யாழ்ப்பாணம் உதைபந்தாட்ட லீக்கின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது. நேற்று 33 கழகங்களின் பங்குபற்றுதலோடு இடம்பெற்ற யாழ்ப்பாணம...
யாழ்ப்பாணம் உதைபந்தாட்ட லீக்கின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது.
நேற்று 33 கழகங்களின் பங்குபற்றுதலோடு இடம்பெற்ற யாழ்ப்பாணம் உதைபந்தாட்ட லீக்கின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது.
இதன்போது தலைவர் பதவிக்காக தற்போதைய தலைவர் இமானுவேல் ஆனோல்ட் மற்றும் மா.இளம்பிறையன் ஆகியோரும் செயலாளர் பதவிக்காக
அஜித்குமார் மற்றும் பகீரதன் ஆகியோரும் போட்டியிட்டனர்.
பொதுக்கூட்டத்தை நடாத்துவதற்காக யாழ்ப்பாண உதைபந்தாட்ட கவுன்சில் 03 நபர்களை தீர்மானித்திருந்த நிலையில் கூட்டத்திற்கு ஒருவரே வருகை தந்திருந்தார்.
இந்த நிலையில் இடம்பெற்ற கூட்டத்தில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன தலைவரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் 04 பேர் நியமிக்கப்பட்டதாக யாழ்ப்பாண உதைபந்தாட்ட கவுன்சிலுக்கு கடிதம் கிடைத்;த நிலையில் அவர்களும் கூட்டத்தில் உள்வாங்கப்பட்டனர்.
இந் நிலையில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன யாப்பின்படி ஒருவர் 2 தடவைகளுக்கு மேல் தலைவர் செயலாளராக இருக்க முடியாது எனவும்
ஆனோல்ட்; 2016ஆம் ஆண்டிலிருந்து தலைவராகவும் அஜித்குமார் 2013ஆம் ஆண்டிலிருந்து செயலாளராகவும் செயற்பட்டு வரும் நிலையில் அவர்கள் போட்டியில் கலந்துகொள்ள முடியாது என இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினரால் தெரிவிக்கப்பட்டதுடன் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் இவர்கள் போட்டியிட முடியாது என கடிதம் அனுப்பியதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்காத இமானுவேல் ஆனோல்ட் தரப்பு யாழ்ப்பாணம் உதைபந்தாட்ட லீக்கின் சட்டப்படி தலைவருக்கு கால வரையறை இருக்கவில்லை என தெரிவித்த நிலையில் அங்கு முரண்பாடு தோன்றியது.
இதன்போது இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினர் ஆனோல்ட் மற்றும் அவர்தரப்பை சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் உதைபந்தாட்ட சம்மேளனத்தினரால் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சம்மேளனத்தினர் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து இடம்பெற்ற கூட்டத்தில் இமானுவேல் ஆனோல்ட் தலைவராகவும் அஜித்குமார் செயலாளராகவும்
தெரிவுசெய்யப்பட்டனர்.
உதைபந்தாட்ட சம்மேளனத்தினர் தாக்கப்பட்டமைக்கு விளையாட்டு ஆர்வலர்கள் கண்டனம் வெளியிட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் உதைபந்தாட்ட லீக் 05 வருடங்களுக்கு தடைசெய்யப்படலாம் என இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் தெரிவித்துள்ளார்.