‘3 மாதத்திற்குள் அரசு அர்த்தமுள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால் போராட்டம் வெடிக்கும்’: மாவை மீண்டும் முழக்கம்!

‘3 மாதத்திற்குள் அரசு அர்த்தமுள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால் போராட்டம் வெடிக்கும்’: மாவை மீண்டும் முழக்கம்!

“இம் மாநாட்டிலிருந்து எதிர்வரும் மூன்று மாதகாலத்துக்குள் அரசு நம்பகத்தன்மையும் அர்த்தமுள்ளதுமான நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்த வேண்டும். அல்...

“இம் மாநாட்டிலிருந்து எதிர்வரும் மூன்று மாதகாலத்துக்குள் அரசு நம்பகத்தன்மையும் அர்த்தமுள்ளதுமான நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்த வேண்டும். அல்லது ஜனநாயக வழிகளில் மக்களை அணிதிரட்டி போராட்டங்களில் ஈடுபடுவதென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு தீர்மானிக்க வேண்டும் என வற்புறுத்துகின்றோம்“ என தமிழ் அரசு கட்சி தேசிய மாநாட்டில் அறைகூவியிருக்கிறார் மாவை சேனாதிராசா.

யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த தமிழ் அரசு கட்சியின் 16வது தேசிய மாநாட்டில் மலைமை பேருரை ஆற்றும்பொது இவ்வாறு குறிப்பிட்டார்.

“போராட்டத்திற்கான கட்டமைப்பை ஒருமைப்பாட்டோடு உருவாக்குவோம் என்பதை அறுதியிட்டுக் கூறிக்கொள்கின்றேன். இதன் பொருட்டு “தேசிய சபை” உருவாக்குவதற்கு முன்னின்று உழைப்பேன் என உறுதியளிக்கின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநாடு ஒன்றும் இந்த ஆண்டில் நடத்த வேண்டுமென அழைப்பு விடுக்கின்றேன்.“ என்றும் தெரிவித்தார்.

அவரது உரையின் முழு வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

பேரன்புக்குரிய அரசியல் தலைவர்களே! தமிழரசுக் கட்சியின் பேராளர்களே! இனிய காலை வணக்கம்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு 2019 ஆனி 28,29,30ஆம் நாட்களில் யாழ்ப்பாணத்தில் நல்லூரில் நடைபெறுகின்றது.

மாநாட்டை நடாத்துவதில் ஏற்கனவே காலம் தாமதித்து விட்டதென்ற வருத்தம் இருந்தாலும் “ஏப்ரல்” சித்திரைத் திங்களில் 26,27,28ஆம் திகதிகளில் தந்தை செல்வா நினைவு நாளிலிருந்து தொடங்கி மாநாட்டை நடாத்துவதெனத் தீர்மானித்திருந்தோம். 26ஆம் திகதி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வளாகத்தில் தந்தை செல்வா நினைவு மண்டபம் ஒன்று தமிழர் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களால் திறந்து வைக்கப்படவிருந்தது. ஆனால் அந்த மண்டபம் 01-07-2019 அன்று திறந்து வைக்கப்படுவது மகிழ்ச்சி தருகிறது.

ஆனால்; ஐ.எஸ்.ஐ.எஸ் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் தற்கொலைக் குண்டுதாரிகள் ஏப்ரல் 21ஆம் நாள் ஈஸ்டர் ஞாயிறு திருநாளன்று எட்டு இடங்களில் கொழும்பிலும் மட்டக்களப்பிலும் கிறிஸ்தவ தேவாலயங்களிலும், சுற்றுலா விடுதிகளிலும் குண்டுகளை வெடிக்கவைத்துப் பேரழிவை ஏற்படுத்திவிட்டனர். அதன் விளைவுகளால் தமிழரசு மாநாடும் ஒத்திவைக்கப்பட வேண்டியேற்பட்டுவிட்டது.

நல்லூர் இராஜதானி

தமிழரசு மாநாடு யாழ்ப்பாணத்தில் சங்கிலி மன்னன் ஆட்சி செய்த நல்லூர் இராசதானியில் நடைபெறுகிறது. தமிழர் அரசு தனியரசு சுதந்திரம் நிலைத்த தேசம்;. போர்த்துக்கேயரின் டச்சுக்காரரின், ஆங்கிலேயரின், ஐரோப்பியரின் நவீன ஆயுதப் போரை எதிர் கொண்டு

இறுதி வரை சங்கிலி மன்னன் போராடிய தமிழர் தேசவிடுதலைப் போரில் பதினாறாம் நூற்றாண்டில் 1619ல் யாழ்ப்பாண அரசு வீழ்ந்தது. அதுவரை தமிழரும் சிங்களவரும் இலங்கையை ஆண்டனர் என்பது வரலாறு.

யாழ்ப்பாண நகரில் டச்சுக்காரர் கோட்டை ஐரோப்பியர் தமிழர் சுதந்திர அரசை வீழ்த்திய சின்னமாகவிளங்குகிறது. ஆனால் நல்லூர் தமிழராட்சி சுதந்திரத்திற்காகப் பலநூறு ஆண்டுகள் போராடி அரசு செய்த தேசத்தின் அரசும் கோட்டைகளும் இன்றும் தமிழர் சுதந்திர ஆட்சியை வரலாற்றை நினைவூட்டி நிற்கின்றன. அவை சிதைவுற்றுக் கிடப்பது தான் சோகமாகி இருக்கிறது.

இருப்பினும் தமிழர் வீரத்தின் விளைநிலமாய், சுதந்திர தாகத்தை எழுப்பி நிற்கின்ற தேசத்தில் தமிழரசு மாநாடு நடைபெறுவது ஓர் ஆத்மார்த்த ஆறுதலாகும். அதற்கும் மேலாக நல்லூர் முருகன் கோவில், யாழ்ப்பாணம் கிறிஸ்தவப் பெரிய கோவில், ஒஸ்மானிய மசூதி முதலான கோவில்கள் சூழ்ந்;த புண்ணிய பிரதேசத்தில் இம்மாநாட்டு நிகழ்ச்சிகள் ஆரம்பிப்பதும் தெய்வ நம்பிக்கை பற்றி நிற்பதும் நன்மையேயாகும்.

அதைவிட இலங்கையின் வன்னியர் ஆட்சி அநுராதபுரம் கிழக்கு மாநிலம் வரை அகன்று பரந்த வன்னி மன்னர் ஆட்சி செய்த பிரதேசத்தில் கைலை மன்னனும் இறுதியில் பண்டார வன்னியனும் ஐரோப்பியருக்கு அடங்க மறுத்துப் போராடி ஆட்சி செய்த வரலாறு தமிழராட்சிப் பரப்பை நிலை நாட்டி நிற்கின்றது. எனினும் சிங்கள அரசுகளும், தமிழர் அரசுகளும் 1833ல் ஆங்கில அரசினால் கைப்பற்றப்பட்டு இலங்கை ஆங்கிலேயரின் ஒரே நிர்வாக ஆட்சிக் கட்டமைப்புக்குள் வீழ்ந்து விட்டன.

இலங்கைக்குச் சுதந்திரம்

1948ல் இலங்கைக்கு ஆங்கில அரசினால் சுதந்திரம் வழங்கப்படுவதற்கு முன்னரே முழுநாட்டின் சுதந்திரத்திற்காகவும் போராடிய சேர் பொன் இராமநாதன், சேர் பொன் அருணாசலம் முதலான பெருந்தலைவர்கள் தமிழர் விடுதலைக்;காகவும் குரலெழுப்பியிருந்தனர். டொனமூர் அரசியல் திட்டத்தை எதிர்த்தனர்.

1940களின் பின் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலமும், தந்தை செல்வநாயகமும் தமிழர் சுயநிர்ணய உரிமை பற்றிக் குரலெழுப்பினர். 1948ல் இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்த பொழுது தந்தை செல்வநாயகம் “அச் சுதந்திரம் சிங்களவருக்கே தான். தமிழருக்குச் சுதந்திரம் கிடைக்கவில்லையென்று” வாதிட்டார். முதலாவது இலங்கை அமைச்சரவையில் ஜீ. ஜீ. பொன்னம்பலம் அமைச்சராக இணைந்து கொண்டார். தந்தை செல்வநாயகம் 18.12.1949 அன்று இறுதியில் இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் தொடக்கினார். இலங்கையில் சமஷ்டி ஆட்சியில் தமிழர்களுக்குத் தன்னாட்சி என்று அறிவித்தார்.

தமிழ் மக்கள் தமது பிறப்புரிமை இறைமையை ஒருபோதும் இழக்கவில்லை. இறைமை என்றும் மக்களிடமேயிருக்கிறது. ஜரோப்பியரிடம் இழந்த சுதந்திரத்தை மீட்பதற்கு நாம் போராட்டத்தை ஆரம்பிப்போம், தமிழர் தன்னாட்சியை நிறுவக் கூடிய சமஷ்டி ஆட்சியை உருவாக்குவோம் எனப் போராட்டங்களை முன்னெடுத்தார். தமிழரசுக் கட்சியை சமஷ்டிக் கட்சியென்றே அழைத்தனர். அன்றே தமிழர் பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றங்களை எதிர்த்தார்.

1948ல் சுதந்திரம் இலங்கைக்கு கிடைத்தவுடன் மலையகத் தமிழர் வாக்குரிமை, குடியுரிமையைப் பறித்த சேனநாயக்கா அரசுக்கெதிராகவும் மலையகத் தமிழருக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பியே தமிழசுக் கட்சியை ஆரம்பித்தார். இன்று மலையகத் தமிழருக்கு ஆபத்து நாளை இலங்கைத் தமிழருக்கும் ஆபத்து ஏற்படும் என அன்றே தமிழர்களுக்கு வரக்கூடிய ஆபத்தை எச்சரித்தார். அதன் உண்மை வெளிப்பட்ட காலத்தில் 1956ல் அரச கரும மொழியாகச் தனிச் சிங்களச் சட்டம் வந்த போது அதனை எதிர்த்துப் போராடிய தந்தை செல்வா தீர்க்கதரிசியென்று அனைவராலும் போற்றப்பட்டார். வடக்குக் கிழக்குப் பிரதேசம் முழுவதும் இலங்கையிலும் தமிழர் தலைவராக ஏற்றுக்கொள்ளப் பெற்றார். தமிழரசு ஒரே வீட்டுக் குடும்பம் எனத் தமிழரசு கட்சியை வளர்த்தெடுத்தார். 1956ல் திருமலை மாநாட்டில் “ஒரு சுயாட்சித் தமிழரசும் முஸ்லீம் அரசும்” என்று திருமலைத் தீர்மானத்தில் முடிவெடுத்தனர்.

சமஷ்டி அரசியலமைப்பும் தமிழீழத் தீர்மானமும்

1972ல் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பெற்ற வேளை சமஷ்டி அரசியலமைப்பை முன்வைத்தார். சமஷ்டி அமைப்பை அன்றைய அரசு நிராகரித்ததன் பின்னணியில் 1976ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கி வட்டுக்கோட்டை மாநாட்டில் திருவாளர்கள் ஜீ.ஜீ.பொன்னம்பலம், சா.ஜே.வே.செல்வநாயகம், மலையகத் தலைவர் தொண்டமான் தலைவர்களாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர் தமிழீழத் தீர்மானத்தை நிறைவேற்றினர். இந்த அடித்தளத்திலிருந்து தான் தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் தலைவர் பிரபாகரனும் ஆயுதப்

போராட்டத்தை முன்னெடுத்தனர். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE), தமிழீழ விடுதலை இயக்கம் (TELO), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) முதலான இயக்கங்களும் ஆயுதமெடுத்துப் போராட்டங்களை ஆரம்பித்தனர்.

2014 செப்டம்பர் 05,06,07ஆம் நாட்களில் வவுனியாவில் நடைபெற்ற மாநாட்டில் என்னைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்திருந்தீர்கள், எனது தலைமையுரையிலும் மாநாட்டுத் தீர்மானத்திலும், “2014 இறுதிக்குள் தமிழினப் பிரச்சனைக்குத் தீர்வு காண ஜனாதிபதி இராஜபக்ஷ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது 2015 தைத்திங்களில் இனவிடுதலைக்கான அறவழிப் போராட்டங்களை நடத்துவோம்” என அறிவித்திருந்தோம். இந்த மாநாட்டில் அடுத்த இளந்தலைமுறையிலிருந்து ஒரு தலைவரைத் தெரிவு செய்ய வேண்டுமென்று தான் கட்சியிடம் கடித மூலம் தெரிவித்திருந்தேன். இருப்பினும் இப்பொழுது 2019லும் தமிழரசு மாநாட்டில் என்னைத் தலைவராகத் தெரிவு செய்தமைக்கு அந்தப் பொறுப்பை ஏற்க வைத்தமைக்கு அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 2015 ஜனாதிபதித் தேர்தல் எனது போராட்ட அறிவிப்பை மாற்றிவிட்டது.

2013ல் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சிகள் என்னை ஏகமனதாகப் பிரேரித்திருந்தனர். எனக்கு ஆர்வம் ஏற்படவில்லை. என் வாழ்நாள் போராட்டப் பாதையிலேயே அமைந்திருந்தது. அப் பாதையையே தொடர விரும்பியது. தமிழரசுக் கட்சி உள்ளிட்ட கூட்டமைப்பு கட்சிகளின் பிரேரணையை ஏற்காது விட்டமை தவறான விளைவுகளை ஏற்படுத்தி விட்டது. அதன் விளைவு தமிழர் தேசம், தமிழ் மக்கள் பல கூறுகளாய் புதிய புதிய கட்சிகளாய் தமிழர் பலம் சிதையும் நிலையை எட்டியிருக்கிறது. ஒன்றுபட்ட தேசமாய், ஒன்றிணைந்த தமிழர்களாய் எம் தமிழர், தமிழ் பேசும் மக்கள் விடுதலை பெற வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.

2013ல் பலதுறைகளில் மேம்பட்டவர்களின் வடக்கு மாகாணசபையாக அமைந்தது. 2/3 பங்கு உறுப்பினர் மக்களால் தெரிவு செய்யப்பெற்றனர். ஐந்து ஆண்டு முடிவில் இச்சபை எதைச் சாதித்தது என்று எம்மக்களிடம் எழுங்கேள்விக்கு நாமே பொறுப்புக் கூறவேண்டி ஏற்பட்டுவிட்டது.

ஒஸ்லோ உடன்படிக்கை

2002 – 2003 காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளும் இலங்கை அரசும் சர்வதேசத்தின் பின்னணியில் நோர்வே அரசின் அனுசரனையுடன் போர் நிறுத்தத்தை அறிவித்தன. இலங்கை இனப்பிரச்சனைக்கான தீர்வை எட்டும் பொருட்டு ஒரு உடன்பாட்டுக்கான கொள்கை வழிகாட்டல்

அறிக்கை உருவாக்கப்பட்டது. அது தான் ஒஸ்லோ உடன்படிக்கை “OSLO Communique” என்று வெளியிடப்பட்டது.

In February 2002 the LTTE and the Government of Sri Lanka signed a
Ceasefire Agreement and Later in December 2002 agreed on a set of
principles called the Oslo Communique, which stated “(T)o explore a
solution founded on the principle of internal self determination in areas of
historical habitation of the Tamil – speaking Peoples, based on a federal
structure within a United Sri Lanka.”

“ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கைக்குள் தமிழ்ப் பேசும் மக்களின் வரலாற்று ரீதியிலான வாழ்விடப்பகுதிகளில் உள்ளக சுயநிர்ணய உரிமைக் கொள்கைப் பிரகாரம் சமஷ்டிக் கட்டமைப்பின் அடிப்படையில் அமைந்த தீர்வொன்றை ஆராய்தல்” என்பதாகும். அக்கால கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தி அரசியல் தீர்வை எட்டவேண்டுமென்று நாம் அறிவித்தோம். அக்காலம் தான் தமிழரின் உச்சபலம் வெளிப்பட்ட காலம்.

அந்த அறிக்கையில் தான் முதன்முறை கனடா நாட்டில் கியூபெக் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் கனேடிய சமஷ்டி நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் முன்வைக்கப்பட்ட “உள்ளக சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு “Internal Right of Self determination” என்றும், மறுபக்கத்தில் இக்கோட்பாடு, தீர்வு ஏற்கப்படாதுவிட்டால் அம்மக்களுக்கு வெளியக சுயநிர்ணய உரிமையைப் பயனுறுத்தும் உரிமை உண்டு”. (External Right of Self determination) என்ற கோட்பாடு பற்றியும் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டு அடிப்படையில் வரைவிலக்கணம் வகுக்கப்படுகின்றது.

இத்தகை சார்ந்த வரைவிலக்கணம் “ஒஸ்லோ உடன்படிக்கை”யின் வரைவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கைகளில் முக்கியம் பெற்றிருப்பதை மக்கள் அறிந்திருப்பார்கள். 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பின்னர் அந்த அடிப்படையிலான ஒரு அரசியலமைப்புத் தீர்வு இனப்பிரச்சனைக்குத் தீர்வாக அமையும் என்று ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ் மக்கள் அங்கீகரித்து வந்துள்ளனர். இதற்கு முன் 1976களில் திம்புக்கோட்பாட்டுக்கு முக்கியம் பெற்றிருந்தது.

தமிழரசுக் கட்சிக்குத் தடைவழக்குகள்

உள்ளக சுயநிர்ணய உரிமை பற்றி ஒரு வார்த்தை இத் தருணத்தில் கூறவேண்டும். 2014ஆம் ஆண்டு “சிங்களத் தீவிரவாதிகள் உச்ச நீதிமன்றத்திலே தமிழரசுக் கட்சியை தடைசெய்ய வேண்டும்” என்று ஒரு வழக்கைத் தாக்கல் செய்தனர்.

தமிழரசுக் கட்சியின் அமைப்பு விதியிலும், 2013 மாகாணசபைத் தேர்தலின் போது தமிழரசுக் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் சுயநிர்ணய உரிமை, சமஷ்டி, தன்னாட்சி பற்றிக் கூறப்பட்டிருப்பதால் அவை நாட்டைப் பிளவுபடுத்தி விடும் அதனால் தமிழரசுக் கட்சியைத் தடைசெய்ய வேண்டும். திரு.சம்பந்தன், மாவை.சேனாதிராசா அவர்களின் அரசியல் உரிமைகள் பறிக்கப்பட வேண்டும். அதற்கான தீர்ப்பு வழங்க வேண்டும்” என்பது தான் அந்த வழக்கு. ஐந்து வழக்குகள் திரு.சம்பந்தன் மீதும், ஏழு வழக்குகள் மாவை சேனாதிராசா மீதும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குகள் மூன்று ஆண்டுகள் நடைபெற்றன. 2017 ஓகஸ்ட் 04ந் திகதி தீர்ப்பு அப்போது பிரதம நீதியரசர் “டெப்” தலைமையில் மூன்று நீதியரசர்கள் தீர்ப்பு வழங்கினர். அரசியலமைப்பு மற்றும் இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பான ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்ப்பு. ஜனாதிபதி சட்டத்தரணிகள் மூத்த வழக்கறிஞர் கனக ஈஸ்வரன், திரு.சுமந்திரன் குழாத்தினர் வாதாடினர். மிக முக்கியமாகப் பல நாடுகளின் அரசியலமைப்புக்கள் நீதிமன்றத் தீர்ப்புக்கள் வாதத்தில் முன்வைக்கப்பட்டன. பாராளுமன்றில் புதிய அரசியலமைப்பு இனப் பிரச்சனைக்குத் தீர்வு வரைவுகள் தயாரிக்கப்பட்ட காலம் 2016 முதல் 2018 வரை.

அந்த வரலாற்றுத் தீர்ப்பில் கூறப்பட்டது என்னவெனில், “இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோரிக்கைகள் உள்ளக சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டுக்கு உட்பட்டன. தமிழரசுக் கட்சி தமிழர் இனப்பிரச்சனைக்காக சமஷ்டி அரசியல் தீர்வையும் கோரலாம், “அது நாட்டைப் பிளவுபடுத்தாது” என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கனடா நாட்டில் கியூபெக் மக்களுக்கு அரசியலமைப்பில் சமநீதி கிடைக்கவில்லை என்பதால் அரசியல் நீதிகோரி நடத்திய வழக்கில் கனடிய சம்டி நீதிமன்றத் தீர்ப்பு அப்படியே எங்கள் வழக்கிலும், தீர்ப்பிலும் பதிவு செய்யப்பட்டிருப்பது பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நீதி கோருவதற்கு உந்து சக்தியாக, ஆதாரமான முன் உதாரணமான தீர்ப்பாக இருப்பது முக்கியமானதாகும்.

சென்ற அரசு காலத்தில் மாகாணங்களுக்கிருந்த நிதி அதிகாரத்தைப் பறிக்க “திவிநெகும்” சட்டம் கொண்டுவரப்பட்டது. எனது பெயரில் உச்சநீதிமன்றில் போடப்பட்ட வழக்கு “திவிநெகும்” சட்டத்தை திருப்பிப் பெற வைக்கும் தீர்ப்பை வழங்கியது. உச்ச நீதிமன்றம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட நிதி அதிகாரத்தைக் கூட அன்றைய அரசு திருப்பிப்பெற சட்டம் கொண்டுவந்தது.

இந்த அடிப்படைகளில் தான் 2015, 2016இல் புதிய அரசியலமைப்பை உருவாக்க பாராளுமன்றம் ஏகமனதாகத் தீர்மானித்த பொழுது இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வுகாண தமிழ்க் கூட்டமைப்பு முயற்சிகளை எடுத்தது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டது

ஜனாதிபதி 2018 ஒக்டோபர் 26ல் தன்னிச்சையாக எதேச்சாதிகரமாகப் பாராளுமன்றத்தைக் கலைத்ததனால் அரசியலமைப்பின் 19ம் விதி முற்றுமுழுதாக மீறப்பட்டுள்ளது. இதனை எதிர்த்துத் துணிச்சலோடு உச்ச நீதிமன்றத்திலே எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்றக் குழுவின் தலைவர் வழக்காடினார். மூத்த ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் தலைமையில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், அவர்கள் வழக்கறிஞர் குழாம் வாதாடினர். திடசங்கற்பான வரலாற்றுப் பெருமை மிக்க தீர்ப்பைப் பெற்றதால் பாராளுமன்றம் மீண்டும் செயலாற்ற முடிந்தது. நாடும் ஜனநாயகமும் பெருமைப்பட்டது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவை பதவி நீக்கி, மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமராக்கியமையும் அரசியலமைப்புக்கு விரோதமானதே. சர்வதேச சமூகம் ஜ.நா. நிதி வழங்கும் நிறுவனங்கள் இலங்கைக்கு வழங்கவிருந்த, வழங்கிய நிதி உதவிகளையும் நலத்திட்டங்களையும் திருப்பிப் பெற்றுவிட்டன. தம் முழுமையான எதிர்ப்பை நடைமுறையில் சர்வதேசம் தெரிவித்துவிட்டது.

ஜனாதிபதியின் அரசியல் குற்றம்

அப்படியானால் அரசியல் அமைப்புக் குற்றங்களைத் தொடர்ச்சியாக இழைத்துவரும் ஜனாதிபதி ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் பெரும்பான்மை வாக்குகளுடனும் ஏகமனதாகவும் நிறைவேற்றிய 30/1, 34/1, 40/1 தீர்மானங்களை நிறைவேற்ற மறுத்து, இலங்கைத் தீவின் முக்கிய தீர்க்கப்படாத இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணக் கூடிய அரிய சந்தர்ப்பங்களையும் போர் குற்ற விசாரனைகளையும் நிராகரித்து நிற்கும் ஜனாதிபதி மீது அரசின் மீது சர்வதேச நாடுகளும், ஐ.நா அமைப்புக்களும் பிரதமராக இராஜபக்ஷவை நியமித்த போது அதற்கு எதிராகச் செயல்பட்டது போல ஏன் நடவடிக்கைகளை எடுக்கவில்லை என ஆதங்கப்படுகிறோம். இவை தொடர்பில் சர்வதேச சமூகத்துடன் தமிழர் பிரதிநிதிகள் இராஜதந்திர முறையில் பேச்சு கேள்வி எழுப்புகிறோம். பேச்சு நடத்த வேண்டும் என்பது காலத்தின் தேவை.

ஏப்ரல் 21 குண்டுவெடிப்புக்கள்

இப்பொழுது 2019 ஏப்ரல் 21ஆம் நாள் ஐ.எஸ்ஐ.எஸ் தற்கொலைக் குண்டுதாரிகள்இலங்கையின்கொழும்புதலைநகரிலும்,மட்டக்களப்பிலும் எட்டு இடங்களில் யேசு கிறிஸ்து உயிர்ப்பித்த ஈஸ்டர் ஞாயிறு நாளில் தேவாலயங்களிலும் சுற்றுலாப் பயணிகள் தங்கி நடமாடும் பிரபல விடுதிகளிலும் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளனர். பேர் அழிவையும், போர் அச்சத்தையும் இலங்கையில் ஏற்படுத்தி விட்டது. உலகம் முழுவதும் பேரலையையும், எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தி விட்டது. ஜனாதிபதியும், அரசும் இப்பேரழிவைத் தடுப்பதில் தமக்குள்ள பொறுப்பை நிறைவேற்றவில்லை என்ற குற்றம் சுமத்தப்படுகிறது.

இலங்கை இனப்பிரச்சனையில், இனப்போரில் இராணுவம் இழைத்த போர்க்குற்றங்களில் ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களுக்கு அரசு அனுசரனை வழங்கிய போதும் ஜனாதிபதி வெளிநாடுகளின் தீர்மானங்களை, தலையீடுகளை ஏற்கமாட்டோம் என்று ஐ.நா.சபை வரை முழக்கமிட்டார்.

ஆனால் ஏப்ரல் 21ன் பின் சர்வதேச நாடுகளின் தலையீடுகளும், உளவுத்துறைகளின் நடவடிக்கைகளும் இலங்கைக்குள் வந்து விட்டன. இலங்கைக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் இந்தியாவுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாக இந்தியா குறிப்பிட்டுள்ளது இயல்பானதே.

சென்ற யூன் 09ஆந் திகதி இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திரமோடியும் இலங்கை வந்து இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். தமிழர் தரப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களையும் சந்தித்துள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ் இஸ்லாமிய அடிப்படைவாத அரசமைக்கும் இயக்கம் தற்கொலைக் குண்டுதாரிகள் குண்டு வெடிக்க வைத்துப் போரைத் தொடங்கிவிட்டனர்.

இலங்கை வரலாற்றில் இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதத்தை விட பௌத்த சிங்கள அடிப்படைவாத மேலாதிக்கமும் பேரினவாதமும் ஏனைய மதங்களையும், தமிழினத்தையும் அடக்கி ஒடுக்கி அழித்துவிட அரசியல் அடிப்படையிலும் எடுத்து வரும் நடவடிக்கைகளும் எந்தவகையிலும் குறைந்தது அல்ல என மதிப்பிட வேண்டும். மத, இன ஜனநாயக சமத்துவம் இலங்கையில் இல்லை என்பது வெளிப்படை.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பினால் 250 மக்கள் கொல்லப்பட்டனர், 500 பேர் வரை காயமடைந்தனர். பொருளாதார சமூக ரீதியில் பேரழிவு ஏற்பட்டபோது சர்வதேசம் இலங்கைக்கு பாதுகாப்பு வழங்கவேண்டுமென இலங்கைக்குள் வந்து விட்டன. இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதம் அரசமைப்பதையோ பயங்கரவாத நடவடிக்கைகளையோ நாம் நினைத்துப் பார்க்கவில்லை. சர்வதேசத்துடன் நாமும் ஒன்றுபட்டு எதிர்த்து நிற்கின்றோம்.

தமிழ் மக்கள் 60 ஆண்டுகள் அவலம்

ஆனால் அறுபது ஆண்டுகால இலங்கையின் இனப்போரிலும் இனக் கலவரங்களினாலும் இலட்சக்கணக்கான தமிழ் மக்களும் அவர் சந்ததிகளும், சொத்துக்களும் மதிப்பிடமுடியா அழிவுகளைக் கண்டுள்ளது. 2009 போர் இறுதிவரையில் போரில் பயன்படுத்தத் தடைவிதிக்கப்பட்ட ஆயுதங்கள் விஷவாயுக் குண்டுகள் கொத்துக் குண்டுகள் அவை தேமாபரிக், பொஸ்பரஸ் குண்டுகளெனச் சொல்லப்படுகிறது. அவை பயன்படுத்தப்பட்டன என அறிக்கையிடப்படுகின்றது. இனப்போருக்கான காரணங்கள் இன்றும் உலகம் முழுவதும் ஐ.நா.மனித உரிமைப் பேரவையிலும் தீர்மானங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நாட்டில் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணுவது கேள்விக்குறியாகவே தோன்றுகிறது. தமிழ் மக்களின் தமிழர் வாழ்விடங்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை. இச்சந்தர்ப்பத்தில் உலகின் முன் இக்கருத்தை முன்வைக்கின்றோம். இந்த நிலையில் சர்வதேச சந்தர்ப்பங்கள் குறிப்பாக இந்திய நாட்டின் பாதுகாப்பு என்றுள்ள முக்கியத்துவம் இலங்கையை மையங்கொண்டுள்ளன. இச்சந்தர்ப்பங்களை தமிழ்த் தேசிய இனமும் அரசியல் கட்சிகளும் இழந்துவிடக் கூடாது என்று எண்ணுகிறோம். தமிழ் இன விடுதலைக்கு இச்சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தியே ஆகவேண்டும்.

அத்தோடு இனப் போரினால் அழிந்து போன வடக்கு கிழக்குத் தேசத்தையும், வீழ்ந்துபோன மக்களையும் சமூக, பொருளாதார ரீதியில் மீளக் கட்டியெழுப்புதல் வேண்டும் என எம் தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்டிருந்தோம். மக்களும் அங்கீகாரமளித்துள்ளனர்.

2015 தேர்தல்களின் முக்கியம்

ஆனால் 2015 ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் இலங்கை அரசுகளின் போக்கில் புதிய பாதை ஒன்றைத் திறந்திருந்தது. ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன தேர்ந்தெடுக்கப்பட்டார். நூற்றுக்கு மேற்பட்ட பொது அமைப்புக்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட்ட அரசியல் கட்சிகள் இராஜபக்ஷ ஆட்சியை மாற்றுவதற்கு மாற்றுத் திட்டமொன்றை முன்வைத்தது.

முக்கியமாக இலங்கையில் தமிழினப் பிரச்சனைக்குத் தீர்வு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது, தேர்தல் முறையை மாற்றுவது உட்பட்ட புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவது என்பன மக்களால் முன்வைக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன குறிப்பாக தமிழ்ப் பேசும் மக்களின் ஆதரவோடு வெற்றி பெற்றார்.

அதே குறிக்கோளோடு 2015 ஓகஸ்ட் பாராளுமன்றத் தேர்தலிலும் மைத்திரிபால சிறிசேனா தலைமையிலான சுதந்திரக்கட்சி, ஐ.தே. கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி ஒன்றுபட்டு ஆட்சியமைக்க மக்கள் அங்கீகாரமளித்தனர்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புவடக்குக் கிழக்கில் பெரு வெற்றி பெற்றது. அரசின் பங்காளிகளாகவோ, அமைச்சரவை பங்காளிகளாகவோ இருந்ததில்லை. தமிழினப்பிரச்சனைக்கான தீர்வைக் காண்பதற்கும் போரினால் சிதைந்த தமிழ் பேசும் மக்கள் தேசத்தையும், மக்களையும் மீளக் கட்டியெழுப்புதவற்கும் சர்வதேச அரங்கில் நிறைவேற்றப்பட்ட ஐ.நா. மனித உரிமைப் பேரவைத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதுமான தீர்மானங்களின் அடிப்படையில் அரசை ஆதரித்து வந்திருக்கிறது. 2016ல் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் பாராளுமன்றம் ஏகமனதாகத் தீர்மானமெடுத்திருந்தது.

புதிய அரசியலமைப்பு

புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதில் முக்கியமாக மூன்று விடயங்கள் முன்னிலை கொண்டிருந்தன.

1.இலங்கை இனப்பிரச்சனைக்கான தீர்வு

2.நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குதல்

3.தேர்தல் முறைகளில் பொருத்தமான மாற்றங்களை உட்படுத்தல். புதிய அரசியலமைப்பு, இனப்பிரச்சனைத் தீர்வு வரைவுக்காக பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படும் அரசியல் கட்சிகளின்

தலைவர்கள், பிரதிநிதிகள் அங்கம் வகித்தனர். அக் குழு “வழிகாட்டுக்குழு (steering committee) என்று அழைக்கப்பட்டிருந்தது. அதற்கு உதவியாக ஆறு உப குழுக்களும் நியமிக்கப்பட்டிருந்தன.

பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியலமைப்பு நிபுணத்துவமுடை யோரும் அரசியல் கட்சிகளும் சாட்சியங்கள் வழங்கினர். வழிகாட்டுக் குழு 78முறை கூடி அரசியலமைப்பு வரைவுக்காக முதலில் ஒரு இடைக்கால அறிக்கையைத் தயாரித்தது. பாராளுமன்றில் முன் வைத்தது.

அந்த அறிக்கை வெளிவந்ததும் எதிரணி பொதுஜன முன்னணி சிங்கள வழக்கறிஞர் சங்கம் என்பன இடைக்கால அறிக்கை நாட்டைப் பிளவுபடுத்தி விடும் எனத் தீவிர பிரசாரம் செய்தனர். உள்@ராட்சித் தேர்தல் காலத்திலும் அவ்வாறே பிரசாரத்திலீடுபட்டனர்.

அரசின் 2018 நவம்பர் 05ல் வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றில் முன்வைக்கப்படவிருந்தது. அடுத்து இடைக்கால அறிக்கைக்கு மேலாக பத்து அரசியலமைப்பு நிபுணத்துவம் வாய்ந்தவர்களின் மேம்பட்ட அறிக்கை 2018 நவம்பர் 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்தது. ஆனால் ஜனாதிபதி “ஒக்டோபர் 26” 2018ல் பாராளுமன்றத்தைக் கலைத்திருந்ததால் புதிய அரசியலமைப்பு மீதான நிபுணர் குழு அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படமுடியவில்லை. பொதுஜன பெரமுனை எதிரணியினர் “பாராளுமன்றத்தைக் கலைக்காதிருந்;தால் இனப் பிரச்சனைத் தீர்வுக்கான இடைக்;கால அறிக்கை, நிபுணர்குழு அறிக்கை என்பவற்றால் நாடு பிளவுபட்டிருக்கும், அதனால் தான் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு நடவடிக்கை எடுத்தோம்” என்று கூறினர். இதே வேளை தமிழர் தரப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக மாற்றுத் தலைமை தேடுபவர்கள் இடைக்கால அறிக்கையை நிராகரிக்குமாறு அழைப்பு விடுத்தனர்.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடைக்கால அறிக்கையை இனப்பிரச்சனைத் தீர்வுக்கு முற்றானதோ, ஏற்றுக் கொள்ளக்கூடியதோ என்று கூறியிருக்கவில்லை. ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வுத் திட்டமொன்றுடன் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தொடர்ந்து முயற்சித்து வந்தது என்பதே யதார்த்தமாகவிருந்தது. பாராளுமன்றத்திலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு அரசியலமைப்பு முன்வைக்கப்படும் பொழுது பாராளுமன்ற உறுப்பினர் 225 உறுப்பினரில் 157 உறுப்பினர் 2/3 பெரும்பான்மைப் பலத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவுடன் பேணி வந்திருக்கிறது. 2018 ஒக்டோபர் 26ல் பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைப்பதற்கு முன்னரே ஜனாதிபதியின் சுதந்திரக்கட்சி தேசிய அரசிலிருந்து விலகிவிட்டது. இதுவும் ஓர் அரசியல் தவறேயாகும். தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு விடுக்கப்பட்ட சவாலாகும்.

இச்செய்கையானது நன்றி மறந்த மைத்திரிபால சிறிசேனாவின் செயலாகும். புதிய அரசியலமைப்பில் நாட்டின் முக்கிய தேசியப் பிரச்சனையாக இருக்கின்ற தமிழ் இனப் பிரச்சனைக்கும் தீர்வு காண்பதற்குமாகவே ஜனாதிபதித் தேர்தலில் 62 இலட்சம் மக்கள் வாக்களித்து மைத்திரி பால சிறிசேனாவை வெற்றி பெறவைத்;தனர். இனப்பிரச்சனைத் தீர்வுக்கான ஓர் அரிய சந்தர்ப்பத்தை ஜனாதிபதி அற்பத்தனமாக முறியடித்து விட்டார். இச்செய்கையானது மீண்டும் ஒரு வரலாற்றுத்தவறாகும். பௌத்த அடிப்படைவாத நிலைப்பாட்டை ஏற்றுவிட்டார்.

இத்தனை 60 ஆண்டுகளுக்கு மேலான அரசியல் வரலாற்றுக்காலத்திலும் சிங்களத் தலைவர்கள் இனப்பிரச்சனைத் தீர்வு முதல் தமிழினத்தை ஏமாற்றியுள்ளனர் என்பதே எமது மதிப்பீடாகும். தமிழினப் பிரச்சனைத் தீர்வில் இதுதான் நிலைமை என்றால்; போருக்குப் பின்னர் பத்து ஆண்டுகளாகியும் சமூக, பொருளாதார ரீதியிலும் போரினால் அழிந்து போன தமிழர் தேசத்தையும் மக்களையும் மீளக் கட்டியெழுப்புவதிலும் சிறு முன்னேற்றமே ஏற்பட்டிருக்கிறது. பாரிய நிர்மாணங்கள் இன்னும் ஏற்படவில்லை.

சில அபிவிருத்தி முன்னேற்றங்கள் இருப்பினும் அடைந்த சில முன்னேற்றங்களை குறிப்பிட விரும்புகிறேன். இன்றைய அரசுடன் நடாத்திய எமதுபேச்சுவார்த்தைகளினால் 2017 சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் முன்னெப்பொழுதையும் விட வடக்குக் கிழக்கு மாநிலத்திற்கு பெருமளவில் அபிவிருத்தித் திட்டங்களும், நிதியும் ஒதுக்கப்பட்டிருந்தன.

இந்திய வீடமைப்புத் திட்டங்கள், அரசின் வீடமைப்புத்திட்டங்கள், 90ஆயிரம் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் திட்டங்களுக்கு 2750 மில்லியன், இன்னும் எமது கோரிக்கைக்கு இணங்க 10 ஆயிரம் வீடுகள் ஒவ்வொரு வீடும் 1 மில்லியன் பெறுமதி. திருமலைத்துறைமுக அபிவிருத்தி, காங்கேசன்துறைமுகம் அபிவிருத்தி பலாலி விமான நிலையம், மயிலிட்டி, பருத்தித்துறை, குருநகர் போன்ற இடங்களில் மீன்பிடித்துறைமுகங்கள், மீன்பிடிப்படகுகள் தரிக்கும் துறைகள் (Anchor points) காங்கேசன் சீமந்து தொழிற்சாலை நிலத்தில் தொழிற்பேட்டைகள், தொழில்நுட்ப மையங்கள் என வரிசைப்படுத்தலாம். 2019லும் வரவு செலவுத்திட்டத்தில் வன்னிப் பல்கலைக்கழகம் உருவாக்கம், பனை நிதியம் (Palmyrah Fund) இவ்வாண்டு ஐந்து பில்லியன் அறிவிக்கப்பட்டுள்ளது. நாம் எட்டு மாவட்டங்களுக்கும் 24பில்லியன்கள் கோரியிருக்கிறோம். அதைவிட எதிர்பாராதவிதமாக வடக்குக் கிழக்கு அபிவிருத்தி நடவடிக்கைக்காக கிராமிய துரித வேலைத்திட்டத்தில் ஒவ்வொரு தொகுதிக்;கும் 300 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிறப்பாக பல நூ றுமில்லியன்கள் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. மேலும் வடக்குக் கிழக்கு முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ள பல திட்டங்களை, ஒதுக்கப்பட்ட நிதிகளை நாம் குறிப்பிட முடியும்.

இருப்பினும் மீள்குடியேற்றத் திட்டங்களுக்கு இந்தியாவிலுள்ள எமது புலம் பெயர்ந்தவர்களை வரவழைத்து வாழ்வளிக்கவும் பல்கலைக்கழக மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் பொருளாதார மாற்றுத்திட்டங்களுக்கு மேம்பட்ட திட்டங்;கள்;, நிதி ஒதுக்குகள் இல்லாமை பெருங்குறைபாடாகவே இருக்கிறது.

தமிழரசுக் கட்சியின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடமையும் பொறுப்பும்.

ஐ.நா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள போர்க்குற்ற விசாரணையை உருவாக்குவதில் எமக்கிருந்த பங்கானது கணிசமானது. அந்த விசாரணைகளினால் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என்பதுடன் அதனடிப்படையில் தமிழ் இனப்பிரச்சனைக்கான தீர்வு ஏற்பட வேண்டும் அரசு பொறுப்புக் கூறலை நிறைவேற்ற வேண்டும் என்பதும் தான். இத்தகைய கடந்த காலச்சம்பவங்கள் இடம்பெறாமல்

தடுப்பதும், அதற்கான நிவாரணங்களைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதும் அதனை விட மாறுகால நீதி (Transitional Justice,
Truth Commission) உண்மைகள் கண்டறிதல் முக்கியமானதாகும்.

அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, உண்மைகளைக் கண்டறிவதில் கையாளவேண்டிய பொறுப்புக்கள், மற்றும் சர்வதேச இராஜதந்திர உபாயங்களில் வேலை செய்வதற்கான நிபுணத்துவ கட்டமைப்பையும் உள்வாங்குதலும் அவசியமானதாகும். அதே வேளை இலங்கையில் எமக்குரிய கடப்பாடுகளையும் பொறுப்புக்களையும் கண்டறிந்து, அடையாளப்படுத்தி அவற்றை முன்னெடுப்பதற்கான பொறிமுறைகளையும் வேலைத்திட்டத்தையும் உருவாக்க வேண்டும்.

வேலைத்திட்டங்கள்

1.வேலைத்திட்டத்தில் தமிழ்ப் பிரதேசங்களில் நிலஅபகரிப்பைத் தடுத்து நிறுத்துவதும்

2.அந்நிலங்களை திரும்பக்கையளிக்கச் செய்தலும் மக்களின் மீள்குடியேற்றத்தின் பொருட்டு மக்களுக்குச் சொந்தமான காணி களிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றிச் செல்லவைத்தலும்

மிக அவசியமானதாகும். இராணுவ ஆதிக்கம் தமிழ்ப் பிரதேசங்களில் நீக்கப்பட வேண்டும் என்பது மிக அவசியமாகும்;

3.தமிழ் நிலம், மொழி, பண்பாடு, மதவழிபாட்டுத் தலங்கள் அதன் சின்னங்கள் பாதுகாக்கப்படுதல் வேண்டும்;

4.மக்களின் உள உடல் ரீதியானதும் குறிப்பாக பெண்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தல் வேண்டும்;

5.இன அழிப்பை ஆவணப்படுத்துதலும் தத்துவார்த்த ரீதியில் நிரூபித்தலுக்குமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் வேண்டும்;

6.எதிர்காலஇளைஞர்சமுதாயத்திற்குஉலகோடுஒட்டியஉயர்கல்வியை தொழில்நுட்ப அறிவை, அறிவியல் அறிவை கற்பிப்பதும் பயிற்சி அளிப்பது, வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தலும் அவசியமாகும். பல்கலைக்கல்வியில் பொருளாதாரத்தில் உலக மயமாக்கல் சந்தைப் பொருளாதாரம் மற்றும் அறிவியல் தொழிநுட்பத்துறையில் புதிய பட்டத்துறைகள் உள்ளீர்க்கப்படவேண்டும். இதற்கு பொருத்தமான வகையில் அறிஞர்குழாம் ஆய்வினைச் செய்ய ஒழுங்குவேண்டும்.

அடிப்படையில எம்முன்னுள்ள உடனடிப் பணிகள்

இந்த அடிப்படையில் பிரேரணைகளை உருவாக்குவதிலும் சர்வதேச மற்றும் ஐ.நா.மனித உரிமைப் பேரவைக்கு அறிக்கையிடுதலும் முக்கியமானதாகும். இதற்குப் பொருத்தமான நாடுகளை வென்றெடுக்க வேண்டும். இதன் பொருட்டு நிபுணத்துவம் மிக்கவர்களையும்; சர்வதேச சட்டங்களினால் அனுபவங் கொண்டோரையும் சான்றோர்களையும் உள்ளடக்கிய ஆணைக்குழு ஒன்றைப் பிரேரிக்கின்றோம்.

நில ஆக்கிரமிப்பும் மீள்குடியேற்றமும்

இதுவரையில் 2003ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்திலே என்னுடைய பெயரில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா குழாத்தினர் எனது வழக்கில் எமக்கு சாதகமான தீர்ப்பொன்றை வெளியிட்டனர். அத்தீர்ப்பு முழுமையாக அரசினால் மதிக்கப்படவில்லை. ஆக்கிரமிக்கப்பட்ட நில உரிமையாளர்களால் யாழ் ஆயர் உட்பட 2176 வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நீதி இன்னும் கிடைக்கவில்லை. 2176 அகதி மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கெதிராக உயர்நீதிமன்றத்திலே நடைபெறும் வழக்குகள் திரு.கனகஈஸ்வரன், சுமந்திரன் முதலான வழக்கறிஞர் குழாம்கள் ஊதியமின்றி பல ஆண்டுகளாக வாதாடி வருகின்றனர். அவர்களும் மனித உரிமைகளுக்காக வாதாடும் ஏனைய வழக்கறிஞர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். இவற்றில் கணிசமான நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. இத்தகைய நிலைமைகளில் சைப்பிரஸ் – துருக்கி தொடர்பில் லிஸோடோவின் போராட்டங்கள் சர்வதேச வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கள் ஐ.நா. தலையீடுகள் பரிசீலிக்கப்பட வேண்;டும். அவை உதவியாக இருக்கும். வலி-வடக்கில் முழுப்பிரதேசமும் உயர் பாதுகாப்பு வலயமாக (High Security Zone) இருந்த பொழுதிலும் இதுவரை பெரும் பகுதி விடுவிக்கப்பட்டுள்ளது.

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் மீளக் கட்டியெழுப்பப்படுகிறது என்றாலும் மீனவ மக்கள் முழுமையாக குடியேற குடியேற்ற நிலங்கள் விடுவிக்கப்படவில்லை. பலாலி விமானத்தளத்தை அண்டிய மயிலிட்டி,பலாலி,வசாவிளான் விவசாய நிலங்கள் இன்னும் 3000 ஏக்கர் வரை விடுவிக்கப்படவில்லை. அதே போல கிளிநொச்சி, முல்லைத்தீவு, கேப்பாப்புலவு பிரதேசங்களில் பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

2015ன் பின் விடுவிக்கப்படும் என்ற காங்கேசன்துறைப் பிரதேசத்தின் இராஜபக்ஷ அரண்மனை உட்பட்ட நகுலேஸ்வரப் பகுதி 64 ஏக்கர், விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை, தலசெவன இராணுவ விடுதி, (ArmyResort) உட்பட்ட 30 ஏக்கர். காங்கேசன் சீமந்து தொழிற்சாலைக்குச் சொந்தமான 724 ஏக்கர் பிரதேசத்தில் 227 ஏக்கர் நிலங்கள் அரசு, இராணுவம் மற்றும் சுற்றுலாத்துறை சுவீகரிக்கத் திட்டமிட்டுள்ளது. தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

வவுனியாவின் எல்லைப் புறங்களில் காடுகள் அழிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன. திருமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி மன்னாரிலும் பல பிரதேசங்கள் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படவில்லை. இராணுவத்தினர் மேலும் நிலங்களை அபகரிக்க முயற்சிக்கின்றனர்.

எல்லாவற்றையும்விட தமிழர் பிரதேசங்களில் சைவக் கோவில்கள், தமிழர் கலாச்சாரப் பிரதேசங்களில் பௌத்த பிக்குகள் அத்துமீறி புத்தர் சிலைகளை வைப்பதும், சைவக் கோவில்களை ஆக்கிரமிப்பதும் தீவிரமடைந்துள்ளன. இவை மத மோதல்களையும் இன மோதல்களையும் தீவிரப்படுத்திவிடப் போகின்றன.

ஐ.நா.யுனிசெப் (UNICEF)நிறுவன அறிக்கைளின் படி 70மூஇ 80மூ குழந்தைகளும், கர்ப்பிணித்தாய்மார்களும் ஊட்டச்சத்தற்றவர்களாக கடந்த 20 ஆண்டுகளாகவே வடக்குக்கிழக்கு மாநிலங்களில்

போரின் பின்னர் மக்கள் வாழ்வாதாரம் உள்ளனர் என்று கூறுகின்றது. அதற்கும் மேலாக போரின் காரணமாக 90 ஆயிரம் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் வாழ்வாதார மற்றும் வாழ்க்கைத்துணையற்றும் எதிர்காலமற்றவர்களாய் ஏங்கியிருக்கிறார்கள். இந்த வாழ்வற்ற முழு மனிதகுல வளர்ச்சியற்ற விடயங்களில் மனிதாபிமான அடிப்படையிலான திட்டமிடல் அவசியமாகும். வாழ்விழந்தவர்களுக்கு மறுவாழ்;வு ஊக்குவிக்கப்பட்டு உதவிகள் வழங்கவேண்டும். வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் ஓரளவுதான் வெற்றி கண்டன. மாற்று வழிகளை ஆராய வேண்டும்.

பனை வளமும் பயன்பாடும்

உயிரைப் பணயம் வைத்து சீவப்படும் கள்ளு விற்பதற்கு தடை சீவப்படும் கள் பெருமளவில் நிலத்தில் தினமும் ஊற்றப்படுகிறது. அக்கள்ளிலிருந்து மதுபானம் தயாரிக்க வேண்டுமென்பதில்லை. அவ்வாறு மதுபானம் தயாரித்தாலும் அரிய மருத்துவ பானமாக்கி மக்கள் பாவனைக்கும் ஏற்றுமதிக்கும் உரிமையாக்கப்பட முடியும். அதைக் கையாள்வதற்கு உள்ள கூட்டுறவுத்துறையும் சீர்குலைக்கப்படுகிறது. கள்ளு பதநீராகவும், புளிக்காமல், வெறி ஊட்டமற்றதாக மக்கள் மருந்தாக ஒரு ஆரோக்கியமான பானமாக மக்கள் பருகலாம். அதைவிட தெற்கிலிருந்து செயற்கையாகவும் இறக்குமதி செய்து கள்ளு விற்பனை செய்யப்படுகிறது. சாராயம் வைன் போன்ற வெளிநாட்டு மதுபானம் விற்பனைக்கு தாராளமாக அனுமதிக்கப்படுகிறது. பெரு வருமானம் அரசினாலும் முதலாளிகளினாலும் முகவர்களினாலும் ஈட்டப்படுகிறது. எம்மக்கள் இளம் சமுதாயம் இதனால் சீரழிகிறது. எமது உள்@ர் உற்பத்திகளும் வருமானமும் சுரண்டப்படுகிறது. கொள்ளையிடப்படுகிறது.

இத்துறை வடக்கு மாகாணசபையிடமும் கூட்டுறவுத்துறையிடமும் கொடுக்கப்பட வேண்டும். அந்தச் சமூக மக்கள் நலன்களுக்கு அந்த இலாபம் பங்கிடப்பட வேண்டும். தற்போது திக்கம்; வடிசாலை மீளக் கட்டியெழுப்பப்படுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். பனை, தென்னை சமாசங்களின் எதிர்காலக் கட்டுமானங்களுக்கு திட்டம் வேண்டியிருக்கிறது. அதனையும் முன்னெடுப்போம்.

வேளான்விருத்தி

தமிழ் பிரதேசங்களில் தற்போது வரட்சி ஏற்பட்டுள்ளது. அதற்கு நிவாரணம் வழங்கவேண்டும் பிரதமர் நிதி அமைச்சருடன் பேசி போதிய நிவாரணம் விடுவிக்கப்படும். விவசாயிகள் உற்பத்திகள் இயற்கை உற்பத்திக்கு கொண்டுவரவேண்டும். மாற்றுவளப் பயிர்கள் உற்பத்தி விவசாயிகளுக்கு பொருத்தமானதாக இருக்க முயற்சிகள் எடுக்கப்படவேண்டும். விவசாய உற்பத்திகளை சந்தைப்படுத்தவும் அதற்குப் பொருத்தமான சந்தைகளையும், பொருளாதார மையங்களையும் உருவாக்கவும் வேண்டும். வடக்கில் திராட்சை, மரமுந்திரி (கஜு) ஏனைய பழவகைகள் வளமாக விளைகின்றன. இவற்றை மையமாகக் கொண்டும், பால் உற்பத்தியை மையமாகக் கொண்டும் பல திட்டங்களால் பொருளாதார வளத்தை ஏற்படுத்தலாம்.

ஊடகத்துறை அச்சுறுத்தல்கள்

ஊடகத்துறைச் சுதந்திரத்திற்காகப் போராடிய, சுசந்த தேசப்பிரிய மற்றும் பலர் வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஊடகத்துறை நிறுவனங்கள் அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. ஊடகவியலாளர்களுக்கு எதிராகப் பொய்வழக்குகள் அச்சுறுத்தல். இந்நிலமை ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள பெருங்கேடாகும். ஊடகத் துறையினருக்குப் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும்; வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்படல் அவசியமாகும்.

பௌத்த அடிப்படைவாதிகள் நடவடிக்கைகள்;

இந்த நாட்டு ஆட்சிகளினால், இராணுவத்தினால், பௌத்த தீவிரவாத சக்திகளினால் (அ) பல இலட்சம் ஏக்கர் நிலங்கள் வளமுள்ள வேளாண்மை நிலங்கள், குடியிருப்பு நிலங்கள், கடல் வளங்கள், கரையோரப்பிரதேசங்கள் தினமும் ஆக்கிரமிக்கப்படுகின்றன. (ஆ) நிலத்தடியிலும் நிலத்திலும் கனிம வளங்கள் இல்மனைட், மணல்,பனை வளங்கள் கொள்ளையடிக்கப்பகின்றன. (இ) மற்றும் மனித வளம், தமிழ் மொழி, கலை கலாச்சாரங்கள்,இனப்படுகொலைகள், தமிழ் மக்களின் இனச்செறிவு, சீர்குலைப்பு அதனால்; தமிழ்த் தேசிய இனத்திற்கு உரித்தான ஜனநாயக அடிப்படை உரிமைகள் மனிதாபிமான உருத்துக்கள் யாவுமே எம் தமிழர், முஸ்லீம்கள் தமிழ்ப் பேசும் இனப் பிரதேச மக்கள் ஆட்சி உருத்துக்கள் அழிக்கப்படுகின்றன. (ஈ) மத நம்பிக்கைகள், ஆன்ம நேயங்கள் யாவுமே எம் கண் முன்னால் பறிக்கப்படுகின்றன ஆக்கிரமிக்கப்படுகின்றன. (உ) கடந்த அறுபது ஆண்டுகளில் இடம்பெற்ற இனஅழிப்பு நடவடிக்கைகளை விட போர் முடிந்தது எனச் சொல்லியே ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்டிக் கொண்டிருக்கும் அரசு ஆட்சியாளர் அவரது அடிவருடிகளினால் கடந்த ஆண்டு ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற இனஅடையாள அழிப்பு நடவடிக்கைகளை சொல்லிமாளாது. எம் தமிழ் முஸ்லீம்

தேசத்தில் எம் மக்கள் இனச் செறிவை அடியோடு மாற்றியமைப்பதே (உhயபெந ழக நவாniஉ ஊழஅpழளவைழைn) ஆட்சியின் திட்டமாகும்.

எம் தமிழ் மக்கள் பிரதேசங்களில் குறிப்பாகக் கிழக்கில் நில ஆக்கிரமிப்பில் ஈடுபடும் முஸ்லீம் ஒரு பகுதியினர் பற்றியும் தமிழர் தரப்புப் பல தரப்பட்ட குற்றங்களைக் கூறிவருவதையும் அறிவோம். இது இன்னுமொரு இன மத மோதலுக்கு இட்டுச் சென்றுவிடும். இதனை தவிர்ப்பது மிக அவசியம்.

கல்முனை வடக்குச் செயலகம்

அண்மையில் அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் ஏற்கனவே அதனைத் தரம் உயர்த்துவதற்கு எம்மால் பலமுறை முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளனஃ .30 ஆண்டுகள் பிரச்சனை. இதனைத் தரமுயர்த்த பிரதமர் மற்றும் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவிடம் அண்மையிலும் 20 06 2019லும் திரு. சம்பந்தன் தலைமையிலும் எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களும் இக்கோரிக்கையை விடுத்துள்ளோம். இத் தரம் உயர்த்தலுக்கான முன்னோடி நடவடிக்கைகள் சென்ற ஏப்ரல் முதல் வாரத்திலேயே எடுக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 21 குண்டுவெடிப்புச் சம்பவங்களினால் இரண்டு மாதங்கள் தாமதம் ஏற்பட்டுவிட்டது. கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் முழுமையான அதிகாரங்களைக் கொண்ட செயலகமாகச் செயல்பட அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என உறுதிபடக் கூறுகின்றோம்.

இத் தீர்வுக்கு எதிராக சம்பந்தப்பட்ட முஸ்லீம் தரப்புக்கள் இனியும் செயல்படாமல் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் பூரணமாக இயங்க இணங்கவேண்டும் எனக் கோருகின்றோம்.

காணாமலாக்கப்பட்டோர்

வன்னி மண்ணிலே சென்ற மாதங்கள் வரையிலும் காணாமற் போனோரைத் தேடி கண்ணீர் விட்டுக் கதறி அழும் தாய்க்குலத்தின் துயரத்தைக் கேட்டோம். என் கணவன் எங்கே? என் மனைவி எங்கே? என் பிள்ளை எங்கே? என்று வானுலகம் வரை கேட்க குரல் எழுப்புகிறார்கள். நீதி எங்கே கிடைக்கப் போகிறது என்ற ஏக்கமும், ஆதங்கமும் நெஞ்சைப் பிளக்கிறது.

வல்லாண்மை மிக்க பாரதம்

இதனால் இந்துமா சமுத்திரத்தில் பிராந்தியத்திலே வல்லாண்மை வலுமிக்க பாரதம், அதன் பிரதமர் சென்ற 09ந் திகதியும் கொழும்புக்கு வருகை தந்தார். எம்முடன் பேச்சு நடத்தினார். எம் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண புதுடெல்லி வருமாறு அழைத்துள்ளார். கடந்த கால வெளியுறவுக் கொள்கையை விட இலங்கையில் தமிழ்த் தேசிய இனத்தின் தன்னாட்சியை நிலை நாட்டவும் சிறிய தேசிய இனங்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளவும் தமிழர் தேசத்தை, மக்களைப் பாதுகாக்கவும் புதிய கொள்கையைக் கோரி நிற்கின்றோம். அது அவசியமெனக் கருதுகிறோம். எங்கள் ஜனநாயகவழிப் போராட்டங்களை ஆதரிக்க வேண்டும் என வேண்டி நிற்கின்றோம். இலங்கையின் பாதுகாப்பு இந்தியாவின் பாதுகாப்பு என்ற அடிப்படையில் தமிழர் பிரதேசங்களின், மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதை இந்தியாவிடம் வலியுறுத்தி நிற்கின்றோம்.

சிலப்பதிகார காவியம் தரும் பாடம்

“சிலப்பதிகார காவியத்தை வடித்த இளங்கோ அடிகள் பாயிரத்திலே”, அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும்”. என்று ஆன்மத்தைத் திறந்து அறிவித்தார்.

தன் கணவன் கோவலனை நியாயமற்ற முறையில் கள்வன் என்று கொன்றொழித்த பாண்டிய மன்னனைப் பவளம் பதித்த காற்சிலம்பை உடன் கொண்டு சென்று மதுரையில் அரண்மனையிலே கேட்டாள் கண்ணகி, யார் கள்வன் என்று? அந்தச் சிலம்பை சிதறடித்த பொழுது உண்மை தெரிந்த பாண்டிய மன்னன் மூர்ச்சித்து வீழ்ந்து கிடக்கின்றான். மதுரை மாநகரம் தீப்பற்றி எரிகிறது. இதனைக் கேட்க எம் நெஞ்சம் பற்றி எரிகிறது. இலங்கையில் அந்த போர்க்குற்ற பிரேரணையைத் தான் ஐ.நா உரிமைப் பேரவை சர்வதேச விசாரணை என்று தீர்மானம் நிறைவேற்றி செயலாற்றுகிறது. அதற்கு நாம் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

சாத்வீகப் போராட்டம்

ஐரிஸ் போராட்டக் களத்திலிருந்து பிரிட்டிஸ் அரசால் கைது செய்யப்பட்ட (Terence Mc sweiny) என்ற தேசபக்தன் எழுபது நாட்களுக்கு மேல் பிரிட்டிஸ் சிறையில் உண்ணாவிரதமிருந்து சாகும்வேளையில் இரத்தத்தால் வடித்த வரிகளைப் பாருங்கள் ‘This Contest is one of endurance and it is not they who can suffer most
who will conquer” “இப் போராட்டம் தாங்கிக் கொள்ளும் சக்தியில் தங்கியிருக்கிறது. கூடிய துன்பத்தைத் தாங்குபவர்களே இறுதியில் வெற்றி பெறுவர்” என்பது தான். அதற்குத் தேவையான கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஆகவும் செயலாற்றுவர் எனும் உணர்வோடு உரிமையோடு கூட்டமைப்பில் அங்கம் வகிப்பர். போராட்டத்திற்கான கட்டமைப்பை ஒருமைப்பாட்டோடு உருவாக்குவோம் என்பதை அறுதியிட்டுக் கூறிக்கொள்கின்றேன். இதன் பொருட்டு “தேசிய சபை” உருவாக்குவதற்கு முன்னின்று உழைப்பேன் என உறுதியளிக்கின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநாடு ஒன்றும் இந்த ஆண்டில் நடத்த வேண்டுமென அழைப்பு விடுக்கின்றேன்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் எம்முடன் செயலாற்ற வேண்டும். அரசியல் தீர்விலும், தமிழர் தாயகத்தின் பொருளாதார அபிவிருத்தியிலும் அவர்கள் பங்களிப்புப் பெரும் பயனுற வேண்டும்.

இம் மாநாட்டின் மூலம் அரசுக்கும், உலகிற்கும் விடுக்கும் செய்தி

1.இலங்கை அரசானது ஐக்கிய இலங்கைக் கட்டமைப்பில் வடக்கு கிழக்கு மாநிலத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கும் அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்த வேண்டும் என்றும்

2.தமிழ் இன அடையாளங்களை அழிக்கும் மற்றும் இனக்குடி பரம்பலை குலைக்கும் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும்

3.தமிழ் முஸ்லீம் மக்களுக்குரித்தான சொந்த நிலங்களில் அகதிகளாயுள்ள மக்கள் மீளக்குடியேற்றப் பொருத்தமாக அக்காணிகளை அபகரித்து நிற்கும் இராணுவத்;தினர் வெளியேறிச் செல்ல உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்

4.போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பிரதேசங்களின் மீள்குடியேற்றங்கள் மற்றும் மீள் நிர்மான பணிகளுக்கு தேவையான நிதிகளையும் வளங்களையும் உடன் விடுவிக்க வேண்டும். அத்துடன் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட தொகுதியில் 8மாடி கட்டடம் கட்டுவதை அமைச்சரவை அங்கிகரித்து விட்டது அவ்வேலையைத் தொடங்குவதற்கான நிதி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்

5.காணாமல் போனோர் விடயத்தில் அரசு உண்மையைக் கண்டறியும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அரசு இவ் விடயத்தில் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் வற்புறுத்துகின்றோம்;

6.பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டும். நீண்ட காலம் சிறையில் சீரழியும் தமிழ்க் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்

7.வடக்கு, கிழக்கு பிரதேச வேலைவாய்ப்பற்ற இளைய சமுதாயத்திற்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்

8.வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வன விலங்குத் திணைக்களம், தொல்பொருளியல் திணைக்களம், கனிமவள திணைக்களம், கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், மகாவலி அதிகாரசபை முதலான திணைக்களங்கள் மக்களின் மீள் குடியேற்றப் பிரதேசங்களிலும் மக்கள் வாழ்விடங்களிலும் மக்கள் விவசாய நிலங்களிலும் எழுந்தமானமாக ஊடுருவி கையகப்படுத்துவது மற்றும் மீள் நிர்மானப் பணிகளுக்குத் தடை விதிப்பதும் உடன் நிறுத்தப்பட வேண்டும்

9.பௌத்த அடிப்படைவாதிகள் இந்து மக்கள் கோவில்களில் இந்து கலாச்சார மையங்கள் புனித பிரதேசங்களில் ஆக்கிரமிப்பு செய்து புத்தர் சிலைகளையும் விக்கிரகங்களையும் கட்டிவரும் அத்துமீறல் அடாவடித்தனங்களுக்கு அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்

10.இன்றுள்ள அரசியலமைப்பில் இணைக்கப்பட்டுள்ள 19ஆவது திருத்தச்சட்டத்தை நீக்க வேண்டுமென பொதுஜன பெரமுனாவும் மகிந்தராஜபக்ஷவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவும் பெருமெடுப்பில் தீவிரப் பிரசாரத்திலீடுபட்டுள்ளனர். இம் 30/1,முயற்சிகளை34/1, 40/1தடுத்து நிறுத்த வேண்டும்;

11. ஐ.நா மனித உரிமைப் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முழுமையாக அரசினால் நிறைவேற்றப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை ஐ.நா. மனித உரிமைப் பேரவையும், சர்வதேச சமூகமும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

இம் மாநாட்டிலிருந்து எதிர்வரும் மூன்று மாதகாலத்துக்குள் அரசு நம்பகத்தன்மையும் அர்த்தமுள்ளதுமான நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அல்லது ஜனநாயக வழிகளில் மக்களை அணிதிரட்டி போராட்டங்களில் ஈடுபடுவதென்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு தீர்மானிக்க வேண்டும் என வற்புறுத்துகின்றோம்.

தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் அனைத்து சக்திகளையும் அணிதிரட்டி ஜனநாயக வழியில் போராட்டங்களை நடாத்தவேண்டுமென்ற பொறுப்பை வரலாற்றுக் கடமையை நான் தெரிவு செய்து கொண்டிருக்கின்றேன். பாரதப்போரிலே யுத்த காலத்திலே பார்த்தசாரதியாக நின்ற பரமாத்மா கிருஸ்ணன் அர்ச்சுனனிடம் போதித்ததென்வென்றால் “கடமையைச் செய் பலனை எதிர்பாராதே” என்பது தான். அதுதான் பகவத்கீதையின் அடிநாதம். எம் கடன் பணி செய்வது, ஆனால் அது தமிழினத்தின் விடுதலைக்காக பயனுற வேண்டும் என்பது தான் எம் இதய வேட்கை. எனவே ஏற்கனவே கூறியது போல நாம் எல்லோரும் தமிழ்த் தேசத்தின் தமிழ் – முஸ்லீம், தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலைக்காகவும்; விடிவுக்காகவும் ஒன்றுபட்டுழைப்போம் என்ற திடசங்கற்பத்துடன் உங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றி கூறி விடைபெறுகின்றேன்“ என்றார்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,397,Jaffna,3401,lanka,8704,medical,7,Medicial,39,sports,367,swiss,15,technology,79,Trending,4266,Videos,10,World,587,Yarlexpress,4275,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: ‘3 மாதத்திற்குள் அரசு அர்த்தமுள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால் போராட்டம் வெடிக்கும்’: மாவை மீண்டும் முழக்கம்!
‘3 மாதத்திற்குள் அரசு அர்த்தமுள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால் போராட்டம் வெடிக்கும்’: மாவை மீண்டும் முழக்கம்!
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZjGX1NYSKsrAxDs76isSC07Gt8IRtEskDZsLLnrR-bh983d4EbyRHrnluddjFFuaq4p4jLdkvTKf3jn31l_o5avooMZ2TcijXyopTww-xg2zT1zvMrTHYdkhs_IF2fTNLQeueV0mkl7I/s640/a-37-696x522.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZjGX1NYSKsrAxDs76isSC07Gt8IRtEskDZsLLnrR-bh983d4EbyRHrnluddjFFuaq4p4jLdkvTKf3jn31l_o5avooMZ2TcijXyopTww-xg2zT1zvMrTHYdkhs_IF2fTNLQeueV0mkl7I/s72-c/a-37-696x522.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2019/06/3_30.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2019/06/3_30.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content