இலங்கையில் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் இருந்து வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகத்தை விரைவுபடுத்த முடியும் என எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப...
இலங்கையில் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் இருந்து வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகத்தை விரைவுபடுத்த முடியும் என எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் 7 இலட்சத்திற்கும் அதிகமான வெற்று கடவுச்சீட்டுக்கள் கிடைக்கப்பெற உள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான முறையான இணையவழி முறைமை தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் தினத்தில் இந்த முறை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கான குத்தகை வழங்கப்பட்ட வெளிநாட்டு நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் படி, 'P' பிரிவின் கீழ் 50,000 வெற்று கடவுச்சீட்டுகள் தற்போது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு கிடைத்துள்ளன.
இந்தத் தொகைக்கு மேலதிகமாக, நவம்பர் இறுதியில் மேலும் 100,000 வெற்று கடவுச்சீட்டுக்களும், டிசம்பரில் 150,000 வெற்று கடவுச்சீட்டுகளுமாக 750,000 வெற்று கடவுச்சீட்டுக்கள் தொகை கிடைக்கப்பெறவுள்ளது.
அதே நேரத்தில், மற்றொரு தொகுதி கடவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்வதற்கான பணிகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் தற்போது நாளொன்றுக்கு சுமார் 1,600 கடவுச்சீட்டுகள் விண்ணப்பதாரிகளுக்கு வழங்கப்படுகின்றன.
அதன்படி, மேல் குறிப்பிட்ட கையிருப்பு கிடைக்கப்பெற்றதுடன், டிசம்பர் மாதம் முதல் இந்த தொகையை படிப்படியாக அதிகரித்து விண்ணப்பதாரர்களின் கோரிக்கைக்கு ஏற்ப கடவுச்சீட்டுக்களை வெளியிட முடியும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.