சமஸ்டித் தீர்வுக்கான இந்தியாவின் வலியுறுத்தலை வரவேற்கின்றோம் என ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ் தெரிவித்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டு...
சமஸ்டித் தீர்வுக்கான இந்தியாவின் வலியுறுத்தலை வரவேற்கின்றோம் என ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ் தெரிவித்தார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,அண்மையில் இலங்கையின் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இந்திய புலனாய்வுத்துறையான றோவின் தலைவர் சமந்தகுமார் கோல் சந்தித்து கலந்துரையாடியதாக ஐனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாக ஊடகங்களில் வெளியான செய்தியில் ஈழத் தமிழர்களின் நீண்ட கால இனப்பிரச்சினைக்கு சமஸ்டித் தீர்வை வலியுறுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளதை நல்லெண்ண ஆரம்பமாக நாம் வரவேற்கின்றோம்.
பாரத தேசத்தின் நல்லெண்ண வெளிப்பாட்டை வரவேற்பதுடன் தமிழ் மக்களின் மறுக்கப்பட்ட நீண்ட கால அபிலாசையான சமஸ்டி அரசியல் தீர்வு கிடைப்பதற்கு தொடர்ந்து இந்திய மத்திய அரசு பங்களிக்க வேண்டும் இதுவே ஈழத் தமிழர்களின் எதிர்பார்ப்பு அத்துடன் இந்தியாவின் மத்தியஸ்த்துடன் கொண்டு வரப்படும் சமஸ்டித் தீர்வே நிரந்தரத் தீர்வாக அமையும் என ஈழத் தமிழ் மக்கள் நம்புகின்றனர்.
பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு ஒரு நிரந்தர பரிகார நீதியை இந்தியாவே பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை நீண்ட காலமாக தாயக புலம்பெயர் ஈழத் தமிழர்கள் கோரி வருகின்றனர் அத்துடன் 1949 இல் இருந்து இன்று வரை வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களின் ஐனநாயக தேர்தல்களில் மக்கள் ஆணை சமஸ்டிக் கோரிக்கையாகவே இருக்கின்றது ஆகவே தமிழர்களின் ஐனநாயக அபிலாசையை பெற்றுக் கொடுக்க பாரத தேசம் பற்றுதியுடன் பணியாற்ற வேண்டும் – என்றுள்ளது.



