கொழும்பு ரோயல் கல்லூரிக்கும் கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரிக்கும் இடையிலான 146வது நீலச் சமர் கிரிக்கெட் போட்டியில் புனித தோமஸ் கல்லூரி இன்று ...
கொழும்பு ரோயல் கல்லூரிக்கும் கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரிக்கும் இடையிலான 146வது நீலச் சமர் கிரிக்கெட் போட்டியில் புனித தோமஸ் கல்லூரி இன்று (08) 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
இலங்கையின் பாடசாலை கிரிக்கெட் வரலாற்றில் மிகப் பழமையான கிரிக்கெட் போட்டியான நீலச்சமர் கொழும்பில் உள்ள SSC மைதானத்தில் மூன்று நாட்களாக இடம்பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய கொழும்பு ரோயல் கல்லூரி, 7 விக்கெட் இழப்புக்கு 319 ஓட்டங்களை எடுத்த நிலையில், தனது முதல் இன்னிங்ஸை இடைநிறுத்த முடிவு செய்தது.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய புனித தோமஸ் கல்லூரி, தனது முதல் இன்னிங்ஸில் 302 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
பின்னர் 17 ஓட்டங்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய கொழும்பு ரோயல் கல்லூரி அணி, 8 விக்கெட் இழப்புக்கு 215 ஓட்டங்களை எடுத்த நிலையில் மீண்டும் ஆட்டத்தை இடைநிறுத்தியது.
இதற்கமைய கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரிக்கு 233 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய புனித தோமஸ் கல்லூரி, மூன்றாம் நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.