பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 21 நாட்களுக்குள், அதில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தங்களது செலவு அறிக்கையைத் ...
பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 21 நாட்களுக்குள், அதில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தங்களது செலவு அறிக்கையைத் தேர்தல்கள் செயலகத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.
உரிய நேரத்தில் செலவு அறிக்கையைச் சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஒரு வாக்காளருக்கு வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய தொகை அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த 15 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டது.
இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் தேசியப் பட்டியல் வேட்பாளர்கள் உட்பட 225 நாடாளுமன்ற ஆசனங்களுக்காக 49 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 284 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 8, 888 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
வேட்பாளர் செலவின வர்த்தமானி அறிவித்தலில் வேட்பாளர் ஒருவர் அதிகளவு செலவு செய்யக்கூடிய மாவட்டம் கொழும்பு எனவும் அங்கு வாக்காளர் ஒருவருக்கான செலவிடக்கூடிய தொகை 114 ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு வேட்பாளர் குறைந்தளவு செலவு செய்யக்கூடிய மாவட்டமாக வன்னி தேர்தல் மாவட்டம் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், அந்த மாவட்டத்தில் வாக்காளர் ஒருவருக்குச் செலவிடக்கூடிய தொகை 82 ரூபாவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்தின் சனத் தொகை, மக்கள் தொகை அடர்த்தி மற்றும் நிலப்பரப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.