிக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” எங்களது ஆட்சிக்காலத்தில் இப்பகுதியில் பாரிய அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. மத்தளை வரையில் கொண்டுசெல்லப்பட்ட அதிவேக நெடுஞ்சாலையினை மட்டக்களப்பு வரையில் கொண்டு வருவதற்கான திட்டம் எங்களால் கொண்டுவரப்பட்டது.
அந்த திட்டம் நல்லாட்சிக்காலத்தில் நிறுத்தப்பட்டது. எமது ஆட்சிக்காலத்தில் மீண்டும் அவை இணைக்கப்பட்டு அம்பாந்தோட்டைக்கும் மட்டக்களப்புக்கு இணைப்பு ஏற்படுத்தப்படும்.
மத்தள விமான நிலையத்திற்கும் மட்டக்களப்புக்கும் இணைப்பு ஏற்படுத்துவதன் மூலம் சுற்றுலாத்துறை வளர்ச்சியடைந்து இந்த பிரதேசம் மேலும் அபிவிருத்தி அடையும். எங்களுக்கு தேவை இந்த நாட்டினை அபிவிருத்தி பாதைக்கு கொண்டுசெல்வதேயாகும்.
இளைஞர்களுக்கு வளமான எதிர்காலம் ஒன்றை நாங்கள் உருவாக்க வேண்டும். இங்குள்ள தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் இங்குள்ள மக்களை பயன்படுத்தி தமது அரசியல் நோக்கத்தினை மட்டுமே அடைவதற்கு முயற்சிகளை முன்னெடுக்கின்றனர்.
இங்குள்ள அரசியல்வாதிகள் இன மத ரீதியான பணிகளே முன்னெடுத்து வருகின்றனர். ஏற்படவுள்ள மாற்றத்தினை பற்றி பிழையான தகவல்கள் வழங்க முடியாது. இவர்களுக்கான நல்ல ஒரு எதிர்காலத்தை என்னால் வழங்க முடியும் என உறுதி கூறுகின்றேன்.
வெளிநாடுகளுக்குச் செல்லும் இங்குள்ள இளைஞர்கள் ஏமாற்றப் படுகின்றனர். இதற்கான நிரந்தர தீர்வை என்னால் பெற்றுத் தர முடியும். கடந்த காலங்களில் மக்கள் கஷ்ட காலத்தை கடந்து வந்துள்ளதுடன் இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் காலங்களில் இனவாதம் மதவாதம் அதிகரிக்கின்றது. பிரிவினை உடைய அரசியலை நான் முன்னெடுப் பதில்லை நான் முடியுமானவற்றை மட்டுமே கூறுவேன்.இங்குள்ள உங்களுடைய திறமைகளை பாவித்து வெளிநாடுகளைப் போல் வியாபாரம் விவசாயம் என்பனவற்றில் முன்னேற்றமடைந்து தொழில்நுட்பத்துடன் கூறிய அறிவைப் பெற்று வீட்டுக்கு உதவுமாறு நான் அழைப்பு விடுகிறேன்.
இந்த தேர்தலில் வெற்றி பெற உதவுமாறு புதிய தலைவர்கள் உருவாக வேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன். மட்டக்களப்பில் இருந்தும் தலைவர்கள் உருவாக வேண்டும். அதற்கு நான் உதவி செய்வேன்” இவ்வாறு நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.