இலங்கையில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி முன்னெடுக்கப்படும் ‘கறுப்பு ஜனவரி’ மட்டக்...
இலங்கையில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி முன்னெடுக்கப்படும் ‘கறுப்பு ஜனவரி’ மட்டக்களப்பில் கடும் மழைக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் இந்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
ஜனவரி மாதம், இலங்கையில் ஊடகத்துறையைப் பொறுத்த வரையில் கறைபடிந்த மாதமாகவே காணப்படுகிறது. பல்வேறு ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள், ஊடகவியலாளர்கள் கொலை, ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை என்பவற்றுக்கு நீதி கோரி, வருடம் தோறும் ஜனவரி மாதத்தை ‘கறுப்பு ஜனவரி’யாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
மட்டு.ஊடக அமையம்,மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியனவற்றின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட மற்றும் கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவுகூரப்பட்டனர்.
அதனை தொடர்ந்து கறுப்பு சீலை வாயில் அணிந்துகொண்டு அமைதியான முறையிலான கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆரசாங்கமே ஊடக சுதந்திரத்தினை உறுதிப்படுத்து,ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்பட அனுமதி,ஊடக அடக்குமுறையினை உடன் நிறுத்து,படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை பெற்றுக்கொடு,காணாமல்ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துபோன்ற சுலோகங்கள் தாங்கிய பதாகைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
இன்றைய போராட்டத்தில் ஊடகவியலாளர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.