2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (19) இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இறுத...
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (19) இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இறுதிப் போட்டியில் போட்டியை நடத்தும் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா மோதவுள்ளது.
ஆரம்ப சுற்றுப் போட்டிகளின் 09 போட்டிகளிலும் வெற்றிகளைப் பெற்றுள்ள இந்தியா, மிகவும் வலுவான மனநிலையுடன் இறுதிப் போட்டிகளுக்குள் பிரவேசித்துள்ளது.
இன்றைய போட்டியில் இந்திய அணியின் எதிரணியான அவுஸ்திரேலியாவும் ஆரம்ப சுற்றில் இந்தியாவிடம் 06 விக்கெட்டுகளால் தோல்வியடைந்தது.
உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா விளையாடுவது இது 8வது முறையாகும்.அதில் 5 முறை உலகக் கிண்ணத்தை வென்றுள்ளது.
அவுஸ்திரேலியாவும் இந்தியாவும் இதற்கு முன்னர் 2003 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் சந்தித்துள்ளன, இதில் இந்திய அணி அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.
இந்தியா 03 உலகக்கிண்ண இறுதிப் போட்டிகளில் விளையாடி இரண்டு முறை பட்டத்தை வென்றுள்ளது.1983ல் மேற்கிந்திய தீவுகள் அணியையும், 2011ஆம் ஆண்டில் இலங்கையையும் தோற்கடித்து கிண்ணத்தை வென்றது.
இன்றைய போட்டி உள்ளூர் நேரப்படி பிற்பகல் 02 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதன்போது விமான சாகசங்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
130,000 பேர் வரை பார்வையிட வசதி கொண்ட அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.