பெருந்தோட்ட மக்களுக்கு சகல சலுகைகளையும் வழங்குவதே தமது நோக்கமாகும் எனவும் தோட்ட மக்களுக்கு லயன்களுக்கு பதிலாக கிராமங்களில் வாழும் உரிமையை வ...
பெருந்தோட்ட மக்களுக்கு சகல சலுகைகளையும் வழங்குவதே தமது நோக்கமாகும் எனவும் தோட்ட மக்களுக்கு லயன்களுக்கு பதிலாக கிராமங்களில் வாழும் உரிமையை வழங்கி சட்டபூர்வமான காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நுவரெலியாவில் இன்று (15) பிற்பகல் இடம்பெற்ற 'ரணில் இயலும்' வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் தெரிவித்தார்.
பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் தலைவர்களுக்கு நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க இடமளிக்க வேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, படிப்படியாக மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, அடுத்த 5 வருடங்களில் இந்த நாட்டில் பாரிய பொருளாதார, அரசியல், சமூக புரட்சியை ஏற்படுத்துவதாகவும் உறுதியளித்தார்.
சஜித்தும் அநுரவும் மாற்றங்களை செய்வதாகச் சொன்னாலும், முகங்களை மாற்றும் மாற்றம் நாட்டுக்கு அவசியமற்றதெனவும், மக்களைப் பற்றி சிந்திப்பவர்களாக இருந்தால் வரிசையில் நின்ற மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான மாற்றத்தில் அன்றே இணைந்திருப்பார்கள் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஐ.எம்.எப் உடன் பேசி, வரிச்சுமையை குறைப்பதாக சஜித் போலி வாக்குறுதிகளை வழங்கினாலும், இதுவரையில் எவரும் ஐ.எம்.எப் உடன் பேசவில்லையென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் மறுசீரமைப்புக்களால் ஏற்பட்டிருக்கும் வெற்றிகளைப் பாதுகாக்க வேண்டுமென ஐ.எம்.எப் வலியுறுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.