ஒரு மாத காலத்துக்குள் கிண்ணியா பிரதேச பண்ணையாளர்களுக்குச் சொந்தமான 28ஆயிரம் மாடுகள் உயிரிழந்துள்ள செய்தியானது பலரையும் கவலைக்குள்ள...
ஒரு மாத காலத்துக்குள் கிண்ணியா பிரதேச பண்ணையாளர்களுக்குச் சொந்தமான 28ஆயிரம் மாடுகள் உயிரிழந்துள்ள செய்தியானது பலரையும் கவலைக்குள்ளாகியிருப்பதோடு,கால்நடை பண்ணைகளின் எதிர்கால வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
2018 டிசம்பர் 1ஆம் திகதியில் இருந்து டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப் பகுதிக்குள்ளே இந்த மோசமான அழிவு நிகழ்ந்துள்ளது. இக்கட்டுரை எழுதும் போதும் ஆங்காங்கே மாடுகள் பெருமளவில் இறந்து வருவதாக செய்திகள் வருகின்றன.
இந்த மாடுகளுக்கு நிரந்தரமான மேய்ச்சல் தரை இல்லாத காரணத்தினால் தற்காலிகமாக கந்தளாய் சீனிஆலை, கண்டல்காடு, கல்லரப்பு, சாவாறு, சுண்டியாறு, செம்பிமோட்டை மற்றும் கங்கை போன்ற காட்டுப் பிரதேசங்களில் மேய்ச்சலுக்காக விடப்படுகின்றன,புற்கள், செடிகள் இல்லாத இந்த காட்டுப் பிரதேசங்களில் மாடுகளுக்கு போதியளவு உணவு கிடைக்காமையினாலே இவ்வாறு இறந்துள்ளதாக பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களே மாடுகள் கன்று ஈனுவதற்கான பருவ காலமாகும். மாடுகளுக்கு போதியளவு உணவு கிடைக்க வேண்டிய கர்ப்ப காலத்தில் உணவு கிடைக்காதபடியால் இவ்வாறு கர்ப்பம் தரித்த மாடுகளும், கன்று ஈன்ற மாடுகளும் அவற்றின் கன்றுகளுமே அநியாயமான முறையில் இறந்திருக்கின்றன.
வருடம் தோறும் ஓக்டோபர் மாதம் ஆரம்பத்தில் வடகீழ் பருவப்பெயர்ச்சி மழையோடு, வேளாண்மை மற்றும் சேனைப்பயிர்ச்செய்கை ஆரம்பித்து விடும். இந்தக் காலப் பகுதிக்குள் அதாவது, ஒக்டோபரில் இருந்து பெப்ரவரி மாதம் வரை சுமார் ஐந்து மாதங்கள் கால்நடைகளை காட்டுப் பகுதிக்குள் கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு பண்ணையார்கள் ஒவ்வொரு வருடமும் ஆளாகின்றனர்.
இந்த விடயம் குறித்து கிண்ணியா பிரதேச கால்நடை வளர்ப்பாளர் சங்கத்தின் செயலாளர் ஏ.சி.முகம்மது முபாரக் கருத்து தெரிவிக்கையில், "நாட்டில் யுத்த காலப்பகுதிக்குள் நிரந்தரமாக இருந்த மேய்ச்சல் நிலங்களை, விவசாயிகள் அத்துமீறி பிடித்து தற்போது விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாகத்தான் நாங்கள் நிரந்தரமான மேய்ச்சல் நிலங்களை இழந்து, இந்தளவு பெரிய தொகையாக எமது பொருளாதாரத்தை இழந்திருக்கிறோம்.இந்த கால்நடை பண்ணைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரம் குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றன. ஒரு நாளைக்கு 10 ஆயிரம் தொடக்கம் 15ஆயிரம் வரையான லீற்றர் பால் கறக்கப்படுகின்றது" எனக் குறிப்பிட்டார்.
"மலைநாட்டு பிரதேச எருமைமாட்டுப் பாலை விட, எமது எருமை மாட்டுப்பாலுக்கு தென்பகுதியில் அதிகரித்த கேள்வி காணப்படுகிறது. காரணம் இங்குள்ள பாலில் அதிக கொழுப்பு காணப்படுவதாகும். பொருளாதாரரீதியாக முக்கியத்துவம் மிக்க எமது தொழிலை பாதுகாப்பதற்கு நிரந்தரமான மேய்ச்சல் நிலம் ஒன்று அவசியமாகும். ஏனெனில் வேளாண்மைத் துறைக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் இருக்கும் போது , கால்நடை பண்ணையாளர்களுக்கு ஏன் நிலம் ஒதுக்க முடியாது?" என்று கேள்வி எழுப்பினார் அவர்.
கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேணி ஆகிய இரு கமநலசேவை நிலையங்கள் உள்ளன. இதில் கல்லறப்பு, சாவாறு, சுண்டியன்ஆறு, உகல்வத்தை, கல்லடப்பு மற்றும் கல்மடு ஆகிய கிராமங்கள் கிண்ணியா கமநலசேவை நிலையத்துக்கு சொந்தமான வேளாண்மை காணிகளாகவும் செம்பிமோட்டை, ஆயிலயடி (ஒருபகுதி), பனிச்சங்குளம் ஆகிய கிராமங்கள் குறிஞ்சாக்கேணி கமநலசேவை நிலையத்திற்கும் சொந்தமான விவசாயக் காணிகளாகவும் இருக்கின்றன.
இந்த கிராமங்களை சம்மந்தப்படுத்தியே தற்போது, இந்த கால்நடைகள் இறப்பு குறித்து பேசப்படுகின்றது. 10வருடங்களாக மேய்ச்சல் தரைக்காக போராடி வருவதாகவும் கால்நடை வளர்ப்புக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களில் வேளாண்மை செய்யப்படுகின்றது என்றும் பண்ணையாளர்கள் கூறுகின்றனர். கால்நடை பண்ணையாளர்களின் குற்றச்சாட்டை மறுக்கின்ற விவசாயிகள்,பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்த காணிகளிலேயே தாம் வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, விவசாசம்மேளன தலைவர் அப்துல் மஜீத் உமர்லெப்பை (ஒய்வு பெற்ற கிராமநிலதாரி) கருத்து தெரிவிக்கும் போது, "1963 இல் பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த ஏ.எல்.அப்துல்மஜீதின் சிந்தனையில் உருவானதே இந்த விவசாயக் காணிகளாகும். ஒவ்வாரு கிண்ணியா பிரஜையும் இரண்டு ஏக்கர் வீதம் விவசாயக் காணியை பெற்றுக் கொள்ளும் அவரது திட்டத்தின் கீழ், அப்போது காடுகள் வெட்டி களனிகளாக்கப்பட்டன.
இவருடைய முயற்சியின் காரணமாக 1971இல் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தலா இரண்டு ஏக்கருக்கான காணி பராமரிப்பு அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டதோடு விவசாயிகளுக்கு வேளாண்மை உற்பத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக 2ஏக்கருக்கான விவசாயக் கடனையும் பெற்றுக் கொடுத்தார்.இந்த காணி பராமரிப்பு அனுமதிப்பத்திரம் ஒவ்வொரு வருடமும் புதுபிக்கப்படல் வேண்டும். ஆனால் 1975 இல் திருகோணமலையில் உள்ள மாவட்ட காணி அலுவலகம் மின்ஒழுக்கு காரணமாக முற்றாக எரிந்து போனது இதில் இந்தகாணி அனுமதிப் பத்திரம் சம்பந்தப்பட்ட ஆவணங்களும் எரிந்து நாசமாகின.எனினும் இதனை மீண்டும் பெற்றுக் கொடுப்பதற்கு அரச அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்றார்.
இதனைத் தொடர்ந்து 1993இல் இராஜாங்க அமைச்சராக இருந்த மறைந்த எம்.ஈ.எச். மகரூப் இவர்களுக்கு நிரந்தர காணி அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தார்.ஆனால், இந்த அனுமதிப் பத்திரம் காடுவெட்டி, வேளாண்மை செய்த எல்லோருக்கும் கிடைக்கவில்லை. இதனால் முன்னர் வேளாண்மை செய்த பலர் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் யுத்தமும் உக்கிரமடைய நிரந்தர அனுமதிப் பத்திரம் எடுப்பதை கைவிட்டதோடு, வேளாண்மைச் செய்கையையும் கைவிட்டனர். இவ்வாறு 30 வருடங்களின் பின்னர் இன்று மீண்டும் அங்கு சென்று காடுவெட்டி , தங்கள் காணிகளில் வேளாண்மை செய்து வருகின்றனர்" என்றும் அவர் தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க, செம்பிமோட்டை பிரதேசத்தில் உள்ள விவசாயிகளுக்குச் சொந்தமான காணிகளை விடுத்து, மீதியிருக்கின்ற 350 ஹெக்டேயர் அளவு காணியை மேய்சல்தரைக்கு கொடுப்பதற்கு 2016ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திச்சபைக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன் பிரகாரம் 2017இல் காணி அளவையும் செய்யப்பட்டடது. ஆனால் இன்னும் அது அமுல்படுத்தப்படவில்லை. இவ்வாறு 350 ஹெக்டேயர் காணி மேய்ச்சல் தரையாக கிடைத்திருக்குமானால், இந்த இறப்பில் இருந்து அரைவாசி மாடுகளையாவது பாதுகாத்திருக்க முடியும் என பண்ணையாளர்கள் கூறுகின்றனர்.
இந்த விடயம் தொடர்பாக அரச அதிகாரிகள் மீதே குற்றம் சுமத்தப்படுகின்றது. அதாவது உரிய நேரத்தில் வன இலாகா அதிகாரிகள் எல்லையிட்டு கல் நடவில்லை. இதன் காரணமாக இதில் சுமார் 200 ஹெக்டேயர் அளவிலான காணியை விவசாயிகள் பிடித்து வேளாண்மை செய்திருக்கிறார்கள் என்ற தகவலும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையிலேயே செம்பிமோட்டையில் இருந்து தங்கள் கால்நடைகளை கடந்த ஒக்டோபர் மாதம் கந்தளாய் சீனி ஆலை காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். இவ்வாறு கொண்டு சென்ற எருமை மாடுகளே உணவு இன்றி அதிகம் இறந்திருக்கின்றன.
விவசாயிகள் சொல்லுகின்ற கருத்துக்களை நோக்குவோமாக இருந்தால் அது வேறு மாதிரி உள்ளது. யுத்த காலத்துக்கு முன்பிருந்தே அவர்கள் வேளாண்மை மற்றும் சேனைப்பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் யுத்தம் காரணமாக , விவசாயத்தை கைவிட்டிருந்த நிலையில் தங்களுடைய காணிகளில் மீண்டும் விவசாயம் செய்வதாகவும் அவர்கள் கூறுகின்றனர். கால்நடை வளர்ப்பாளர்களின் காணிகளை அத்துமீறி பிடிக்கவில்லை என்றும் அவர்கள் யுத்தகாலத்திலே மாடுகளை வளர்த்து பெருக்கிக் கொண்டனர் என்றும் விவசாயிகள் தெரிவிக்கிகின்றனர்.
மாடுகளின் உயிரிழப்பு தொடர்பாக கிண்ணியா பிரதேச கால்நடை வைத்திய அதிகாரிஎம்.எஸ்.எம். பைசால் கருத்து தெரிவிக்கையில், ஆறு மாதங்களுக்கு முன்னர் கந்தளாய் சீனித்தொழில்சாலை காடுகளில் உள்ள மாடுகளுக்கு ஒருவகை வைரஸ் நோய் இருந்தது.ஆனால் அந்த நோய்க்கு உரிய மருத்துவ கிகிச்சை வழங்கப்பட்டதால் அந்த நோய்த்தொற்றில் இருந்து அந்த மாடுகள் ஏற்கனவே பாதுகாக்கப்பட்டு விட்டன.ஆனால், தற்போது மாடுகளுக்கு போதியளவு போசாக்கு கிடைக்காமையினாலே அவை இறக்கின்றன. இதற்கு காரணம் மேய்ச்சல்தரை இன்மையாகும்" என்றார்.
இறந்த மாடுகளின் சில உடல்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது, கல்சியமும் மெக்னீசியம் முழுமையாக குறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது .இல்வாறு குறைவு ஏற்பட்டதனால், எலும்புகளுக்கு போதியளவு பலம் கிடைக்காது, மாடுகள் நிற்க முடியாமல், நிலத்தில் விழுந்து இறக்க நேரிடுகின்றது என்றும் இறந்த மாடுகளை பாதுகாப்பான முறையில் புதைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அப்போது இலாபகரமான தொழிலாக காணப்பட்ட கால்நடை வளர்ப்பு இப்போது ஆபத்தானதாக மாறியுள்ளது.இப்பிரச்சினைக்கு விரைவில் முடிவு காணப்பட வேண்டும் என்பதே இங்குள்ளோரின் கோரிக்கையாகும். வேளாண்மைத்துறையையும் கைவிட முடியாது. கால்நடை வளர்ப்பையும் கைவிட முடியாது. 80ஆயிரம் சனத் தொகையைக் கொண்ட கிண்ணியாவுக்கு வேலைவாய்ப்பையும் உணவையும் கொடுத்து பிரதேசத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு இந்த இரண்டு துறைகளும் அவசியமானவையாகும். ஒரு மாத காலத்துக்குள் 28 ஆயிரம் மாடுகள் இறந்து இரண்டு மாதங்களாகியும் இது சம்பந்தமாக அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் என்ன?மக்கள் எழுப்புகின்ற வினா இது!