75 ஆண்டுகளாக தமிழ் மக்களை உசுப்பேத்தி "தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" என்று சொல்லி பாராளுமன்றம் செல்கின்றார்கள். இவர...
75 ஆண்டுகளாக தமிழ் மக்களை உசுப்பேத்தி "தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" என்று சொல்லி பாராளுமன்றம் செல்கின்றார்கள். இவர்களால் நமக்கு என்ன பயன் கிடைத்தது என ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் வேட்பாளர் சுதர்சிங் விஜய்காந்த் கேள்வி எழுப்பினார்.
யாழ்ப்பாணம் நல்லூர் தொகுதியில் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டு பொதுமக்களிடையே உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
வேட்பாளர் பட்டியலில் பாட்டாளி சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் கடற்றொழில் சமூகத்தை சேர்ந்தவர்களையும் நியமித்திருப்பார்கள். ஆனாலும் அவர்களது வாக்குகளை திருடிக் கொண்டு பாராளுமன்றம் சொல்லப்போவது என்னவோ மேட்டுக்குடியை சேர்ந்தவர்களே.
கூலி வேலை செய்கின்ற எவருமே இன்று வரை பாராளுமன்றம் சென்றதில்லை.
கடந்த காலத்தில் றெமீடியஸை பயன்படுத்தி சுமந்திரன் பாராளுமன்றம் சென்றார். அதற்கு பின்னர் ஆனோல்டின் வாக்குகளை பயன்படுத்தி சிறீதரன் பாராளுமன்றம் சென்றார். தற்போது மீண்டும் ஆனோல்டை பயன்படுத்தி எமது சமூகத்தின் வாக்குகளை திருடி இன்னொருவர் பாராளுமன்றம் செல்ல முயல்கின்றார்.
கடந்த காலத்தில் சொலமன் சிறில் மாத்திரமே கடற்றொழிலாளர்களின் பிரதிநிதியாக மூன்று மாதம் செயற்ப்பட்டிருந்தார்
அரசியல் கட்சித் தலைவர்கள் எமது மக்களின் கஷ்டங்கள் சோகங்கள் தெரியாமல் வீர வசனங்கள் கதைத்து வாக்குகளை திருடி செல்வார்கள்.
இம்முறை பாட்டாளி மக்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் சமூகத்தில் இருந்து களமிறங்கியுள்ள ஞானப்பிரகாசம் சுலக்சன் தலைமையிலான ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணிக்கு பொதுமக்கள் வாக்களித்து பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என்றார்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி மூக்கு கண்ணாடி சின்னத்தில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகின்றது.