கொரோணா தொற்றுநிலைமையினை உணர்ந்து சமூக பொறுப்புடன் பொதுமக்கள் செயற்படவேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார். தற்...
கொரோணா தொற்றுநிலைமையினை உணர்ந்து சமூக பொறுப்புடன் பொதுமக்கள் செயற்படவேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதுள்ள கொரோனா நிலமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்பொழுது இலங்கையிலே கொரோனா சமூகத்தொற்று ஏற்பட்டிருக்கின்றது. இந்த நிலைமையில் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.
நேற்றைய தினம் மினுவாங்கொடை பகுதியில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த பெண் ஒருவருக்கும் அவருடைய மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது சமூகதொற்றாக இனங்காணப்பட்டுள்ளது.
ஆகவே அந்த வகையில் அவருடன் நெருங்கிப் பழகி பணியாற்றிய அவருடைய வேலை பகுதியைச் சேர்ந்த 400 பேருக்கும் மேற்பட்டோர் உடனடியாக சுய தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.
அதே போன்று அந்த 400 பேருடைய பெயர் பட்டியலில் 7 பேர் புங்குடுதீவை சேர்ந்தவர்கள் என இனங்காணப்பட்டிருந்தார்கள். அவர்கள் 7 பேரும் அந்த பகுதியிலே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இதனைவிட 2பேர் புங்குடுதீவை சேர்ந்தவர்கள். ஊருக்கு வந்து சென்றதாக தகவல் கிடைத்ததை அடுத்து சுகாதாரப் பகுதியினர் அந்த நிலைமையை ஆராய்ந்து அந்த குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்என இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்குள்ளப்படுகிறார்கள்.
இதேவேளை கடந்தவாரம் மருதங்கேணியைச் சேர்ந்த 9 மீனவர்கள் இந்திய மீனவர் களுடன் தொடர்பு பேணியதன் அடிப்படையிலே அவர்களும் கட்டாய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள். இதேபோன்று மன்னார் பகுதியிலும் இந்திய மீனவர்களுடன்தொடர்பு பேணிய 30 பேர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுளார்கள்.
எனவே இந்த நிலைமையானது மீண்டும் இரண்டாவது அலை கொரோனா தொற்று ஏற்படுவதற்குரிய அறிகுறியாக கொள்ளப்படுகின்றது. இது இவ்வளவு காலமும் சமூகத்தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலைமையை மீறியதாக காணப்படுகின்றது.
ஆகவே இந்த நிலையிலே ஏற்கனவே இந்த சுகாதார திணைக்களம் அதேபோன்று கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டு மத்திய நிலையம் அதேபோல மாவட்ட ,மாகாண மட்ட குழுக்களில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களின் படி நாங்கள் ஒவ்வொரு துறையினரும் நடைமுறையில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றிய சுகாதார அறிவுறுத்தல்கள் சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்டு அந்தந்த பகுதியினருக்கு அது வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆகவே இந்தச் சந்தர்ப்பத்திலே சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது கட்டாயமாக காணப்படுகின்றது.
யாழ் மாவட்டத்தை பொறுத்த வரையில் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு பிரிவுக்கும் சுகாதார நடைமுறைகள் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளன. உதாரணமாக அலுவலகங்கள், வியாபார நிலையங்கள், சிகை அலங்கரிப்பு நிலையங்கள், போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பேருந்துகள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் போன்ற பல்வேறுபட்ட வழிகாட்டல்கள் மற்றும் சுகாதார நடைமுறைகள் ஏற்கனவே சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளன.
ஆகவே இந்த சூழ்நிலையில் அந்த சுகாதார நடைமுறைகளை மற்றும் சமூக இடைவெளிகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. இந்த நிலையில் மிகவும் விழிப்பாக இருந்து ஒரு சமூகப் பொறுப்புணர்வுடன் சுய பாதுகாப்பையும் சமூக பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி மக்கள் செயற்பட வேண்டிய ஒரு கட்டாய காலமாக இந்த காலம் காணப்படுகின்றது.
யாழ் மாவட்டத்தினை பொறுத்தவரை பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை. ஆனாலும் அபாயகரமான நிலைமையை உணர்ந்து ஒவ்வொருவரும் சமூகப் பொறுப்பையும் உணர்ந்து தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வதற்கு குடும்ப உறவுகளை பாதுகாப்பதோடு சமூகத்தையும் பாதுகாப்பது ஒவ்வொருவரினதும் கடமை.
ஆகவே இது நமக்கு வராது என்று ஒரு அலட்சிய மனப்பாங்குடன் இருக்காது எங்களுக்கும் எந்த நேரமும் வரலாம் என்ற ஒரு மனப்பாங்கோடு இந்த கொரோனா தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முன் வரவேண்டும்.
இந்தச் சந்தர்ப்பத்திலே பொது மக்கள் ஒன்று கூடும் இடங்களில் அவசியமற்ற வருகையினை தவிர்த்து அதேபோன்று அவ்வாறு செல்கின்ற போது சுகாதார நடைமுறை, சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிந்து செல்லல் போன்ற சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டும். அதே போல் போக்குவரத்தில் பயணிக்கும் போதும் இந்த சுகாதார நடைமுறைகளை நீங்கள் கட்டாயமாக பின்பற்ற வேண்டிய தேவை காணப்படுகின்றது.
அதே நேரம் யாருக்காவது கொரோனத் தொற்று ஏற்பட்டால் தாமாக முன்வந்து குறித்த விடயங்கள் தொடர்பில் சுகாதாரப் பிரிவினரை அணுக வேண்டும். அதேபோல சந்தேகம் இருந்தால் கூட சுகாதார பிரிவினரை உடனடியாக அணுகி அதற்குரிய அடுத்த கட்ட நிலைமை தொடர்பில் செயற்பட வேண்டும்.
அனைவரும் இணைந்து செயற்படுவதன் மூலமே இதனை தடுத்து நிறுத்த முடியும். இந்த சந்தர்ப்பத்திலே பொதுமக்கள் எரிபொருள் மற்றும் பொருட்களை பெற்றுக் கொள்வதில் மிகவும் நாட்டம் காட்டுகின்றார்கள். எங்களைப் பொறுத்தவரைக்கும் கடந்த பல மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட அனுபவங்கள் நிறைய காணப்படுகின்றன. இக்கட்டான காலகட்டத்தினை கடந்து வந்திருக்கின்றோம். அந்த வகையிலே எந்த வகையிலும் அத்தியாவசிய தேவைகளுக்கான தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் அரசாங்க அறிவுறுத்தலின்படி அவற்றை நிவர்த்தி செய்யக்கூடிய வகையிலே நடவடிக்கை எடுக்கக் கூடியதாகவுள்ளது.
நாங்களும் அந்த நிலைமையை உறுதிப்படுத்தக் கூடிய நிலையில் இருக்கின்றோம். பொதுமக்கள் வீண் வதந்திகளை பரப்பி பொருட்களை முண்டியடித்து பெறாமல் ஓரளவுக்கு தங்களுடைய தேவைக்கு ஏற்றவாறு பொருட்களை பெற்றுக்கொண்டு நீங்கள் செயற்படுங்கள். இதனை வாய்ப்பாக பயன்படுத்தி விலையேற்றம் பதுக்கல் போன்ற செயற்பாடுகளும் இடம்பெறலாம். எனவே அதற்கு இடமளிக்காது பொதுமக்கள் செயற்பட வேண்டும்.
எனவே இந்த நிலைமையை கட்டுப்படுத்தி ஒரு பாதுகாப்பான ஒரு நிலைமையினை உருவாக்குவதற்கு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு தேவை.
குறிப்பாக எங்களுடைய சுகாதாரப் பிரிவினர் மிக அர்ப்பணிப்போடு செயற்படுகின்றார்கள். அவர்களுக்கும் பொதுமக்களாகிய நீங்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் போன்றவர்களுக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.
பொது மக்களுக்கான ஒரு கடப்பாடு காணப்படுகின்றது. இந்த அரசாங்கம் மிகவும் உறுதியான நடவடிக்கைகளை இந்த விடயத்தில் மேற்கொள்கின்றது.
இந்த நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுவதன் ஊடாகத்தான் இதனை கட்டுப்படுத்த முடியும் இந்த விடயம் தற்போதைய காலத்தில் மிக அவசியமானதாகும். விழிப்பாக இருக்க வேண்டிய காலமாகவும் காணப்படுகின்றது.
சுகாதார நடைமுறைகள் மிகவும் இறுக்கமாக பின்பற்றப்பட வேண்டும் என தற்பொழுது சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அந்த வகையில் தற்பொழுது எங்களுடைய நாளாந்த செயற்பாடுகளை சில ஒன்றுகூடல்கள் தவிர்க்கப்பட வேண்டும். குறிப்பாக திருமண நிகழ்வுகள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் வீடுகளில் இடம் பெறும் மக்கள் கூடும் நிகழ்வுகளை தற்காலிகமாக பொது மக்களிடம் தவிர்த்து கொள்ள வேண்டும்.
அதே போன்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது பாடசாலைகள், முன் பள்ளிகள், பல்கலைக்கழகங்களுடைய கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தியுள்ளதாக. இந்த நடைமுறை தனியார் கல்விநிறுவனங்களுக்கும் பொருந்தும். ஆகவே இந்த கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல கூட்டங்கள் கூடுதல் ஆலயங்களிலே வழிபாட்டுத் தலங்களிலேயே மக்கள் ஒன்றுகூடுதல்களை ஏற்படுத்தல் போன்றவையும் யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்காலிகமாக இடை நிறுத்தப் பட வேண்டும். சந்தைகளில் மற்றும் ஏனைய வணிக நிலையங்களில் அதேபோன்று போக்குவரத்தில் ஒன்று கூடும்போது சமூக இடைவெளிபின்பற்றி நடந்துகொள்ள வேண்டும். எங்களைப் பொறுத்தவரைக்கும் பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்கள் மட்டுப் படுத்தப்பட வேண்டும்.
அதே நேரத்தில் அநாவசியமான அவசியமற்ற போக்குவரத்துகளை தவிர்ப்பது மிக மிக அவசியமானதொன்றாகும். இந்தச் சந்தர்ப்பத்திலே அனைவரும் இணைந்த வகையில் இந்த நடைமுறைகளை சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதன் மூலம் குறித்த தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றும் அரச அதிபர் தெரிவித்தார்.