அமேசான் காடு பற்றி எரிந்துகொண்டிருக்கும் துயர சம்பவம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த மூன்று வாரங்களாக எரியும் இ...
அமேசான் காடு பற்றி எரிந்துகொண்டிருக்கும் துயர சம்பவம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த மூன்று வாரங்களாக எரியும் இந்த தீயால் பிரேசில் முழுவதும் புகை மூட்டமாக மாறி சூரியனையே மறைத்துவிட்டது.
இந்நிலையில் அமேசான் காட்டுக்குள் வாழ்ந்து கொண்டிருந்த பல வகையான விலங்கினங்கள், பறவை இனங்கள், பூச்சியினங்கள் அழிந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதையொட்டி நேற்று முழுவதும் அந்த தீயில் சிக்கி இறந்த தன் குட்டி குரங்கை தாய்க் குரங்கு மார்போடு கட்டியணைத்து கதறி அழுவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைராலாகப் பரவி வருகிறது. அந்த புகைப்படத்தைக் காணும் அனைவருக்கும் ஒரு கணம் இதயம் இரக்கத்தில் மூழ்கியது.
மேலும் அந்த புகைப்படத்தை ஷேர் செய்து அமேசானுக்காக பிராத்தனை செய்யுங்கள் ( pray for amazon ) என்ற ஹாஷ்டாக்கும் வைரலானது.
உண்மையிலேயே இது அமேசான் காட்டுத் தீயினால் நடந்த சம்பவமா என ஆராய்ந்ததில் அது 2017 ஆம் ஆண்டு இந்திய புகைப்படக்கலைஞர் அவினாஷ் லோதியால் எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது. ஜபால்பூர் என்ற இடத்தில்தான் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவினாஷ் பகிர்ந்துகொண்ட போது “ இது என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான புகைப்படம். இதுபோன்ற விலங்கின் உணர்ச்சியை புகைப்படமாக்கியது அதுவே முதல் முறை. உண்மையை சொல்ல வேண்டுமானால் அந்த குழந்தைக் குரங்கு மயக்க நிலையில் இருந்தது. அதைக் கண்ட தாய்க் குரங்கு இறந்ததாக நினைத்து மனமுடைந்துவிட்டது” என விளக்கமளித்துள்ளார்