ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய ...
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் 74 ஆவது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது.
கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று முற்பகல் சர்வமத வழிபாடுகளுடன் ஆண்டுபூர்த்தி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிகழ்வுகளில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க இதனை தெரிவித்துள்ளார்.
“நாடாளுமன்றம் செல்வது தொடர்பில் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவிக்கவில்லை.
நாமும் அது தொடர்பில் அழுத்தம் கொடுக்கவில்லை. ஆனால் தற்போது 19 ஆவது அரசியலமைப்பு நீக்கப்பட்டு 20 ஆவது அரசியலமைப்பு இந்த அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ளது.
நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் சட்டம் ஒன்று இயற்றப்படுமானால் நாடாளுமன்றத்துக்கு வெளியில் இருந்து இந்த விடயம் தொடர்பில் எம்மால் எதனையும் கூறமுடியாது.
ஆனால் இந்த விடயம் தொடர்பிலான நன்மை தீமைகளை நாடாளுமன்றத்தில் கருத்துக்களை முன்வைக்கக்கூடிய சிறந்த தலைவர் ரணில் விக்ரமசிங்க என்பது எனது கருத்தாகும்.
எனவே தேசியப் பட்டியல் உறுப்பினராக எமது கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாடளுமன்றம் செல்வது பொருத்தமானதாக அமையும் என்பதை நான் இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



