இலங்கைக்கான மாலைத்தீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோருக்...
இலங்கைக்கான மாலைத்தீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாசவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்.
அடுத்த மாதம் மாலைத்தீவு ஜனாதிபதி இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயம் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அந்த விஜயத்திற்கு இணையாக இரு நாடுகளுக்கும் இடையில் கடற்றொழில் துறையில் ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்பட்டது.
இரு நாடுகளினதும் கடற்றொழில் துறைசார் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர், மாலைதீவின் புதிய மீன் வளத்தையும் இலங்கையின் முன்னேற்றமடைந்துள்ள Canned Fish தொழிற்துறையை ஒன்றிணைப்பதன் மூலம் புதிய உற்பத்திப் பொருட்களை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்துச் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, மாலைதீவு சந்தையை இலக்காகக் கொண்டு இலங்கையில் மீன் பதப்படுத்துதல் மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட மீன் உற்பத்திகளை மேற்கொள்வது குறித்து இரு தரப்பினரும் தமது விசேட ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.
தற்போது “Made in Sri Lanka" என்ற முத்திரையுடன் இலங்கையின் சில உற்பத்திப் பொருட்கள் டுபாய் சந்தை ஊடாக மாலைத்தீவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இவ்வாறான உற்பத்திகளை இடைத்தரகர்கள் இன்றி இலங்கையிலிருந்து நேரடியாக மாலைத்தீவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான முறையான வேலைத்திட்டமொன்றை வகுப்பது குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இதன் மூலம் இரு நாடுகளுக்கும் பாரிய பொருளாதார நன்மைகள் கிடைக்கும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.



