அனுரகுமார திசாநாயக்க தேர்தலுக்காக கோடி கோடியாக பணம் கொட்டுகிறார். அப்படியான அனுரகுமாரவால் கடந்த காலத்தில் ஏன் ஒரு சின்ன உதவியாவது மக்களுக்கு...
அனுரகுமார திசாநாயக்க தேர்தலுக்காக கோடி கோடியாக பணம் கொட்டுகிறார். அப்படியான அனுரகுமாரவால் கடந்த காலத்தில் ஏன் ஒரு சின்ன உதவியாவது மக்களுக்கு செய்ய முடியாமல் போனது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
வவுனியா, வைரவபுளியங்குளத்தில் இன்று (03) இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களின் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வௌியிட்ட றிசாட் எம்.பி, தமிழ், முஸ்லிம், சிங்களம் என எல்லா மக்களும் இருக்கிறீர்கள். எங்களுக்குள் பேதம் இல்லை. சஜித் பிரேமதாச அவர்களது ஆட்சியில் எல்லோரும் சேர்ந்துதான் பயணிக்கப் போகின்றோம். எங்களது சஜித் பிரேமதாச அவர்கள் களவெடுக்காதவர். பொய் சொல்லாதவர். களவெடுப்பவர்களை பாதுகாக்காதவர். நாட்டின் மீது பாசம் உள்ளவர். இரவு பகலாக உழைப்பவர். ஏழைகள், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், மாணவர் சமூகம் என எல்லோர் மீதும் இரக்கம் கொண்டவர்.
இவருடன் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்களை தனித்தனியாக சிந்தித்து பாருங்கள். ரணில் விக்கிரமசிங்க ஆறு முறை பிரதமராக, ஒரு முறை ஜனாதிபதியாக இருந்தவர். பல முறை எதிர்கட்சி தலைவராக இருந்திருக்கிறார். பாராளுமன்றத்தில் பல பதவிகளில் அலங்கரித்தவர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
எதிர்கட்சி தலைவராக சஜித் பிரேமதாச அவர்கள் இருந்த போது ஒரு நாளும் அவர் வீட்டில் தூங்கிக் கொண்டு இருக்கவில்லை. ஒவ்வொரு நாளும் பாராளுமன்றத்தில் எழுந்து நின்று மக்களது பிரச்சனைகளை சுட்டிக் காட்டி அரசாங்கத்தை தட்டிக் கேட்ட ஒரே தலைவர் இவர். சுதந்திரத்திற்கு பின்னர் சஜித் பிரமேதாச மட்டும் தான் எதிர்கட்சி தலைவராக இருந்து பணம் சேர்ந்து கிராமம் கிராமமாக சென்று மாணவர்களது குறை தீர்த்த வரலாறு உண்டு.
அமைச்சரவையில் இருந்து மக்களை கொலை செய்து அந்த இலாபத்தை தமது பைகளுக்குள் போட்டவர்களும் இருக்கிறார்கள். இன்னும் சிறையில் இருக்கிறார்கள். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்த போது இந்த ஜனாதிபதியும், ஜனாதிபதியுடன் இருக்கின்ற இந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்றுமே செய்யாத ஒரு இராஜாங்கமும், இன்னும் பலரும் சேர்ந்து கெஹெலிய ரம்புக்வெல்லவை காப்பாற்ற கை உயர்த்தினார்கள். புற்று நோய்க்கு வழங்கும் ஊசி மருந்துக்குள் மருந்தை போடாமல் இந்தியாவில் இருந்து கொண்டு வந்தோம் என்று பொய் சொல்லி அதற்குள் தண்ணீரை ஊற்றி அதனை புற்று நோயாளர்களுக்கு செலுத்தி பலரையும் கொலை செய்த பெரும் பாவிதான் கெஹெலிய ரம்புக்வெல்ல. அதானால் தான் அவர் சிறையில் உள்ளார். ஆனால் சஜித் பிரேமதாச 300 இற்கு மேற்பட்ட வைத்தியசாலைகளுக்கு சென்று நோயாளர்களுக்கு தேவையான விடயங்களை செய்து அவர்களது உயிர்களை பாதுகாக்க உதவியவர்.
சஜித் பிரேமதாசவினால் எதிர்கட்சியில் இருந்து 400 பாடசாலைகளுக்கு ஸ்மாட் வகுப்பறைகளும், 300 வைத்தியசாலைகளுக்கு உதவிகளும் வழங்க முடியும் என்றால் அனுரகுமார திசாநாயக்கவுக்கு ஏன் வழங்க முடியாது. மக்கள் மீது உண்மையான பாசம் இருந்தால் ஏன் செய்யவில்லை. இன்று அவர்களது தேர்தல் மேடைகளை பாருங்கள். கோடி கோடியாக பணம் கொட்டுகிறார்கள். அப்படியான அனுரகுமாரவால் ஏன் ஒரு சின்ன உதவியாவது மக்களுக்கு செய்ய முடியாமல் போனது. அனுரகுமார திசாநாயக்க படித்த பாடசாலைக்கு சஜித் பிரேமதாசதான் ஸ்மாட் வகுப்பறையும் வழங்கி, பேருந்தும் வழங்கிய வரலாறு இருக்கிறது. படித்த வித்துவான்கள் சிலர் அவருக்கு பின்னால் திரிகிறார்கள். சீனாவைத் திரும்பிப் பாருங்கள் அங்கு முஸ்லிம்கள் நோன்பு பிடிக்க முடிகிறதா, தொப்பி போட முடிகிறதா, சுதந்திரமாக நடமாட முடிகிறதா. அதே நிலை இந்த நாட்டிற்கு தேவையா?
அன்று கோட்டாபய முஸ்லிம்களின் வாக்கை கொள்ளையடிக்க அலி சப்ரி என்ற ஒருவரை கொண்டு திரிந்தார். அவர் கோட்டபாயவை புகழ்ந்து வாக்கை கொள்ளையடித்தார். கடைசியில் எமது மையத்துக்களை எரித்துக் கொண்டிருந்த போதும், எம்மை சிறைக்குள் அடைத்த போதும் அமைச்சுப் பதவியை அலி சப்ரிக்கு கோட்டாபய வழங்கினார்.
அது போலவே அனுரவும் தொப்பி போட்ட முஸ்லிம் மௌலவி ஒருவரை கூட்டிக் கொண்டு திரிந்து வாக்கை கொள்ளையடிக்கப் பார்க்கிறார். அவர் முஸ்லிம் இளைஞர்களை பிழையாக வழிநடத்த முயல்கிறார். முஸ்லிம் தலைமைகளைப் பற்றி பேசுகிறார். நாம் என்ன செய்தோம் என்று அந்த மௌலவி கேட்கின்றார். நாம் என்ன செய்தோம் என்பதை எமது மக்களிடம் கேட்டுப் பாருங்கள். பல அபிவிருத்திகளையும், மீள்குடியேற்றத்தையும் செய்ததுடன் வேலைவாய்ப்புக்களையும் வழங்கியுள்ளோம்.
எமது வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் ஒருவரை ஒருவர் அரவணைக்கும் வகையில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தியுள்ளோம். ஆகவே பொய்களை நம்பாதீர்கள்.
அதேபோல், ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு பணத்திற்காக சோரம் போய் விடாதீர்கள். இந்த மாவட்டத்தில் 4 வருடமாக இராஜாங்க அமைச்சராக இருப்பவர் மக்களுக்கு ஒன்றுமே செய்யாது சோற்று பொதியும் கொடுத்து 2000 ரூபா பணமும் கொடுத்து மக்களை அழைத்து கொண்டு திரிகிறார். தருவதை வாங்குங்கள். வாக்கை சஜித் பிரேமதாசவுக்கு போடுங்கள்.
தபால் மூல வாக்களிக்கும் போது அரச உத்தியோகத்தர்கள் சிந்தித்து வாக்களியுங்கள். உங்களுக்கான சம்பள உயர்வு, பதவி உயர்வு எல்லாம் எமது ஆட்சியில் நடைபெறும். எதிர்வரும் 21 ஆம் திகதி சஜித் பிரேமதாச அவர்களுக்கு வாக்களித்து இந்த நாட்டை மீட்டு எடுக்க அனைவரும் அணிதிரள்வோம் எனத் தெரிவித்தார்.