சீனாவில் சாதாரண ஆசிரியராக இருந்து தற்போது உலகின் முன்னணி ஒன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபாவும், பணக்காரர்களில் ஒருவரான ஜாக் மா கடந்த இரண்ட...
சீனாவில் சாதாரண ஆசிரியராக இருந்து தற்போது உலகின் முன்னணி ஒன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபாவும், பணக்காரர்களில் ஒருவரான ஜாக் மா கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பொதுவெளியில் காணப்படாதது மர்மம் குறித்து ஊடகங்களில் செய்திவெளியானதுடன் சமூக ஊடகங்களிலும் விவாதிக்கப்பட்டுவருகின்றன.
தற்போது அலிபாபா தனது சேவையை உலகின் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு தொழில்களிலும் விரிவுபடுத்தியுள்ளது. இந்த நிலையில் சமீபகாலமாக ஜாக் மாவுக்கும், சீன அரசுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. தனது நிறுவனத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் சீன அரசின் செயல் பழமைவாதம் என்று ஜாக் மா விமர்சித்தார்.
சீன அரசின் கடுங்கோபத்துக்கு உள்ளாகி இருக்கும் ஜாக் மா கடந்த இரண்டு மாதங்களாக வெளியில் தலைகாட்டவில்லை. அவர் காணாமல் போய்விட்டாரா அல்லது எங்கே, ஏன் மறைந்து இருக்கிறார் என்கிற கேள்வி எழுந்து, சீனாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
கடந்த அக்டோபர் மாதம் 24 ஆம் திகதி அன்று சீன அரசாங்கம் தொழில் நிறுவனங்கள் மீது விதித்துவரும் கட்டுப்பாடுகள் குறித்து பல விமர்சனங்களை முன்வைத்தார். தொழில் நிறுவனங்கள் மீது கட்டுப்பாடுகளை விதிப்பவர்கள் `வயோதிகர்கள் மன்றம்’ (Old men Culb) என்றும், காலத்துக்கேற்ப இவர்கள் மாற வேண்டும் என்றும் தனது கருத்தை முன்வைத்தார்.
இதைத் தொடர்ந்து அலிபாபாவின் ஆன்ட் நிறுவனம் ஐ.பி.ஓ வரவிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், இந்த ஐ.பி.ஓ-வை நிறுத்தியது சீன அரசாங்கம். இதைத் தொடர்ந்து அலிபாபா நிறுவனம் மீது அடுத்தடுத்து நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது சீன அரசாங்கம். சில நாள்களுக்கு முன்பு, அலிபாபா நிறுவனம் போட்டியாளர்களுக்கு உரிய வாய்ப்பைத் தராமல், நயவஞ்சமாகச் செயல்பட்டிருக்கிறது என்று புதிய விசாரணையைத் தொடங்கியது.
புதிய தொழில்முனைவோர்களைக் கண்டறியும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவர் குழுவில் ஜாக் மா இடம்பெறுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், நவம்பர் மாத இறுதியில் இந்த நிகழ்ச்சியின் நடுவர் குழுவில் ஜாக் மாவுக்குப் பதிலாக, அலிபாபா நிறுவனத்தின் வேறொரு உயரதிகாரி இடம்பெற்றார். ஜாக் மாவுக்கு வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதால், அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என அலிபாபா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால், உண்மை இதுதானா அல்லது சீன அரசின் நெருக்கடி தாங்காமல் ஜாக் மா மறைந்திருக்கிறாரா அல்லது சீன அரசாங்கம் அவரை வலுக்கட்டாயமாக வீட்டில் இருத்தி வைத்திருக்கிறதா எனப் பலவிதமான கேள்விகளை எழுப்பி வருகின்றனர் ஜாக் மாவின் நலம் விரும்பிகள். காரணம், மக்களின் கண்களில் படாமல் விலகி இருக்க ஜாக் மா எப்போதும் விரும்பியதில்லை. சீன வர்த்தக உலகில் தன்னை ஒரு ஹீரோவாக மக்கள் பார்க்கிறார்கள் என்பதை நன்கு புரிந்துகொண்ட ஜாக் மா, சமூக மாற்றங்களுக்கான கருத்துகளைத் தொடர்ந்து முன்வைத்தார்.
அலிபாபா என்பது 420 பில்லியன் டொலர் மதிப்புடைய நிறுவனமாக உயர்ந்துள்ள உலகப் புகழ்பெற்ற நிறுவனம் என்பதால், ஜாக் மாவுக்கு என்னவாகி இருக்குமோ என்று உலகமே பதற்றத்தில் இருக்கிறது. இந்தப் பதற்றத்தைத் தணிக்க வேண்டிய கடமை சீன அரசுக்கும் அலிபாபா நிறுவனத்துக்கும் நிச்சயம் உண்டு என்பது மறுக்கமுடியாது.