இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, எதிர்வரும் 24ம் தேதி மீண்டும் நாட்டிற்கு வருகைத் தரவுள்ளார் என ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங...
இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, எதிர்வரும் 24ம் தேதி மீண்டும் நாட்டிற்கு வருகைத் தரவுள்ளார் என ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஸ கடந்த மாதம் 13ம் திகதி மாலைத்தீவு வழியாக சிங்கப்பூர் சென்றிருந்ததுடன், அவர் இந்த மாதம் அங்கிருந்து தாய்லாந்து சென்றிருந்தார்.
தற்போது தாய்லாந்தில் தனது மனைவியுடன் வாழ்ந்து வரும் கோட்டாபய ராஜபக்ஸ, எதிர்வரும் 24ம் திகதி நாட்டிற்கு வருகைத் தரவுள்ளதாக உதயங்க வீரதுங்க தெரிவிக்கின்றார்.
தற்போதைய சூழ்நிலையில், எதிர்வரும் 24ம் திகதி வருகைத் தரவுள்ளதாகவும், சில சந்தர்ப்பங்களில் திகதிகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
தான் தொடர்ந்தும் கோட்டாபய ராஜபக்ஸவுடன் தொடர்பில் உள்ளதாகவும், கோட்டாபய ராஜபக்ஸ இனி அரசியலில் ஈடுபட போவதில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
எனினும், நாட்டிற்காக அவர் சேவையாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஸ நாட்டிற்கு வருகைத் தருகின்றமை குறித்து இதுவரை தமக்கு அறிவிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
மிக் விமான கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்டதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று வாக்குமூலம் வழங்கியதன் பின்னர், ஊடகவியலாளர்களுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த விமான கொடுக்கல் வாங்கல் இடம்பெற்ற காலப் பகுதியில், கோட்டாபய ராஜபக்ஸ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கடமையாற்றியிருந்தார்.
2006ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த நிலையில், உதயங்க வீரதுங்க ரஷ்யாவிற்கான தூதுவராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.