டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூஷின், பிரதான உதவியாளரான அந்தரேவத்தை சாமர என்பவர் மட்டக்குளி பிரதேசத்தில் வைத்த...
டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூஷின், பிரதான உதவியாளரான அந்தரேவத்தை சாமர என்பவர் மட்டக்குளி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை காவற்துறை விசேட அதிரடிப்படையினர் அவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் மனிதக் கொலை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆட்கடத்தலில் ஈடுபட்டு கப்பம் கோருதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுடன் தொடர்பு கொண்டவர் என, காவற்துறை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக, ஒழுங்குபடுத்தப்பட்ட குற்றங்களை தடுக்கும் விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மதூஷூடன் கைதுதான பாதாள உலக குழு உறுப்பினரான ஜங்காவின், உறவினரான இராணுவ அதிகாரி நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் இருந்து மீட்கப்பட்ட துப்பாக்கியை பயன்படுத்து முறைமை குறித்த இரு புத்தகங்கள் காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த புத்தகங்களை டுபாயிக்கு கொண்டு செல்லப்படவிருந்ததாக, மாத்தறை பிரதேச உயர் காவற்துறை அதிகாரி ஒருவர் எமது செய்தி பிரிவிடம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஜங்காவின் கந்தர வீட்டில் இருந்து மீட்கப்பட்ட இராணுவ சீருடைகளுக்கு நிகரான சீருடைகள் மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பன இராணுவத்தை சேர்ந்த ஒருவரினால் வழங்கப்பட்டுள்ளமைக்கான தகவல்கள் கிடைத்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மாகந்துரே மதூஷூடன் டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலக குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்கள் இலங்கையில் தொடர்புகளை பேணிவந்த நபர்கள் குறித்தும் மாத்தறை மாவட்டத்தை கேந்திரமாக கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பிரதேசத்திற்கு பொறுப்பான உயர் காவற்துறை அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட 25 பேரில் 7 பேர் மாத்தறை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, 4 பேர் கம்புருபிட்டி பிரதேசத்தையும், இருவர் வெலிகமை பிரதேசத்தையும், ஒருவர் கந்தர பிரதேசத்தையும் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.