“காபந்து அரசின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தவிர்ந்த பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ...
“காபந்து அரசின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தவிர்ந்த பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அவர்கள் வசமிருக்கும் அரச வாகனங்கள், வளங்கள், ஆகிய அனைத்தையும் உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளர்களிடம் கையளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். அவற்றைக் கையளிப்பதில் தாமதம் ஏற்படுமாயின் பொலிஸார் மூலம் சட்ட ரீதியாக அவ்வாகனங்களை மீளப் பெறுவதற்கு கட்சி பேதமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்”
இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு அவர் இன்று ஆற்றிய உரையிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அலரி மாளிகையில் தொடர்ந்து தங்கியிருக்கின்றார். அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் அமைச்சு வாகனங்களை இன்னும் மீள ஒப்படைக்கவில்லை. அவர்களுக்காகவே இந்த எச்சரிக்கையை ஜனாதிபதிவிடுத்துள்ளார்.
அவரது உரையின் ஒரு பகுதி வருமாறு:
இத்தருணத்தில் தேர்தல் சட்டதிட்டங்கள் தொடர்பில் எமது முன்னைய அனுபவங்களையும் தேர்தல் சட்டதிட்டங்களை மீறுவதற்கு ஏதுவாக அமையும் காரணங்களைப் பற்றியும் இங்கு நான் சுருக்கமாக ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
குறிப்பாக அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரைகளுக்காகவும் ஆபேட்சகர்களின் தேர்தல் செயற்பாடுகளுக்காகவும் அரச உடைமைகளை துஷ்பிரயோகம் செய்வதை முழுமையாக தவிர்த்துக் கொள்ளுதல், அரச வாகனங்களை உபயோகப்படுத்துவதை முழுமையாக தவிர்த்துக் கொள்ளுதல், கடந்த அரசாலும் தற்போதைய காபந்து அரசில் செயலாற்றும் தற்போதைய நிலமையிலும் அந்தந்த அமைச்சுகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பயன்படுத்திக் கொள்வதற்காக வாகனங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்தன என்பதை நீங்கள் அறிவீர்கள்.
தற்போதைய அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின் கீழ் காபந்து அரசு என்ற வகையில் வேட்புமனு தாக்கல் பற்றிய அறிவித்தலிலிருந்து நாடாளுமன்றம் கூடும் வரையிலான காலப்பகுதியில் அமைச்சரவை, பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட காபந்து சபைக்கே அதிகாரம் இருக்கின்றது. ஆகையால் அந்த ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை தவிர்ந்த வேறு எவருக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள், முன்னாள் பிரதி அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகிய எவருக்கும் அரச வாகனங்கள் மற்றும் அரச பொது உடைமைகளை தேர்தல் பரப்புரைப் பணிகளுக்காக உபயோகப்படுத்துவது சட்ட ரீதியாகவே தடை செய்யப்பட்டிருக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
ஆகையால் அரசில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்ற இத்தருணத்தில் முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அவர்கள் வசமிருக்கும் அரச வாகனங்கள், வளங்கள், ஆகிய அனைத்தையும் உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளர்களிடம் கையளிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மிகுந்த கௌரவத்துடன் கேட்டுக்கொள்கின்றேன். அவற்றைக் கையளிப்பதில் தாமதம் ஏற்படுமாயின் பொலிஸார் மூலம் சட்ட ரீதியாக அவ்வாகனங்களை மீளப் பெறுவதற்கும் அவ்வாறு சட்டத்தை மீறி செயற்படுபவர்கள் எவராக எந்தக் கட்சியை சார்ந்தவர்களாக இருப்பினும் அவ்வாறானவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடும் என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றேன்.
ஆகையால் அரச வாகனங்களை உபயோகப்படுத்துதல், அரச பொது உடைமைகளை உபயோகப்படுத்துதல் ஆகியன இத்தருணத்தில் முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுமாறும் அவ்வாறான உபயோகம் சட்ட ரீதியாகவே தடை செய்யப்பட்டிருக்கின்றது என்பதையும் உங்களுக்கு நான் மிகுந்த தயவுடன் ஞாபகப்படுத்துகின்றேன்.
ஆதலால் இத் தேர்தலை சிறந்த முறையில் நடத்துவதற்கு நான் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் நாம் எமது முழு ஒத்துழைப்பை பெற்றுக் கொடுப்போம். தேர்தல் காலப்பகுதியில் மோதல்களை ஏற்படுத்திக்கொள்ளாது அமைதியாகவும் மிகுந்த புரிந்துணர்வுடனும் செயற்படுவதன் மூலம் அமைதியான ஜனநாயக வழியிலான தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்பு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், வேட்பாளர்கள், அவர்களது ஆதரவாளர்கள், நாட்டு மக்களாகிய அனைவரும் ஏற்க வேண்டிய மிகப் பரந்த பொறுப்பாகும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
நான் இங்கே ஞாபகப்படுத்திய இந்த விடயங்களுடன் உன்னதமான எமது இந்த தாய் நாட்டை முன்னெடுத்து செல்வதற்கும் சுபீட்சமிக்க பொருளாதாரத்தையும் நவோதமிக்க உயரிய தேசத்தையும் உலகில் மூத்த உன்னதமான அரச நிர்வாகத்தைக் கொண்ட ஒழுக்கமும் அமைதியும் நற்பண்புமிக்க சுதேசத்துவத்தை முதன்மைப்படுத்திய பெறுமானங்கள் உள்ளிட்ட எமது கலாசாரத்தையும் நாட்டுப் பற்றையும் முதன்மையாகக் கொண்ட அரச நிர்வாகத்திற்காக உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை நான் மிகுந்த தயவுடனும் கௌரவத்துடனும் கேட்டு நிற்கின்றேன்.
தர்மத்திற்கமைய நடப்பவரை தர்மமே பாதுகாக்கும்
குரோதத்தால் குரோதம் தனியாது
குரோதமின்மையாலேயே குரோதம் தனியும்
இதுவே உலக நியதியாகும்.
குரோதத்தால் குரோதம் தனியாது
குரோதமின்மையாலேயே குரோதம் தனியும்
இதுவே உலக நியதியாகும்.