” ரணில் விக்கிரமசிங்கவை ஒருபோதும் பிரதமராக நியமிக்கமாட்டேன். என்ன நடந்தாலும் பரவாயில்லை. முன்வைத்த காலை ஒருபோதும் பின்வைக்க மாட்டேன்.” என...
” ரணில் விக்கிரமசிங்கவை ஒருபோதும் பிரதமராக நியமிக்கமாட்டேன். என்ன நடந்தாலும் பரவாயில்லை. முன்வைத்த காலை ஒருபோதும் பின்வைக்க மாட்டேன்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட கூட்டுஎதிரணி உறுப்பினர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார் என்று லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,
” நீதிமன்ற தீர்ப்பை ஏற்கவேண்டும். அதை நாம் மதிக்கின்றோம். மக்கள் பக்கம் நின்றே ஜனாதிபதி முடிவெடுத்திருந்தார். எனினும், உயர்நீதிமன்ற தீர்ப்பால் தேர்தலுக்குசெல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து ஆட்சிநடத்த முடியாது என்று ஜனாதிபதி அறிவித்தார். இதனால் சிற்சில பிரச்சினைகள் எழக்கூடும். இருந்தாலும் நாடு தொடர்பில் சிந்தித்து தான் எடுத்த முடிவை மாற்றப்போவதில்லை . ஜனாதிபதி பதவி பறிபோனால்கூட பரவாயில்லை. சவால்களுக்கு முகங்கொடுப்பேன் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நாளை மற்றுமொரு நீதிமன்ற தீர்ப்பு வெளியாகவுள்ளது. அதன்பின்னரே எமது தரப்பிலிருந்து அரசியல் முடிவெடுக்கப்படும்.” என்றார் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன.