ஒருவருக்கு குறையாக தெரிந்தது மற்றொருவர்க்கு பெரிய வாய்ப்பாக தெரியும். இதைக் கச்சிதமாக புரிந்து சாதித்தவர் தான் ஜாக்மா (Jack Ma). சீனாவின் மிகப்பெரிய இ
இணையத்தை சீனாவுக்கு அறிமுகம் செய்து சாதித்த அலிபாபா.. |
ஒருவருக்கு குறையாக தெரிந்தது மற்றொருவர்க்கு பெரிய வாய்ப்பாக தெரியும். இதைக் கச்சிதமாக புரிந்து சாதித்தவர் தான் ஜாக்மா (Jack Ma). சீனாவின் மிகப்பெரிய இணைய நிறுவனமான அலிபாபாவின் நிறுவனர் இவராவாா். சிறுவயதில் ஆங்கிலத்தில் பேசவிரும்பி அருகில் இருந்த நகரின் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று அங்குள்ள வெளிநாட்டு சுற்றுலாவாசிகளுக்கு இலவச வழிகாட்டியாக இருந்திருக்கிறார். அதன் மூலம் அவருக்கு பல வெளிநாட்டு நட்புகளும் கிடைக்க அது ஒரு புதிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.
ஜாக் சற்று குள்ளம். மிகவும் ஒல்லியான தேகம். இதனால் பிறர் ஏளனம் செய்து
தாழ்வுமனப்பான்மை அவரிடம் வளர்ந்தது. இருந்தாலும் போராடும் குணம் அவரிடம்
இயல்பாகவே இருந்தது. சீனாவில் கலை அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு கூட
நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். மூன்று வருடம் தோல்வி. நான்காவது முறை வெற்றி
பெற்று கல்லூரியில் சேர்கிறார். அதன்பிறகு அந்தக் கல்லூரியின் மாணவர் தலைவராக
உருவாகும் அளவிற்கு வளர்கிறார். படித்துமுடித்து ஒரு பல்கலைகழகத்தில் பகுதிநேர
ஆங்கில விரிவுரையாளராகவும் சேர்கிறார். அதற்குமுன் அவர் பல வேலைகளுக்கு
முயற்சித்திருக்கிறார். கிட்டத்தட்ட முப்பது விதமான வேலைகளுக்கு முயற்சித்தும்
ஒன்றும் கிடைக்கவில்லை. இதில் காவல்துறை உள்பட பலரும் அவரை நிராகரித்தார்கள்.
ஒரு வேடிக்கையான நிகழ்ச்சி. அப்போது அவரது ஊருக்கு KFC வந்திருக்கிறது. வேலைக்கு
ஆள் எடுத்திருக்கிறார்கள். அவர் உட்பட நேர்முகத்தேர்வுக்கு 24 பேர்
வந்திருக்கிறார்கள். அதில் 23 பேரை வேலைக்கு எடுத்திருக்கிறார்கள், இவர் ஒருவரை
தவிர. மனுஷனுக்கு எப்படி இருந்திருக்கும்? எனக்கு மட்டும் ஏன் இப்படி
நடக்குதுன்னு நாம் புலம்புவோம் இல்லையா? அவர் அப்படி புலம்பவில்லை.
அவர் ஹாவர்ட் பல்கலைக்கழகத்துக்கு 10 முறைக்கு மேல் விண்ணப்பித்தும்
நிராகரிக்கப்பட்டிருக்கிறார். பின்னாளில் அதே பல்கலைக்கழகம் அவரை சிறப்பு
விருந்தினராக அழைத்தமை வரலாறு.
இணையம் வளர ஆரம்பித்த 1996இல் நண்பர்களுடன் அமெரிக்காவிற்கு சென்றிருக்கிறார்.
அங்குதான் இணையம் பற்றி அவருக்கு தெரிய வருகிறது. தேடுபொறியில் எதையாவது தேடிப்
பார்ப்போமென்று ’பீர்’ என்று டைப் பண்ணினால் எல்லா நாட்டு பீர்களும்
வந்திருக்கின்றன. சீனாவைத் தவிர. மேலும் ஒரு சீன வெப்சைட் கூட அவர் கண்ணில்
படவில்லை. ”என்னடா இது சீனாவிற்கு வந்த சோதனை... ஊருக்கு போறோம். முதல் வேலையா
வெப்சைட் கம்பெனி தொடங்குறோம்” என்று கிளம்புகிறார்.
நினைத்தபடியே அவர் சீனா வந்ததும் இணையதள நிறுவனம் தொடங்கி இணைய தொடர்பு கொடுத்து
அதை பத்திரிகைகளுக்கு, வர்த்தகர்களுக்கு அறிமுகப்படுத்த அழைத்தார். அதுவும் ஒரு
காமெடி. இணையத்தை தொடர்பு கொடுத்துவிட்டு முதல் இணைய பக்கம் லோடாக காத்திருக்க,
இரண்டு மணிநேரம் கழித்து அது லோடு ஆனதாம். இப்படி ஒரு கடினமான சூழ்நிலையில் அவரது
நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக சீனாவிற்கு இணைய உலகை அறிமுகப்படுத்தியது.
ஆரம்பக்கட்ட சறுக்கல்களுக்கு பிறகு அலிபாபா.கொம் என்ற ஒன்லைன் வர்த்தக இணையதளத்தை
நண்பர்களுடன் இணைந்து உருவாக்குகிறார் ஜாக்மா.
அடுத்து மளமளவென்று வேலைகள் ஆரம்பித்து வளர்கிறது. அலிபாபா வளர்ச்சியின் வேகம்
கண்டு அடுத்தடுத்து மூன்று முதலீட்டு நிறுவனங்கள் சுமார் 25 மில்லியன் டாலர்கள்
முதலீடு செய்கின்றன. அடுத்து எந்த பெரிய முதலீடும் கோராமல் அசுர வளர்ச்சி
அடைகிறது. அலிபாபா ஹாங்காங் பங்குசந்தையில் நுழைய அனுப்பிய விண்ணப்பம்
நிராகரிக்கப்படுகிறது. ஜாக்மாவின் வாழ்வில் முதல்முயற்சியில் எப்போதும் ஒரு
தோல்வியும் அதன் பிறகு ஒரு பெரும் அசுர வெற்றியும் கிடைப்பதே வழக்கம். அதே போல
ஹாங்காங் சந்தையில் கிடைக்காத அனுமதி அமெரிக்க பங்குசந்தையில் கிடைக்கிறது.
வெறும் 12% நிறுவன பங்குகளை மட்டுமே பங்குசந்தையில் விடுகிறார். அலிபாபாவின்
அசுரவளர்ச்சி உலகம் அறிந்த ஒன்று என்பதால் பங்கு வெளியிட்ட முதல்நாளே பங்கின்
மதிப்பு எகிறியது. இன்று உலகத்திலேயே பங்குசந்தையின் மூலம் அதிக மூலதனம் திரட்டிய
நிறுவனம் அலிபாபா தான். 25 பில்லியன் டாலர்கள் நியுயார்க் பங்குசந்தையில்
திரட்டப்பட்டது.
அசுரவளர்ச்சிக்கு இன்னொரு பெயர் அலிபாபா. இன்று அலிபே, டோபோ, டிமால்,
அலிஎக்ஸ்பிரஸ் என்று பல கிளைநிறுவனங்களோடு மிக உறுதியாக வளர்ந்துகொண்டு வருகிறது.
இவை எல்லாவற்றுக்கும் மூலகாரணமாக இருந்தவர் ஜாக்மா என்ற சிறிய மனிதனே. கடுகு
சிறிதானாலும் காரம் பெரிது