தேர்தல் தினத்தன்று ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்றும், சகல பாதுகாப்பு நடவடிக்கைகளும் அமுலில் உள்ளதாகவும்,...
தேர்தல் தினத்தன்று ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்றும், சகல பாதுகாப்பு நடவடிக்கைகளும் அமுலில் உள்ளதாகவும், தேவைப்பட்டால் ஆயுதப்படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தேர்தல் காலத்தில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் எனவும் தேவைப்பட்டால் பொலிஸிற்கு ஆதரவாக முப்படையினரும் தயார் நிலையில் உள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் தீர்மானம் ஜனாதிபதியிடம் மாத்திரமே உள்ளது எனவும் ஜனாதிபதி தேர்தல் பாதுகாப்பு தொடர்பில் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாரிய அசம்பாவிதங்கள் எதுவுமின்றி இதுவரை நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட தேர்தல் பேரணிகள் நடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸார் தொடர்ந்தும் தமது முயற்சிகளை மேற்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த பின்னர் 48 மணித்தியாலங்கள் சமூக வலைத்தளங்களை முடக்க தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைகின்றது.
இந்நிலையில், 19 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் எவ்வித தேர்தல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கபடாத நிலையில் சமூக ஊடகங்களில் சேறு பூசுவதை நிறுத்துவதற்காக குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் சமூக ஊடக வலையமைப்பை சேர்ந்த நிறுவனங்களுடன் இணைந்து இந்தத் திட்டத்தை கவனம் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் பிரச்சாரம் செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ள போதிலும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமூக ஊடக குழுக்களுடன் கலந்தாலோசித்த பின்னர் அமைதியான காலத்தில் தேர்தல் பிரச்சாரம் மற்றும் அவதூறு பரப்புரைகளை நிறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும் என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.