பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என தீர்ப்பளிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவ...
பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என தீர்ப்பளிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிவில் அமைப்பு செயற்பாட்டாளரும் "நாம் ஸ்ரீ லங்கா தேசிய அமைப்பின்" ஒருங்கிணைப்பாளர் எச். எம். பிரியந்த ஹேரத்தினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் சார்பில் சட்டமா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 10ஆவது பிரிவின்படி, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான திகதி அக்டோபர் 04 முதல் அக்டோபர் 11 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் சட்டத்தின்படி, வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நாளிலிருந்து ஐந்து வாரங்களுக்கு குறையாமலும், ஏழு வாரங்களுக்கு மிகாமலும் தேர்தல் நடைபெறும் திகதி நிர்ணயிக்கப்பட வேண்டும்.
அதன்படி, வேட்புமனு ஏற்கும் பணி முடிவடைந்த அக்டோபர் 11ஆம் திகதி முதல் ஐந்து வார கால அவகாசம் நவம்பர் 15ஆம் திகதியும், ஏழு வார கால அவகாசம் நவம்பர் 29ஆம் திகதியும் நிறைவடையும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தற்போது பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நவம்பர் 14ஆம் திகதி, அந்த சட்டக் காலப்பகுதியில் உள்ளடக்கப்படாததால், அன்றைய தினம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது சட்டத்திற்கு முரணானது என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த தவறு குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுவில் கூறப்பட்டுள்ளது.
மக்களின் இறையாண்மை மீறப்படுவதாகவும், அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதாகவும் தீர்ப்பளிக்க வேண்டும் என மனுதாரர் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.