யாழ். மாவட்டத்தில் 2000 ஏக்கர் காணிகள் வனவளப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமானது என்று வர்த்தமானி அறிவிப்பு வெளியிடுவதற்கான நடவடிக்கைகள்...
யாழ். மாவட்டத்தில் 2000 ஏக்கர் காணிகள் வனவளப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமானது என்று வர்த்தமானி அறிவிப்பு வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் சில ஊடகங்களில் வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வலம்புரி பத்திரிகையில் யாழில் 2000 ஏக்கர் காணியை வனவளப் பாதுகாப்பு திணைக்களம் கையகப்படுத்த திட்டம் என்று செய்தி வெளியான நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அதன் பிரதியை காட்டியே இவ்விடயத்தை டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
மேலும், யாழ் மாவட்டத்தில் காணிகளை வனவளப் பாதுகாப்பு திணைக்களம் போன்ற எந்தவிதமான அரச திணைக்களங்களுக்கும் கொடுப்பதற்கான தீர்மானங்கள் எவையும் தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 1985 ஆம் ஆண்டிற்கு முன்னர் மக்களின் குடியிருப்புக்களாகவும் விவசாய நிலங்களாகவும் இருந்த அனைத்து காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.