இலங்கை - இந்திய கூட்டு முயற்சியில் முன்னெடுக்கப்படும் திரைப்படத்திற்காக 2 கோடி 30 இலட்சம் ரூபாய் ரயில் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ...
இலங்கை - இந்திய கூட்டு முயற்சியில் முன்னெடுக்கப்படும் திரைப்படத்திற்காக 2 கோடி 30 இலட்சம் ரூபாய் ரயில் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனை, ரயில் திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே தெரிவித்துள்ளார்.
திரைப்படத்துக்கான படப்பிடிப்பு நடவடிகைகளுக்காக புதன்கிழமையிலிருந்து (09) எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை ஒன்பது வளைவுகள் பாலத்தினூடாக, கொழும்பு மற்றும் கண்டியில் இருந்து வரும் மலையக புகையிரத சேவைகள் எல்ல அல்லது பண்டாரவளையில் நிறுத்தப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நாளாந்த புகையிரத சேவை பதுளை வரை பயணிக்காது. அதேபோன்று, எதிர் திசையில் செல்லும் புகையிரதங்கள் இக்காலப்பகுதியில் பதுளைக்குப் பதிலாக எல்ல அல்லது பண்டாரவளையில் இருந்து புறப்படும். இந்த அறிவித்தலின் படி திட்டமிடுமாறு பயணிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மலைநாட்டுத் தொடரூந்து மார்க்கத்தில் எல்ல மற்றும் தெமோதரை தொடரூந்து நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள 9 வளைவு பாலத்தில் இலங்கை - இந்தியக் கூட்டு முயற்சியில் முன்னெடுக்கப்படும் திரைப்பட ஒளிப்பதிவு நடவடிக்கைகளுக்காக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் போக்குவரத்து அமைச்சின் அனுமதியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.