செம்மணி மனித புதைகுழியில் அகழ்வாய்வு ஆரம்பிக்கப்பட்ட பகுதி முதலாவது இடமாகவும் சந்தேகத்துக்கிடமான பகுதியாக அகழப்படும் பகுதியில் மூன்று மனித எ...
செம்மணி மனித புதைகுழியில் அகழ்வாய்வு ஆரம்பிக்கப்பட்ட பகுதி முதலாவது இடமாகவும் சந்தேகத்துக்கிடமான பகுதியாக அகழப்படும் பகுதியில் மூன்று மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அது அகழ்வாராய்ச்சிக்கான இரண்டாவது பகுதியாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.
செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்டத்தின் பதின்மூன்றாம் நாள் நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது.
அகழ்வாய்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், செம்மணி மனித புதைகுழி வழக்கில் 56 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் 50 முழுமையான என்புகள் இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சந்தேகத்துக்கு இடமான பகுதியாக தொல்லியல் பேராசிரியரால் அடையாளம் காணப்பட்ட பகுதி அகழ்வு ஆராய்ச்சி பணிக்குரிய இரண்டாவது பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
ஏற்கனவே அகழ்வாய்வு ஆரம்பிக்கப்பட்ட பகுதி முதலாவது இடமாகவும் சந்தேகத்துக்கிடமான பகுதியாக அகழப்படும் பகுதியில் மூன்று மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அது அகழ்வாராய்ச்சிக்கான இரண்டாவது பகுதியாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அடையாளப்படுத்தப்பட்ட மூன்று மனித எலும்புக்கூடுகளும் துப்புரவாக்கப்பட்டு நாளைய தினம் இலக்கமிடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மனித புதைகுழியில் மனித எலும்புடன் சேர்ந்த துணிகள் சப்பாத்து போன்ற பொருட்கள் அடையாளப்படுத்தப்பட்டு வைத்திருக்கப்பட்டுள்ளது. அது இது வரை அகழ்ந்தெடுக்கப்படவில்லை. அநேகமாக இன்று அது அகழ்ந்தெடுக்கப்படலாம்.
மனித எலும்புக்கூடுகளின் ஆய்வு தொடர்பான விடயத்தில் நான் கருத்துச் சொல்ல முடியாது. ஏனென்றால் அது தொடர்பில் நிபுணர்கள் மாத்திரமே கருத்தை தெரிவிக்க முடியும். சட்ட ரீதியான விடயங்களை அதாவது எலும்பு கூடுகளின் கட்டுக்காவல் தொடர்பான விடயங்களையே மாத்திரமே நான் கூறமுடியும்.
இதுவரைக்கும் அடையாளப்படுத்தப்பட்ட பொருட்கள் தொடர்பாக எந்த ஒரு பாதிக்கப்பட்ட தரப்பினரும் நம்மை தொடர்பு கொண்டு கருத்து தெரிவிக்கவில்லை – என்றார்.



