இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது 92 ஆவது வயதில் இன்று காலமானார். மன்மோகன் சிங் உயிரிழந்த செய்தியை காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்...
இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது 92 ஆவது வயதில் இன்று காலமானார்.
மன்மோகன் சிங் உயிரிழந்த செய்தியை காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா உறுதிப்படுத்தினார்.
2004 முதல் 2014 வரையில் இரு முறை பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்மோகன் சிங் மறைந்த செய்தி அறிந்தவுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி அவரது மகள் பிரியங்கா காந்தி ஆகியோா் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்தனா்.
கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் 2014 -ஆம் ஆண்டு வரை இந்தியாவின் 14-ஆவது பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்தாா். 1991-ஆம் ஆண்டுமுதல் மாநிலங்களவை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டு வந்த அவா் நிகழாண்டு ஏப்ரல் மாதத்தில் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாா்.
நாட்டின் பொருளாதார சீா்திருத்தவாதிகளில் ஒருவராக அறியப்படும் மன்மோகன் சிங் ஒருங்கிணைந்த பஞ்சாப் மாகாணத்தில் கடந்த 1932, செப்டம்பா் 16-ஆம் தேதி பிறந்தாா். 1948-ஆம் ஆண்டு பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் உயா்நிலைக் கல்வியை நிறைவு செய்த அவா் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பட்டப்படிப்பை முடித்தாா்.
1971-ஆம் ஆண்டு மத்திய வா்த்தக அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகராகவும், 1972-இல் மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகராக அவா் நியமிக்கப்பட்டாா். பின்னா் நிதி அமைச்சக செயலா் உள்பட அரசின் பல்வேறு உயா்பதவிகளை வகித்தாா்.
1980 முதல் 1982 வரை தேசிய திட்டக்குழுவின் உறுப்பினராக பதவி வகித்தாா். 1982 முதல் 1985 வரை ரிசா்வ் வங்கியின் ஆளுநராக அவா் பதவி வகித்தபோது வங்கித் துறையில் பல்வேறு சீா்திருத்தங்களை மேற்கொண்டாா். இந்திய ரிசா்வ் வங்கி சட்டத்தில் புதிய அத்தியாயத்தை அவா் அறிமுகப்படுத்தியதோடு நகா்ப்புற வங்கி துறையையும் அவா் உருவாக்கினாா்.
1985 முதல் 1987 வரை திட்டக்குழுவின் துணைத் தலைவராக பொறுப்பு வகித்தாா். 1987 முதல் 1990 வரை ஜெனீவாவில் உள்ள தெற்கு ஆணையத்தின் செயலராக இருந்தாா்.
1991-ஆம் ஆண்டு பிரதமா் நரசிம்மராவின் அமைச்சரவையில் நிதியமைச்சராக அவா் பதவியேற்றபோது நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தது. அப்போது நாட்டின் புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தியதில் அவரது பங்களிப்பு இன்றியமையாததாக அமைந்தது.
1998 முதல் 2004 வரை எதிா்க்கட்சித் தலைவராக இருந்த அவா் 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வென்றதையடுத்து பிரதமராக அறிவிக்கப்பட்டாா்.
2009-இல் அந்தக் கூட்டணி மீண்டும் வென்றதையடுத்து, இரண்டாவது முறையாக அவா் பிரதமரானாா். அவருடைய முதல் பதவி காலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (100 நாள் வேலை திட்டம்), தகவல் அறியும் உரிமைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டன. இரண்டாவது பதவி காலத்தில், அனைவருக்கும் கட்டாய கல்வி சட்டம், மானிய விலையில் உணவு தானியங்களை வழங்கும் நோக்கில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.
சிறந்த நிர்வாகி
மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மன்மோகன் சிங் தனது ஓய்வை அறிவித்திருந்தார்.
இந்தியாவின் பிரதமராக 10 ஆண்டுகாலம் இருந்தவர். 2004 முதல் 2014 வரை நாட்டின் 13வது பிரதமராக ஆட்சி செய்தார்.
1991 - 96 வரை முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் தலைமையிலான ஆட்சியில், நிதித் துறை அமைச்சராக சிறப்பாக செயல்பட்டவர்.
கல்வியாலும், நிதித் துறை நிர்வாக அனுபவத்தாலும் பொருளாதாரவியல் வல்லுநரான மன்மோகன் சிங், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் தொடக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தார்.
சுமார் 33 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.
பொருளாதார சீர்திருத்தம்
நவீன இந்தியாவின் பொருளாதார சிற்பி என பலரால் போற்றப்படுபவர் மன்மோகன் சிங். பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் பொருளாதார தாரளமயமாக்கும் சீர்திருத்தங்களைச் செய்தவர்.
திட்ட ஆணைய துணைத் தலைவர், ரிசர்வ் வங்கி ஆளுநர் என பல பொறுப்புகளை வகித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம், வாட் வரி, ஊரக வேலை திட்டம், அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்டவை மன்மோகன் சிங்கால் கொண்டுவரப்பட்டது.
மன்மோகன் சிங்கின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கள் தெரிவித்துள்ளனர்.
அவரின் மறைவையொட்டி, நாடு முழுவதும் அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 7 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது.