அம்பாறை நகரில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசல், முஸ்லிம்களுக்கு சொந்தமான வியாபார நிலையங்கள் மற்றும் வாகனங்கள் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம...
அம்பாறை நகரில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசல், முஸ்லிம்களுக்கு சொந்தமான வியாபார நிலையங்கள் மற்றும் வாகனங்கள் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டம், ஒழுங்கு அமைச்சரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவுக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்திலலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,
“சிறுபான்மை மக்களின் ஆதரவுடன் ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ள இந்த அரசு சிறுபான்மை மக்களின் உரிமை – பாதுகாப்பு விடயத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
நல்லாட்சி அரசிலும் இவ்வாறாக முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் தொடர்ந்து செல்வதானது முஸ்லிம்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இதற்கு நிரந்தர தீர்வொன்றினைப் பெற்றுக்கொள்ள முஸ்லிம் தலைமைகள் அனைவரும் கட்சி பேதங்களை மறந்து ஒன்றுசேர்ந்து அரசுக்கு கடுமையைன அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்.
அம்பாறையில் நடந்துள்ள சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இது முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதிகளால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு சம்பவமாகும்.
வெளியூர்களில் இருந்து வந்த கும்பலொன்றினாலேயே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதன்போது பொலிஸார் மந்த கதியில் செயற்பட்டதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே, இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி நீதியான விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும்.
அத்துடன், குற்றவாளிகளுக்கு எதிராக விரைவாக சட்ட நடவடிக்கை எடுத்து அங்கு முஸ்லிம்கள் வாழ்வதற்கான – வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சூழலை உறுதி செய்ய வேண்டும் என சட்டம் ஒழுங்கு அமைச்சரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவிடம் நான் கோரிக்கை விடுத்துள்ளேன்.
இந்த சம்பவம் தொடர்பில் எமது கண்டனத்தையும் தெரிவித்துள்ளோம்.” என குறிப்பிட்டுள்ளார்.