திரையுலகில் இசையமைப்பாளராக வலம்வந்து கொண்டிருந்த எனக்கு நாயகன் அந்தஸ்து கொடுத்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் உங்கள் அனைவருக்கும்...
திரையுலகில் இசையமைப்பாளராக வலம்வந்து கொண்டிருந்த எனக்கு நாயகன் அந்தஸ்து கொடுத்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி.
இயக்குநர் பாலா இயக்கத்தில் ஜோதிகா மற்றும் நான் நடித்து வெளியாகியுள்ள 'நாச்சியார்' படத்துக்கு நீங்கள் அளித்த அமோக ஆதரவிற்கும் வரவேற்புக்கும் மிக்க நன்றி.
நாச்சியார் திரைப்படம் விமர்சகர்களிடமும், மக்களிடமும், திரையுலக பிரமுகர்களிடம் எனக்கு நல்ல பெயர் பெற்றுத் தந்துள்ளது.
எப்போதுமே பாலா சார் படத்தில் நடிப்பது என்பது பல நடிகர்களின் கனவு. 'நாச்சியார்' படத்துக்காக என்னை அணுகிய போது கூட, இசையமைக்கத் தான் அழைக்கிறார் என்று தான் நினைத்தேன். 'நீ தான் நடிக்கிற' என்ற பாலா சார் சொன்ன போது, நான் அடைந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் எழுதிவிட முடியாது.
'நாச்சியார்' படத்தில் என் நடிப்பைப் பார்த்து அனைவருமே 'நல்ல நடிகன்' என்று தெரிவித்திருக்கிறார்கள். அதற்குக் காரணம் பாலா சார் மட்டுமே. அவர் காட்சியை எப்படி உள்வாங்கி நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். என் நடிப்பில் புதிய பரிமாணத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார் பாலா சார். அவருக்கு என மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதில் என்னுடன் நடித்த ஜோதிகா மேடம், இவானா ஆகியோருக்கும் நன்றி.
இளையராஜா சாருடைய இசையில் நடித்தது, தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு என ஒவ்வொன்றுமே படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது.
'நாச்சியார்' படத்தில் நடித்த அனைவருக்குமே திரையுலகில் ஒரு புதிய பயணத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார் பாலா சார். ஒரு வகுப்பு முடிந்து அடுத்த வகுப்பிற்குச் செல்லும் போது மாணவர்களிடையே ஒரு புதிய உத்வேகம் கலந்த சந்தோஷம் இருக்கும். அதே சந்தோஷத்துடன் தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறேன். 'நாச்சியார்' படம் கொடுத்த நம்பிக்கையில் என் நடிப்பு பயணத்தின் அடுத்த அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கிறேன்.