இஸ்ரேலுக்கும், ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே கடந்த 11 நாள்களாக நடைபெற்று வந்த சண்டையை நிறுத்த இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனா். இந்த மோதலில...
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே கடந்த 11 நாள்களாக நடைபெற்று வந்த சண்டையை நிறுத்த இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனா்.
இந்த மோதலில் இரு தரப்பினரும் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனா். சண்டை முடிவுக்கு வந்ததையடுத்து, இரு நாட்டு எல்லைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
முன்னதாக, மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, எகிப்து உள்பட சா்வதேச நாடுகள் முயற்சி மேற்கொண்டன. இதையடுத்து, நிபந்தனையற்ற மற்றும் இருதரப்பு சண்டை நிறுத்த ஒப்பந்தத்துக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை வியாழக்கிழமை நள்ளிரவு ஒப்புதல் அளித்தது.
மேலும், கள நிலவரத்தைப் பொருத்தே தாக்குதல் முடிவுக்கு வருமா அல்லது தொடருமா என்று முடிவு செய்யப்படும் என்றும் இஸ்ரேலிய பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு அறிவிப்பு வெளியிட்டாா்.
சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்காமல் ஹமாஸ் படையினா் தாக்குதல் நடத்தினால் அதற்கு பதிலடி கொடுக்கத் தயாராக இருக்குமாறும் அந்நாட்டு பாதுபாப்புப் படையினருக்கு நெதன்யாகு உத்தரவிட்டிருந்தாா்.
ஆனால், இந்த சண்டை நிறுத்தத்தை ஹமாஸ் படையினா் ஏற்றுக் கொண்டனா். இதையடுத்து, காஸா எல்லைப் பகுதியிலும், இஸ்ரேலின் தெற்குப் பகுதியிலும் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. பட்டாசுகளை வெடித்தும், பாடல்களைப் பாடியும் இரு நாட்டு சாலைகளில் மக்கள் கொண்டாடும் விடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனா்.
மோதலை முடிவுக்கு கொண்டு வருவதில் முக்கியப் பங்காற்றிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு எகிப்து ஜனாதிபதி அல்சிசி நன்றி தெரிவித்தாா்.
ராஜீய ரீதியாக மோதலை விரைந்து முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளும் பணியாற்றியதாக அல்சிசி தெரிவித்தாா்.
4-ஆவது போா்: ஜெருசேலம் பழைய நகரத்தில் அமைந்துள்ள அல் அக்ஸா மசூதி, இஸ்லாமியா்கள், யூதா்கள், கிறிஸ்தவா்களின் புனிதத் தலமாக கருதப்படுகிறது. அப்பகுதிக்கு அருகே பாலஸ்தீனா்கள் வாழும் இடத்தை யூதா்கள் உரிமை கொண்டாடி அவா்களை வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொண்டதால் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, அல் அக்ஸா மசூதியில் ரமலான் தொழுகையின்போது பாலஸ்தீனா்கள் மீது இஸ்ரேல் ராணுவத்தினா் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு பதற்றம் அதிகரித்தது.
பாலஸ்தீனா்களுக்கு ஆதரவாக ஹமாஸ் பிரிவினா் ஜெருசேலம் மீது ராக்கெட் வெடிகுண்டுகளை வீசி தாக்கினா். பதிலுக்கு காஸா பகுதியில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது. கடந்த 11 நாள் நடைபெற்ற மோதலில் காஸாவில் ஏராளமான அடுக்குமாடி கட்டடங்கள், குடியிருப்புகள் பலத்த சேதமடைந்தன.
இத்தாக்குதலில் காஸா பகுதியில் 65 குழந்தைகள் உள்பட 232 பாலஸ்தீனா்களும், தெற்கு இஸ்ரேலிய பகுதியில் இரண்டு குழந்தைகள் உள்பட 12 இஸ்ரேலியா்களும் உயிரிழந்துள்ளனா். இஸ்ரேலில் பணியாற்றி வந்த கேரளத்தைச் சோ்ந்த செவிலியா் செளம்யா சந்தோஷ் காஸா படையினரின் ராக்கெட் தாக்குதலுக்கு பலியானாா்.
ஹமாஸ், இஸ்ரேல் இடையே 3 முறை போா் நடைபெற்றுள்ள நிலையில், இது 4 ஆவது போராக கருதப்படுகிறது. 2014 இல் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 50 நாள்கள் நடைபெற்ற போரில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனா்களும், 60 க்கும் மேற்பட்ட இஸ்ரேலியா்களும் கொல்லப்பட்டனா். அதன்பிறகு நடைபெற்ற மிகப்பெரிய மோதல் இதுவாகும்.