இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்துக்கு கொடுக்கிறோம் என்ற போர்வையில் நாவலர் கலாசார மண்டபத்தை எங்களுடைய கட்டுப்பாட்டை மீறி மத்திய அரசுக்கு க...
இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்துக்கு கொடுக்கிறோம் என்ற போர்வையில் நாவலர் கலாசார மண்டபத்தை எங்களுடைய கட்டுப்பாட்டை மீறி மத்திய அரசுக்கு கொடுப்பது அபாயகரமானதென யாழ் மாநகர முதல்வரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் நாவலர் கலாசார மண்டபத்தினை இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் கையளிக்குமாறு ஒரு கோரிக்கை எனக்கு முன்வைக்கப்பட்டிருக்கிறது. அவர்களது கோரிக்கைக்கு வலுச் சேர்க்கும் முகமாக சமய பெரியார்களால் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன
மாநகர சபையில் இருந்து நாவலர் கலாசார மண்டபத்தை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்பாக நாங்கள் மாநகரசபையில் கடந்த கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்திருந்தோம்.அந்தக் கூட்டத்திலே நான்,நாவலர் கலாசார மண்டபத்தினை மத்திய அரசுக்கு கீழே உள்ள திணைக்களத்துக்கு வழங்கக்கூடாதென தெரிவித்திருந்தேன்.அந்த விவகாரம் அடுத்த கூட்டத்துக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது.
நாவலர் பிறந்து வளர்ந்த பூமியிலே இருக்கின்ற ஒரு சொத்து நாவலர் மண்டபம்.நாவலர் சைவம் என்பதற்கு அப்பால் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடிய ஒருவராக கருதப்படுபவர். ஆகவே அந்த வகையில் அவருடைய இடத்தில் அமைக்கப்பட்ட ஒரு சொத்தை இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்துக்கு கொடுக்கிறோம் என்ற போர்வையில் எங்களுடைய கட்டுப்பாட்டை மீறி மத்திய அரசுக்கு கொடுப்பது அபாயம்.
அந்த வகையில் மத்திய அரசாங்கத்தின் கீழ் வருகின்ற இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் நாவலர் கலாசார மண்டபத்தை ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்ற தலைப்புகளோடு பேச வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டோம்.மாநகர சபைக்கு சொந்தமான ஒரு சொத்தை மத்திய அரசாங்கத்திடம் கையளிப்பது என்பது தமிழ் மக்களுக்குச் செய்கின்ற மிகப் பெரிய துரோகமாக அமைந்து விடும்.
கடந்த காலங்களில் நாவலர் கலாசார மண்டபம் மாநகர சபையினால் சரியாக நிர்வகிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு காணப்படுகிறது. ஆனால் அந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்ற தரப்புகளோடு இணைந்து இதனுடைய முகாமைத்துவத்தை நாங்கள் தனியான ஒரு நிறுவனம் ஒன்றை அமைத்து ஒரு நிதியமாகவோ, முகாமைத்துவ குழுவாக திறம்பட நிர்வகிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
நாவலர் கலாசார மண்டபத்தை மத்திய அரசுக்கு கீழுள்ள திணைக்களத்திடம் கையளிக்க வேண்டாமென
பல்கலைக்கழக பேராசிரியர்கள் சமூகத்திலுள்ள பலரும் தெரிவித்துள்ளனர். நாவலர் கலாசார மண்டபத்தை சிறப்பாக நிர்வகிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சில தவறுகள் விடப்பட்டு இருந்தாலும் அவை களையப்பட்டு சிறப்பாக நிர்வகிக்கப்படுமே ஒழிய அதை நழுவ விடக்கூடாது என்பதே என்னுடைய கருத்து என்றார்.
மாநகர சபையில் அங்கம் வகிக்கின்ற அனைத்து கட்சிகளிடமும் நாம் விடுகின்ற கோரிக்கை தயவுசெய்து நாவலர் கலாசார மண்டபத்தை மத்திய அரசுக்கு கொடுக்க காரணமாக அமைந்துவிடாதீர்கள்.அது எங்களுடைய எதிர்கால சந்ததிக்கு செய்கின்ற துரோகமாக அமையும் என்றார்.