ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் உட்பட பல பொலிஸ் குழுக்கள் பல கோணங்கள...
ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் உட்பட பல பொலிஸ் குழுக்கள் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் நேற்று (21 ஆம் திகதி) வரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
இந்தக் கொலை மிகவும் திட்டமிடப்பட்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புலனாய்வுக் குழுக்கள் தெரிவிக்கின்றன.
ஷாப்டர் கொல்லப்பட்ட இடத்தில் கொலையாளிகள் எந்த ஆதாரத்தையும் விட்டு வைக்கவில்லை என்று விசாரணையாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், ஷாப்டரைக் கொன்ற குழு அவரை துன்புறுத்தவும் மரண பயத்தை ஏற்படுத்தவும் விரும்பியிருக்கலாம் என்று அந்த புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.
தினேஷ் ஷாப்டரின் தொலைபேசியில் கிடைத்த 4 சந்தேகத்திற்கிடமான தொலைபேசி இலக்கங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அந்த இலக்கங்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள பொரளை பொலிஸார் நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளனர்.
நேற்றைய நிலவரப்படி, இந்தக் கொலை தொடர்பாக ஷாப்டரின் மனைவி உட்பட 50 பேரிடம் விசாரணையாளர்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில், ஷாப்டர் வீட்டை விட்டு வெளியேறி பொரளை மயானத்திற்குச் செல்லும் போது வழியில் உள்ள உணவகம் ஒன்றில் இருந்து இரண்டு சிற்றுண்டிப் பார்சல்களை வாங்கியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
ஆனால் ஷாப்டர் கொல்லப்பட்ட பின், காரில் அவர் வாங்கிய இரண்டு சிற்றுண்டி பார்சல்களும் காணப்படவில்லை. இதன்மூலம், இந்த கொலை வழக்கில் சந்தேகத்திற்குரிய பல சம்பவங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.