யாழ்ப்பாணம் மாநகரசபையில் பிரதி ஆணையாளர், உதவி ஆணையாளர், பிரதம பொறியியலாளர், கால்நடை மருத்துவ அதிகாரி, நிர்வாக உத்தியோகத்தர்கள், தொழில்ந...
யாழ்ப்பாணம் மாநகரசபையில் பிரதி ஆணையாளர், உதவி ஆணையாளர், பிரதம பொறியியலாளர், கால்நடை மருத்துவ அதிகாரி, நிர்வாக உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், சுகாதாரக் கல்வி அதிகாரிகள், உணவு தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் உள்ளிட்ட மிக முக்கிய உயர் பதவிகளுக்கு ஆளணிகள் நியமிக்கப்படாமல் உள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்வாறாக மிக முக்கிய பதவிநிலை அதிகாரிகள் உட்பட 218 ஆளணி வெற்றிடங்கள் யாழ் மாநகரசபையில் காணப்படுவதாக யாழ் மாநகரசபையின் தகவல் வழங்கும் அதிகாரியான நிர்வாக உத்தியோகத்தர் க.ஜெயானந்தன் குறிப்பிட்டுள்ளார்.
தகவல் அறியும் சட்டம் ஊடாக யாழ் மாநாகரசபையில் உள்ள ஆளணி வெற்றிடங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே மிக முக்கிய பதவிநிலை அதிகாரிகள் உட்பட 218 ஆளணி வெற்றிடங்கள் காணப்படுவதாக அவர் தகவல் வழங்கியுள்ளார்.
யாழ் மாநகரசபைக்கான உள்ளூராட்சித் தேர்தல் கடந்த ஆண்டு பெப்ரவரி10 ஆம் திகதி நடைபெற்று மார்ச் மாதம் யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் பதவியேற்றிருந்த நிலையில் ஒரு வருடம் ஆகியுள்ள போதும் மிக முக்கிய பதவிநிலை அதிகாரிகள் உட்பட 218 ஆளணி வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் காணப்படுகின்றமை யாழ் மாநகரசபையின் வினைத்திறனற்ற செயற்பாட்டுக்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தகவல் அறியும் சட்டம் ஊடாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் யாழ் மாநகரசபையில்,
பிரதி ஆணையாளர் 01, உதவி ஆணையாளர் 01, பிரதம பொறியியலாளர் 01, கால்நடை மருத்துவ அதிகாரி 01, நிர்வாக உத்தியோகத்தர்கள் 03, தொழில்நுட்ப உத்தியோகத்தர் 01, நீர் வேதியல் உத்தியோகத்தர் 01, மொழிபெயர்ப்பாளர்கள் 03, சுகாதாரக் கல்வி அதிகாரிகள் 03, உணவு தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் 05, நூலகர் 01, பொது சுகாதார தாதியர் 03, மருந்தாளர் 03, பொதுச் சுகாதார மருத்துச்சி 14, பொதுச் சுகாதார அதிகாரிகள் 02, நூலகர் தரம் 02 – 09, முகாமைத்துவ உதவியாளர்கள் 11, வருவாய்ப்பகுதி அதிகாரி 09, கள வேலை மேற்பார்வையாளர்கள் 03, சுகாதார மேற்பார்வையாளர்கள் 04, சந்தை மேற்பார்வையாளர்கள் 13, முன்பள்ளி ஆசிரியர்கள் 03 உள்ளிட்ட பதவிகளுக்கும்
சாரதிகள் 05, தச்சுத் தொழிலாளிகள் 05, ஒட்டுநர்கள் 04, மேசன் 02, மின் இணைப்பாளர்கள் 03, கே.கே.எஸ் 10, சுகாதாரத் தொழிலாளிகள் 56, நீர் வேலை தொழிலாளிகள் 17 உள்ளிட்ட பணிகள் உள்ளடங்கலாக 218 ஆளணி வெற்றிடங்கள் உள்ளபோதும் அவை நிரப்பப்படாமல் உள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
செய்தித் தொகுப்பு - அருமைத்துரை யசீகரன்