வரைபை தயாரிக்கும் குழுவில் சுமந்திரன் இருந்து கொண்டு அதை அவரது கட்சியே நிராகரிக்கின்றது என்றால் இதன் அர்த்தம் என்னவென முன்னாள் நாடாளுமன்ற உற...
வரைபை தயாரிக்கும் குழுவில் சுமந்திரன் இருந்து கொண்டு அதை அவரது கட்சியே நிராகரிக்கின்றது என்றால் இதன் அர்த்தம் என்னவென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பினார்.
வல்வெட்டித்துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை தமிழரசுக் கட்சி இந்தியாவுக்கொரு முகம் சர்வதேசத்துக்கொரு முகம் தென்னிலங்கைக்கொரு முகம் தமிழ் மக்களுக்கொரு முகம் என வேடங்களை மாற்ற முயற்சிக்கின்றார்களா என்ற கேள்வியை நாங்கள் எழுப்புகிறோம்.
பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது என்று கூறுவார்கள்.ஆனால் சுமந்திரன் போன்றவர்களின்
நடவடிக்கையை பார்த்தால் தொட்டிலை ஆட்டிக் கொண்டு பிள்ளையை கிள்ளுகிறார்கள் என்று சொல்லக் கூடிய நிலைமை தான் இருக்கிறது.
தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்த கருத்து மிகவும் வேடிக்கையானது. 13ஆம் திருத்தம் பயனில்லை என்று கூறுகின்றார்.இருக்கக் கூடிய விடயங்களை அமுல்படுத்த கோருவது தவறல்லவே. அரசியலமைப்பை போற்றி பாதுகாப்போம் என்று கூறுபவர்கள் இதனை நிறைவேற்ற வேண்டும்.
தமிழரசுக்கட்சி பொதுசன வாக்கெடுப்புக்கு ஏன் தயங்குகிறது. இலங்கை அரசுக்கு நோகக்கூடாது என்று அடிப்படையில் தமிழரசுக் கட்சியின் ஒரு பகுதியினர் செயல்படுகிறார்களா என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.
சுமந்திரனது இல்லத்தில் தயாரிக்கப்பட்ட வரைபை, இலங்கை தமிழரசு கட்சியின் அரசியல் குழு நிராகரிக்கின்றது. இரண்டிலும் சுமந்திரன் நின்று கொண்டிருக்கிறார். இதனை தெளிவுபடுத்த வேண்டும்.
மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய குழப்பங்களை தீர்க்க வேண்டியது தமிழரசுக் கட்சியின் கடமை. வரைபை தயாரிக்கும் குழுவில் சுமந்திரன் இருந்து கொண்டு அதை அவரது கட்சியே நிராகரிக்கின்றது என்றால் இதன் அர்த்தம் என்ன ? தமிழரசுக்கட்சி அந்நியப்படக்கூடிய அபாயம் ஏற்பட்டு இருக்கின்றது.
13ஜ அமுல் செய்யுங்கள். ஆனால் அது நிரந்தரத் தீர்வுமல்ல. தமிழ்மக்கள் மத்தியில் பொதுசன வாக்கெடுப்பை நடத்தி அவர்களே தங்கள் தலைவிதியை தீர்மானிப்பதாக இருக்க வேண்டும் என்றார்.