எமது இயக்கத்தின் அரசியல் கொள்கைகளிற்கு முரணாக நடந்ததால் உங்களை கட்சியை விட்டு தற்காலிகமாக இடைநிறுத்துகிறோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியி...

எமது இயக்கத்தின் அரசியல் கொள்கைகளிற்கு முரணாக நடந்ததால் உங்களை கட்சியை விட்டு தற்காலிகமாக இடைநிறுத்துகிறோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் மகேந்திரன் மயூரனிற்கு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை கடிதம் அனுப்பியுள்ளது.
மணிவண்ணனின் ஆதரவாளர்களாக உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் மீது, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் அணி நடவடிக்கையெடுக்க ஆரம்பித்துள்ளது என தமிழ்பக்கம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது.
எனினும், அதனை கட்சி மறுத்து வந்தது. வழக்கமான சில நிர்வாக நடவடிக்கைகளே மேற்கொள்ளப்படுகின்றன என்றும் தெரிவித்தது.
இந்த நிலையில், மணிவண்ணன் ஆதரவாளரான யாழ் மாநகரசபை உறுப்பினர் மீது முன்னணி ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கும் கடிதத்தை தமிழ்பக்கம் பிரசுரிக்கிறது.
தியாகி அறக்கட்டளை நிலையத்தில் பணிபுரிந்த மகேந்திரன் மயூரன், தியாகி அறக்கட்டளை நிலையத்தின் கொரோனா நிவாரணப்பணி குறித்த சில தகவல்களை பகிர்ந்ததற்காகவும், வாக்குரிமையென்பது துப்பாக்கியை விட பலமானது என்ற அறிஞர் ஒருவரின் மேற்கோளை பகிர்ந்தமைக்காகவும் கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிவண்ணன் ஆதரவாளர்களை நீக்குவதற்கு முன்னணி காரணங்களை தேடி வரும் நிலையில், அறிஞர் ஒருவரின் கருத்தை பேஸ்புக்கில் பகிர்ந்தமைக்காக யாழ் மாகரசபை உறுப்பினர் தற்காலிகமாக நீக்கப்படுவதாக- மணிவண்ணன் ஆதரவாளரான- மயூரனிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் பகிஸ்கரிப்பு முடிவை முன்னணி எடுத்திருந்த நிலையில், வாக்குரிமையின் முக்கியத்துவத்தை குறிப்பிட்ட பதிவை பகிர்ந்தமை அவர் மீதான குற்றச்சாட்டாக சுமத்தப்பட்டுள்ளது.
அண்மையில் ஊடக சந்திப்பை நடத்திய கஜேந்திரகுமார், பகிஸ்கரிப்பு எமது கொள்கை, அதை ஏற்காதவர்கள் கட்சியில் இருக்க முடியாதென்றார்.
“இதேவிதமாக பார்த்தால், இதுவரை மாகாணசபை தேர்தலை புறக்கணித்து வந்த முன்னணி, இனிமேல் போட்டியிட முடிவு செய்தால், கட்சியை மொத்தமாக கலைக்க வேண்டுமல்லவா?“ என சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.