எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு மக்கள் வழங்கப்போகும் ஆணைதான், எமது மக்கள் விரும்பும் வகையிலான கட்சியி...
எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு மக்கள் வழங்கப்போகும் ஆணைதான், எமது மக்கள் விரும்பும் வகையிலான கட்சியின் மீளெழுச்சிக்கு வித்திடும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளரான சிவஞானம் சிறீதரனை ஆதரித்து, நேற்றைய தினம் (06) வன்னேரிக்குளம் வட்டாரத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இதுவரை காலமும் தமிழ் மக்களின் அரசியல் வெறுமையின் வடிகாலாக, தமிழ்த் தேசிய அடையாளமாக இலங்கைத் தமிழரசுக் கட்சி இருந்து வந்ததைப் போலவே, உட்கட்சி விரிசல்களை சீரமைத்து, எமது மக்களின் அரசியல் அடையாளமாக கட்சியை மீளக்கட்டியெழுப்பும் காலப் பணி எமக்கிருப்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
அத்தகைய பணிகளை நாம் ஆற்றுவதற்கு, எதிர்வரும் தேர்தலில் மக்கள் எமக்கு வழங்கப்போகும் ஆணையே உந்துசக்தியாக மாறும். இதனை உணர்ந்த எமது மக்களின் தெரிவுகள் அரசியல் அறம் சார்ந்தும், தமிழ்த் தேசியக் கொள்கை சார்ந்துமே அமையும் – என்றார்.