வலுவிழப்புடன் கூடிய நபர்களை நன்கு விளங்கிக் கொள்ளவும் அவர்களின் உரிமைகள்,கண்ணியம், நலன்களை யாவரும் அறியவும் அத்தகையவர்களின் வாழ்க்கையை மேம்...
வலுவிழப்புடன் கூடிய நபர்களை நன்கு விளங்கிக் கொள்ளவும் அவர்களின் உரிமைகள்,கண்ணியம், நலன்களை யாவரும் அறியவும் அத்தகையவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் நாம் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.இவை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையினால் 1992 ஆம் ஆண்டு தொடக்கம் வருடம் தோறும் டிசம்பர் 03 ஆம் திகதி வலுவிழந்தோர்களுக்கான சர்வதேசதின நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிகழ்வுகள் ஊடாக வலுவிழப்புடன் கூடிய நபர்கள் மனிதப் பெறுமதி மிக்கவர்கள் என்ற பண்பாட்டை பலப்படுத்த ஐக்கிய நாடுகள் சபை முயற்சிக்கின்றது.
வலுவிழப்புள்ளோருக்கான கல்வி,பாதுகாப்பு,தொழில் உரிமைகளை அனைவருக்கும் உள்ளது போல் சமத்துவ அடிப்படையில் வழங்க பல்வேறு சட்ட மூலங்களையும் கொள்கைகளையும் காலத்துக்கு காலம் அரசு ஏற்படுத்தியுள்ளது.
இதன்படி வலுவிழந்த பிள்ளைக்கும் கல்வியைப் பெறும் உரிமையுண்டு.1975 ஆம் ஆண்டின் அனைத்துலக வலுவிழந்தோர் உரிமைகள் பாதுகாப்புப் பிரகடனம், 1981 ஆம் ஆண்டினை சர்வதேச அங்கவீனர் ஆண்டாக பிரகடனப்படுத்தும் போது வெளியிடப்பட்ட பிரகடனத்தின் முதலாம் சரத்து, 1989ம் ஆண்டு ஐ.நா. சபையின் சிறுவர் உரிமையின் சமவாயம், 1996 இல் இயற்றப்பட்ட 28ஆம் இலக்க வலுவிழப்புடன் கூடிய நபர்களின் உரிமைகள் சட்டத்தின் 13 ஆம் உறுப்புரையின் 12, 13 உட்பிரிவுகள், 2003 ஆம் ஆண்டின் வலுவிழப்புடன் கூடிய நபர்களின் தேசியக் கொள்கை, 2007ம் ஆண்டின் ஐ.நா.சபையின் சர்வதேச' இயலாமையுடைய பிள்ளைகளின் உரிமைகள் சாசனம்' ஆகியனவற்றை இவற்றுக்கான உதாரணங்களாகக் குறிப்பிடலாம். இதனை 2016 ஆம் ஆண்டு இலங்கைப் பாராளுமன்றம் அங்கீகரித்தது.
வலுவிழப்போரின் கல்வி உரிமையை வழங்க பல்வேறு தேசிய,சர்வதேச சட்டங்களும் பிரகடனங்களும் கொள்கைகளும் வகுக்கப்பட்ட போதிலும் எமது நாட்டில் அவர்களுக்கான கல்வி வழங்கும் நிலையானது பின்தங்கியே காணப்படுகின்றது.குடிசன மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் 2012 ஆம் ஆண்டு அறிக்கையின்படி 1.6 மில்லியன் வலுவிழப்புள்ளோர்களுள் வெறுமனே 3.4% பிள்ளைகளே பாடசாலைக் கல்வியை பெறுகின்றனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வறிக்கையின்படி வலுவிழப்போருக்கான கல்வி பெறும் உரிமையானது பின்தங்கிய பிரயோகத்தன்மையுடையதை அவதானிக்க முடிகிறது.
இவர்களது கல்வி பெறும் உரிமையானது பல்வேறு காரணங்களினால் சவால்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. கொள்கைசார் தடைகள்,சுற்றாடல்சார் தடைகள்,தொடர்பாடல் தடைகள்,மனப்பாங்குரீதியான தடைகள் என பல்வேறு தடைகளால் இவர்களின் கல்வி உரிமையானது பறிக்கப்பட்டுள்ளது அல்லது முறையாக வழங்கப்படாமல் உள்ளது.
வலுவிழப்புள்ளோர் தொடர்பான ஏனையோரின் மனப்பாங்குகள் மாறும் போது அவர்களுக்கான எல்லாவிதமான உரிமைகளும் கிடைத்து விடும். அம்மாற்றம் பெற்றோர், அரச அதிகாரிகள், மாணவர்கள் தொடக்கம் ஒவ்வொரு தனிநபரிடமும் ஏற்பட வேண்டும். வலுவிழப்போரும் தங்களில் ஒருவர் என்ற சிந்தனையானது எல்லோரிடமும் பரவ வேண்டும். அவர்கள் மீதான எதிர்மனப்பாங்கு கைவிடப்பட வேண்டும்.
இவர்களின் கல்வி உரிமைக்கு தடையாக அமையக் கூடிய சில மனப்பாங்குரீதியான எதிர்மறை எண்ணங்களை படம் போட்டு காட்டும் சில வினாக்களை வினவி விடை காணும் போது அவை எமக்குத் தெளிவாகும்.
1. வலுவிழப்புள்ள தங்கள் பிள்ளைகளை,உறவுகளை பாடசாலைக் கல்வி பயில ஊக்கமளிப்போர் எம்மில் எத்தனை பேர் உள்ளோம்?
2. சாதாரண பிள்ளையின் கல்விக்கு செலவளிக்கும் பணத்தின் அளவு போல் பெற்றோர் வலுவிழப்புள்ள பிள்ளைக்கு செலவளிக்கின்றனரா?
3. வலுவிழப்போருக்கான கலைத்திட்ட உருவாக்கம்,பாடநூல்கள், இணைப்பாட செயற்பாடுகள் எந்தளவில் வழங்கப்பட்டுள்ளன?
4. பாடசாலைகளில் சாதாரண மாணவர்களின் கற்றல் கற்பித்தலுக்கு வளஒதுக்கீடு செய்வது போல வலுவிழப்புள்ள பிள்ளைகளுக்கான கற்றல், கற்பித்தல் வளஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளனவா?
5. பாடசரலையில் ஏனைய மாணவர்ளுக்கு வழங்கப்படும் வாய்ப்புகளில் நியாயபூர்வமானவை வலுவிழப்புள்ள மாணவர்களுக்கும் வழங்கப்படுகின்றனவா?
6. விசேட கல்வி ஆசிரியர் நியமனத்தை பெற்ற எத்தனை ஆசிரியர்களுக்கு அத்துறையில் கற்பிக்க விருப்பம் உள்ளது?
7. பாடசாலைகளில் ஏனைய ஆசிரியர்களைப் போலவே விசேட கல்வி ஆசிரியர்களும் மதிக்கப்படுகின்றனரா?
8. பாடசாலைகளுக்கு அனுமதி பெற வரும் வலுவிழப்புள்ள பிள்ளைகளை இணைத்து அப்பிள்ளைகளுக்கான கற்றல் கற்பித்தல் வாய்ப்புக்களை ஏற்படுத்த முனைப்புடன் செயற்படும் கல்வி அதிகாரிகள் எத்தனை பேர் உள்ளனர்?
இவ்வாறாக பல்வேறு வினாக்களுக்கான விடைகளைக் காணும் போது அப்பிள்ளைகளுக்கான கல்வி உரிமையை பெறும் வாய்ப்புக்கள் இன்னும் முழுமை பெறவில்லை என்பதை அறிய முடியும். அவர்கள் தமது கல்வியைப் பெற பாரிய தடையாக அமைவது மனப்பாங்கு தடையே ஆகும். அத்தடை நீங்கும் போது ஏனைய அனைத்து சவால்களையும் நிவர்த்திக்க அரசு பல்வேறு முயற்சிகளை செய்யுமென்பது உறுதி.

இங்கு வலுவிழப்போர் தொடர்பான எதிர் மனப்பாங்கு மாற்றமடையும் போது வலுவிழப்புள்ளோர் கல்வி,பொருளாதாரம், தொழில்துறைகள் என பல்வேறு துறைகளில் தமது சாதனையை உலகுக்கு பறைசாற்றுவார்கள்.இதற்கு மிகச் சிறியஉதாணமாக 2018 ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரீட்சையில் தமது திறமையை வெளிக்காட்டிய வலுவிழப்புள்ள பிள்ளைகளைக் கூறலாம்.குருநாகல் இப்பாகமுவ கிரியமுன வித்தியாலய மாணவர் ( 181 புள்ளிகள்) பெற்றார். அதேபோல் மாவனல்ல, கொட்டகல பாடசாலையை சேர்ந்த தினுஷா பண்டார(145 புள்ளிகள்) பெற்றார்.
வலுவிழப்புள்ள பிள்ளைகளுக்கான வாய்ப்புக்கள் பல உள்ள போது மனப்பாங்குகளில் ஏற்பட்டுள்ள நோய்களே அப்பிள்ளைகளுக்கான கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்களை தடுக்கின்றது. அரசாங்கத்தின் பொதுநிர்வாக சுற்றறிக்கைப்படி சகல அரச நிறுவனங்களிலும் வலுவிழப்புள்ளோருக்கு 3% தொழிலுக்கான இடஒதுக்கீடு செய்துள்ளது. இருந்த போதிலும் உரிய கல்வித் தகைமையுடையோர் இன்மையினால் இவ்வாய்ப்பு வலுவிழப்புள்ளோருக்குக் கிடைப்பதில்லை. எனவே இவர்களின் கல்வி உரிமையை முழுமையாக உறுதிப்படுத்துவதனூடாக அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிடுவோம்.