யாழ்ப்பாணத்தில் உள்ளுராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியம் மற்றும் குடிசார் அமைப்புகளின் சம்மேளனத்தின் செயற்பாடுகள் மற்றும் நிறுவனமயப்படுத...
யாழ்ப்பாணத்தில் உள்ளுராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியம் மற்றும் குடிசார் அமைப்புகளின் சம்மேளனத்தின் செயற்பாடுகள் மற்றும் நிறுவனமயப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்பான அரைநாள் வழிகாட்டும் செயலமர்வு, ஐரோப்பிய ஒன்றிய நிதி அனுசரணையுடன் கிறிசலிஸ் நிறுவனத்தின் “பெண்கள் தலைமையிலான ஒன்றிணைந்த மன்றங்களினூடாக அமைதி மற்றும் உள்ளடங்கலான தாங்குதிறன் மிக்க சமூகங்களை மேம்படுத்துதல்” (BRIDGE) திட்டத்தின் ஊடாக, 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) யாழ் மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இச்செயலமர்வில் கிறிசலிஸ் நிறுவனத்தின் வடமாகாண திட்டப் பிராந்திய முகாமையாளர் திரு. ம. பிரபாகரன், யாழ் மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திரு. P. பார்த்தீபன் மற்றும் சிரேஷ்ட திட்ட இணைப்பாளர் திரு. பிரகாஷ் ஆகியோர் பங்கேற்று வழிநடத்தினர்.
இச்செயலமர்வின் முக்கிய நோக்கம், யாழ் மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களில் தெரிவுசெய்யப்பட்டுள்ள பெண் உறுப்பினர்களுக்கு உள்ளுராட்சி நிர்வாகம் குறித்த அடிப்படை அறிவினை வழங்குவதும்,அவர்களின் ஒன்றியங்களை நிறுவனமயப்படுத்தும் வழிகாட்டுதலை வழங்குவதும் , மேலும் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் முடிவெடுக்கும் ஆற்றலையும் வலுப்படுத்தும் வலைப்பின்னலை உருவாக்குவதுமாகும்.
செயலமர்வில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 17 உள்ளுராட்சி மன்றங்களின் பெண் உறுப்பினர்கள், குடிசார் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் உள்ளுராட்சி பெண் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்வில் அனுபவப் பகிர்வும் குழுவாரியான கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.
வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டத்தின் கீழ் செயலமர்வுகள் நடைமுறையில் உள்ளன. அதன்படி, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இச்செயலமர்வு, மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நடைபெற்ற அமர்வுகளுக்கு அடுத்ததாக மூன்றாவது செயலமர்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது





