படுகொலை செய்யப்பட்ட பிரபல ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 20ஆவது நினைவு தினம் இன்றாகும். கடந்த 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி ...
படுகொலை செய்யப்பட்ட பிரபல ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 20ஆவது நினைவு தினம் இன்றாகும்.
கடந்த 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி இரவு, அதிஉயர் பாதுகாப்பு வலயத்தினுள் வைத்து அவர் கொலை செய்யப்பட்டார்.
கடுமையான யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில், சூரியன் எப்.எம். உட்பட தமிழ் சிங்கள ஊடகங்களின் செய்தியாளராக அவர் கடமையாற்றினார்.
சூரியன் எப்.எம். வானொலி ஆரம்பிக்கப்பட்டது முதல் யாழ்ப்பாண குடாநாட்டிற்கான செய்தித் தொடர்பாளராக செயற்பட்ட அவர், தாம் மரணிக்கும்வரை குறித்த பணியை முன்னெடுத்திருந்தார்.
கொலைசெய்யப்பட்ட தினத்தன்று இரவு சூரியன் செய்திகளுக்காக செய்தியினை தயாரித்து கொண்டிருந்தவேளை, அவரின் வீட்டிற்குள் நுழைந்த ஆயுததாரிகள் அவரை சுட்டுக் கொன்றனர்.
பின்னர், அவர்களினால் வீசப்பட்ட இரண்டு எறிகுண்டு தாக்குதலில் நிமலராஜனின் தாயார், தந்தை மற்றும் 11 வயதான மருமகன் ஆகியோர் கடும் காயங்களுக்கு உள்ளாகினர்.
அந்த கால கட்டத்தில், உண்மைச் செய்திகளை உடனுக்கு உடன் வெளியிட்டதன் காரணமாகவே, நிமலராஜன் கொலை செய்யப்பட்டதாக “ஊடகவியலாளர் பாதுகாப்பு குழு” தெரிவித்திருந்தது.
குறிப்பாக 2000ஆம் ஆண்டு தீவக பகுதிகளில் இடம்பெற்ற தேர்தலில் சட்ட விரோத வாக்குப்பதிவுகள் தொடர்பான செய்தி வெளியிடப்பட்டமைக்காகவே நிமலராஜன் கொல்லப்பட்டதாக அந்த கால கட்டத்தில் தமிழர் விடுதலை கூட்டணி அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தது.
அப்போதைய அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்ட ஆயுத குழுவொன்றே இந்தக் கொலையை செய்ததாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
எப்படியிருப்பினும், குறிப்பிட்ட ஆயுதக்குழு அதனை நிராகரித்ததுடன், அது அடிப்படை அற்ற குற்றச்சாட்டு எனவும் தெரிவித்திருந்தது.