தான் சிறையில் ஓய்வாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்ததாக, பாரிய நிதி மோசடியுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள திலினி பிரியமாலி தெரிவித்...
தான் சிறையில் ஓய்வாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்ததாக, பாரிய நிதி மோசடியுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள திலினி பிரியமாலி தெரிவித்துள்ளார். பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டிருந்த திகோ குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திலினி பிரியமாலி நேற்று மாலை பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
திலினி பிரியமாலிக்கு தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான 08 சரீரப் பிணைகளும், தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான 20 சரீரப் பிணைகளும் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சிறையில் இருந்து வெளிவந்த திலினி பிரியமாலி தான் சிறைச்சாலையில் ஓய்வாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்ததாக தெரிவித்தார்.
மேலும், தன்மீதான குற்றச்சாட்டுகள் பற்றிய வழக்குகள் நிலுவையில் உள்ளதன் காரணமாக அதுகுறித்து கருத்து வெளியிட முடியாது என்றும் அத்துடன், தான் செய்த மற்றும் செய்யாத தவறுகளைக் கொண்டு பலரும் தன்மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்து விட்டனர் என்பதை வருத்தத்துடன் தெரிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் விசாரணைக்கு உட்படுத்தப்படும் ஒருவர் கட்டாயமாக குற்றவாளியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் சந்தேக நபராகவோ அல்லது குற்றஞ்சாட்டப்பட்டவராகவோ இருக்கலாம் என்றும் தனது எதிர்காலம் பற்றி எந்த கவலையும் பாதிப்புகள் எதுவும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.