தமிழ் அரசியல் கைதிகளை கருணை அருப்படையிலாவது விடுவிக்குமாறு கோரும் கருணை மனுவிற்கு ஆதரவுகோரி யாழ் மாவட்டத்திலுள்ள சர்வமதத் தலைவர்களுடன் அரசிய...
தமிழ் அரசியல் கைதிகளை கருணை அருப்படையிலாவது விடுவிக்குமாறு கோரும் கருணை மனுவிற்கு ஆதரவுகோரி யாழ் மாவட்டத்திலுள்ள சர்வமதத் தலைவர்களுடன் அரசியல் கைதிகளின் உறவுகள் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
ஒன்றுபட்டு தமிழ் அரசியல் கைதிகளை சிறைமீட்க வலியுறுத்தி அரசியல் கட்சி தலைவர்களையும் ஆன்மீகத் தரப்பினரையும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் கடந்த நாட்களில் தொடர்ச்சியாக நேரில் சந்தித்து வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (டிச-31) வியாழக்கிழமை சர்வமத் தலைவர்களுடன் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சிறைச்சலைகளுக்குள் தொற்றா நோய்களினால் பீடிக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதுடன், உடல் அளவிலும் மனதளவிலும் பலவீனப்பட்ட நிலையில் காணப்படும் தமது உறவுகளை தற்போதைய கொரோனா தொற்றும் தாக்கியுள்ளதை அறிந்து மீளாத்துயருற்றிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் அவர்களது விடுதலைக்காக பல்வேறு தரப்புகளை சந்தித்து அதரவு கோரிவருகின்றனர்.
அந்தவகையில் தமிழ் அரசியல் கைதிகளை கருணை அடிப்படையில் விடுவிக்க கோரி தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் சார்பில், இலங்கை அரச தரப்பிற்கு கருணை மனுவொன்றை கையளிக்க குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
குறித்த கருணைமனுவில் கையொப்பமிட்டு ஆதவினை வழங்கி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வலுச்சேர்க்குமாறு கோரி யாழ் மாவட்டத்திலுள்ள சர்வமதத் தலைவர்களுடன் அரசியல் கைதிகளின் உறவுகள் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
யாழ். நாக விகாரை விகாராதிபதி விமல தேரர், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் யாழ்ப்பாணம்-கிளிநொச்சி மாவட்ட தலைவர் மௌலவி என்.எம். இர்பான், செயலாளர் மௌலவி ஏ.எம். றலீம் உள்ளிட்டவர்களுடன் நேரில் சந்தித்துள்ளனர்.
அதேபோன்று, மானிப்பாய் யாத்திர ஸ்தல பங்குத்தந்தை அருட்பணி ரெக்ஸ்சவுந்திரா அவர்களையும் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க தமிழ் அரசியல் தரப்பினர் ஒருபக்கம் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதனை வலுப்படுத்தும் வகையிலான முயற்சிகளில் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் தொடர்ந்தும் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.