தேர்தலுக்கு இவ்வருடம் நிதி இல்லை அரச மேல்மட்டத்தில் தீர்மானம் அமைச்சர்களுடன் பழைய நினைவை மீட்ட ரணில் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பதவியை ந...
தேர்தலுக்கு இவ்வருடம் நிதி இல்லை அரச மேல்மட்டத்தில் தீர்மானம்
அமைச்சர்களுடன் பழைய நினைவை மீட்ட ரணில்
ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பதவியை நிராகரித்த அடைக்கலநாதன், விக்னேஸ்வரன்
மார்ச் மாதத்துக்குள் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பணம் கிடைக்காவிட்டால், நாட்டின் அத்தியாவசிய செலவுகளுக்காக கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கின் ஊடாக சில தினங்களுக்கு முன்னர் இதனைக் குறிப்பிட்டார்.
தற்காலிக கொடுப்பனவுகளை செலுத்த முடியாத நிலையில் எதிர்வரும் தேர்தலுக்கான செலவுகளுக்கு சரியான வரவு செலவுத் திட்டத்தை வழங்குமாறு நிதியமைச்சிற்கு அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறோம். மேலும், எங்கள் செலவினங்களை கவனமாக திட்டமிட வேண்டும். ஆண்டு முழுவதும் பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது. எனவே, தற்காலிக அடிப்படையில் நிதியை விடுவிக்க முடியாது. எதிர்பார்த்தபடி மார்ச் மாதத்தில் ஐ.எம்.எவ் கிடைக்காத பட்சத்தில் நாம் இருப்பு வைத்திருக்க வேண்டும்.
தேர்தல் செலவு குறித்து எங்களுக்கு இன்னும் தெளிவாக தெரியவில்லை. தேர்தல் ஆணைக்குழு 10 பில்லியன் ரூபா என மதிப்பிட்டது. எங்களிடம் தேவையான அனைத்து பணமும் இல்லை. எனவே, முன்னுரிமைகளுக்கு பணம் கொடுக்கப்பட வேண்டும். பொருளாதாரம் எனது முன்னுரிமை. பொருளாதாரம் மேம்படாவிட்டால் நமக்கு நாடு இருக்காது. நாம் கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினை ஒன்று உள்ளது. நாட்டை இழந்து அரசியலமைப்பை வைத்துக் கொள்ளலாமா? நாட்டைப் பாதுகாத்தால்தான் அரசியலமைப்பைப் பாதுகாக்க முடியும்” என்றும் ரணில் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஒன்றை இவ்வருடம் நடத்தும் தீர்மானத்தை தேர்தல் ஆணைக்குழு எடுத்தாலும் அதற்கு தேவையான நிதியை செலவிட அரசாங்கம் தயாராக இல்லை. இதனால் இவ்வருடத்தில் தேர்தலை நடத்த நிதி ஒதுக்கீட்டை செய்ய முடியாத நிலை இருப்பதாகவும், தேர்தல் இதேபோன்று இவ்வருடம் முழுவதும் ஒத்திவைக்கப்படும் நிலைமையே இருப்பதாகவும் அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவித்தன. அந்த அடிப்படையிலேயே தேர்தலுக்கான நிதி திறைசேரியால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படமாட்டாதென்று தெரிகிறது. எவ்வாறாயினும், தேர்தல் நிதிவழங்கலை தடுக்கவேண்டாமென உயர்நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை விடுத்த அதிரடி தீர்ப்பினால் அரச மேல்மட்டம் கலக்கமடைந்ததாக அறியமுடிந்தது.
அமைச்சர்களுடன் ரணில் ஆலோசனை
கடந்த வாரம் அடுத்தடுத்து இரண்டு அமைச்சரவை கூட்டங்களை ஜனாதிபதி ரணில் நடத்தினார். இந்த இரண்டு கூட்டங்களிலும் நாட்டின் நிலைமை குறித்து தீவிரமாக ஆராயப்பட்டது.
பொருளாதார முடக்கத்தினால் ஏற்பட்டுள்ள தாக்கங்களை சீர்செய்வது குறித்து இவற்றில் ஆராயப்பட்டது.
அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் உதவித் திட்டங்கள் குறித்து விவரித்து கூறினார். அமைச்சரவை கூட்டம் முடிந்த பின்னர், ஆளுங்கட்சி பிரமுகர்கள் சிலருடன் ஜனாதிபதி ரணில் சற்று ஆறுதலாக பேசிக்கொண்டிருந்தார். முன்னதாக நடந்த தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு பொதுக்கூட்டம் குறித்து அங்கு பேசப்பட்டது. பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்தபோது ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திசாநாயக்க கடை ஒன்றுக்குள் புகுந்தமை குறித்து அங்கு அமைச்சர்கள் பலர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டி பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில், 80ஆம் ஆண்டு காலப்பகுதியில் என்.எம். பெரேரா உட்பட்ட இடதுசாரிகள் ஹைட்பாக் மைதானத்திற்கு அருகில் இப்படித்தான் பாதைகளை மூடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது இவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தி நன்றாக அடி கொடுத்தனர். என்.எம். பெரேரா இதன்போது காலில் காயமடைந்தார். அதனால் அவரது கால் சற்று பலவீனம் அடைந்தது. இறக்கும்வரை அந்த வருத்தம் அவருக்கு இருந்தது என்று பழைய நினைவுகளை மீட்டார் ரணில்.
ஆமாம். எனக்கும் நன்றாக ஞாபகம் வருகிறது. சமசமாஜ கட்சி தலைமையகத்தின் முன்பாகவே அந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அன்றைய தலைவர்கள் தமது உறுப்பினர்களுடன் சேர்ந்து இறக்கக் கூட தயாராக இருந்தனர். கொல்வின் ஆர்.டி. சில்வா, பிலிப் குணவர்த்தன, ஜே.ஆர். ஜெயவர்தன ஆகியோர் இப்படித்தான் இருந்தார்கள். இடதுசாரி தலைவர்கள் கூட தங்களது ஆதரவாளர்களை விட்டுவிட்டு ஓடவில்லை. அடி வாங்கிய போதும் அவர்கள் ஆதரவாளர்கள் பக்கத்திலேயே இருந்தனர் என்று இங்கு விவரித்தார் அமைச்சர் பந்துல.
இங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தற்போதுள்ள இடதுசாரித் தலைவர்கள் கடைகளில் ஒளிந்து பின்னர் வெளியே வந்து வீரர்கள் போன்று பேசுவார்கள் என கிண்டலாக தெரிவித்தார்.
ஆனால், ஆதரவாளர்கள் பாவம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நிலைமை இருப்பதாகவும் பிரசன்ன குறிப்பிட்டார்.
சுகவீனமுற்ற நிலையில் இருக்கும் கட்சி ஆதரவாளர்களை கட்சிக் கூட்டங்களுக்கு அதாவது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு அழைத்து வரக்கூடாது என அமைச்சர் மனுஷ நாணயக்கார இங்கு குறிப்பிட்டார்
இங்கு கருத்து வெளியிட்ட வஜிர அபேவர்தன, 2006ஆம் ஆண்டு எங்களது ஜனபல மெஹெயும கூட்டத்தில் பொலிஸார் 2 பேரை கொன்றனர். ஆனால், இப்போது ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் பொலிஸார் பொறுப்புடன் நடந்து கொள்கின்றனர் என்று குறிப்பிட்டார்.
கடந்த திங்கட்கிழமைக்கு பின்னர் நடந்த அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில், அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கை குறித்து விரிவாக பேசப்பட்டது. மருந்து உட்பட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது கடன் உறுதிக் கடிதங்கள் அரச வங்கிகளில் மட்டும் பெறாமல் தனியார் வங்கிகளிலும் அவற்றைப் பெறுவதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டது.
அரச வங்கியில் ஊழியர்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் பொறுப்புடன் நடக்காமல் வங்கித் துறை வீழ்ச்சியடைந்தால் அதற்கு ஆளுங்கட்சியினரால் பொறுப்புக்கூற முடியாது என்று இங்கு கூறினார் அமைச்சர் பந்துல.
இங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, வேலைநிறுத்தப் போராட்டம் வெற்றியடையவில்லை என்றும் ஒன்பது வீதமான பணியாளர்கள் மட்டுமே வரிக் கொள்கையால் பாதிக்கப்படுவதாகவும் அநீதியான வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு பெரும்பாலானோர் செல்லவில்லை என்றும் கூறினார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஒன்றரை இலட்சத்துக்கு ஒரு இலட்ச ரூபாவுக்கு மேல் சம்பளம் பெறுவோருக்கு வரி விதிக்கப்பட்டாலும் ஒரு இலட்ச ரூபாவுக்கு குறைவாக சம்பளம் பெறும் ஆசிரியர்கள் எப்படி அந்த வரிக் கட்ட பிரச்சினையில் சிக்கிக் கொண்டார்கள் என்பது தெரியவில்லை என்று கூறினார்.
எவ்வாறாயினும், மக்களுக்கு கூடியளவு நிவாரணங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துவதாக அரசின் கடந்தகால செயற்பாடுகளில் இருந்து தெரிகிறது.
ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பதவியை
நிராகரித்த அடைக்கலநாதன், விக்னேஸ்வரன், மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு அரசாங்கம் விடுத்த அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரனும் இதேபோன்ற அழைப்பை நிராகரித்துள்ளார்.
ரணில் பெரமுன ஆட்சியமைந்த பின்னர், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர்களும் புதிதாக நியமிக்கப்பட்டிருந்தனர். முன்னைய கோட்டாபய விசுவாசிகளும், அப்போதைய பொதுஜன பெரமுன அரசின் பங்காளிகளும் கோட்டாபய ராஜபக்ஷவினால் ஒருங்கிணைப்புக்குழு தலைவர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.
ஆட்சி மாற்றத்தின் பின், ரணில் பெரமுன தரப்பினரால் ஒருங்கிணைப்புக்குழு தலைவவர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.
தற்போது, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவராக டக்ளஸ் தேவானந்தாவும், வவுனியா அபிவிருத்திக்குழு தலைவராக ஈ.பி.டி.பியின் மற்றொரு எம்.பியான கு.திலீபனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டக்ளஸ் தேவானந்தா கடந்த ஆட்சியில் கிளிநொச்சி ஒருங்கிணைப்புக்குழு தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் அப்போது யாழ்ப்பாண மாவட்டத்தின் தலைவராகவே விரும்பியிருந்தார். என்றாலும், கோட்டாவிற்கு டக்ளஸைவிட அங்கஜனுடன் நெருக்கம் அதிகமாக இருந்ததோ என்னவோ, அங்கஜன் இராமநாதனே யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
தற்போதைய புதிய நியமனங்களின்போது, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களிற்கு தமிழ்த் தேசியக் கட்சிகளின் எம்.பிக்களை நியமிக்கவே அரசாங்கம் விரும்பியிருந்தது. யாழ்ப்பாணத்திற்கு க.வி.விக்னேஸ்வரனையும், மன்னாரிற்கு செல்வம் அடைக்கலநாதனையும் நியமிக்க அரசு விரும்பியிருந்தது.
எனினும், இருவருமே அந்த யோசனையை நிராகரித்து விட்டனர். விக்னேஸ்வரன் ஒருமுறை மறுத்ததுடன், அரசாங்கத் தரப்பிலிருந்து கேட்பதை நிறுத்தி விட்டார்கள்.
ஆனால், செல்வம் அடைக்கலநாதனை அரச தரப்பு விடவில்லை. மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைமையை ஏற்றுக்கொள்ளுங்கள் என தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.
கடந்த வாரம் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டபோதும், பிரதமர் தொலைபேசியில் செல்வம் அடைக்கலநாதனை அழைத்து, மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைமையை ஏற்றுக்கொள்ள வேண்டுமென கேட்டுள்ளார். இந்த பதவியை ஏற்பதன் மூலம், மக்களிற்கு அபிவிருத்தி சார்ந்த பணிகளை மேற்கொள்ளலாமென பிரதமர் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
என்றாலும், செல்வம் அடைக்கலநாதன் அந்த கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை நோக்கிய செயன்முறையில், நம்பிக்கை கொள்ளத்தக்க எந்தவிதமான உடனடி நடவடிக்கைகளையும் காண முடியவில்லை. காணி சுவீகரிப்பு, அரசியல் கைதிகள் விவகாரம், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம், மக்களின் வாக்குரிமையை உறுதி செய்ய வேண்டிய நடவடிக்கைகள் என எதையும் அரசாங்கம் செய்யாத சூழலில், அரசை காப்பாற்றும் விதமான எந்த முடிவுகளையும் எடுக்க மாட்டோம் என செல்வம் அடைக்கலநாதன் நேரடியாக குறிப்பிட்டுள்ளார்.