யாழ்.நாகவிகாரைக்கு அருகில் அமைந்துள்ள யாழ் ஆரியகுளத்தின் வளாகத்தில் (29-12-2022) காலை முதல் இனந்தெரியாத நபர்களால் காட்சிப்படுத்தப்பட்ட பதாக...
யாழ்.நாகவிகாரைக்கு அருகில் அமைந்துள்ள யாழ் ஆரியகுளத்தின் வளாகத்தில் (29-12-2022) காலை முதல் இனந்தெரியாத நபர்களால் காட்சிப்படுத்தப்பட்ட பதாகை ஒன்றினால் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனின் 'தூய நகரம்' திட்டத்திற்கு அமைவாக தியாகி அறக்கொடை நிறுவனத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளர் வாமதேவன் தியாகேந்திரனின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடலானது கடந்த வருட இறுதியில் உத்தியோகபூர்வமாக மக்களின் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில் சிறுவர் முதல் பெரியோர்கள் வரை பொழுதுபோக்கும் இடமாக காணப்படும் ஆரியகுள வளாகத்தில் இன்று காலை அறிவித்தல் பதாகையொன்று நாட்டப்பட்டு அதில் தனியார் ஆதனம் அத்துமீறி பிரவேசிப்பவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றையதினம் திடீரென நாட்டப்பட்ட குறித்த அறிவித்தல் பதாகையினை கண்ணுற்ற ஆரியகுளத்திற்கு செல்பவர்களுக்கு குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது வரை குறித்த சம்பவம் தொடர்பில் யாழ் மாநகர முதல்வரோ மாநகர சபை தரப்பினரோ எவ்விதமான பதில்களையும் வழங்கவில்லை.
எனவே குறித்த விடயம் தொடர்பில் யாழ் மாநகர சபையினர் விரைவாக நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.