இந்த ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக 5 அணிகளும் தமது அணியில் தக்கவைத்துக் கொண்ட வீரர்க...
இந்த ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக 5 அணிகளும் தமது அணியில் தக்கவைத்துக் கொண்ட வீரர்கள் மற்றும் நேரடியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலை இலங்கை கிரிக்கெட் சபை இன்று (20) வெளியிட்டுள்ளது.
LPL தொடரின் ஐந்தாவது அத்தியாயத்துக்கான வீரர்கள் ஏலம் நாளை (21) நண்பகல் 12.00 மணிக்கு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இம்முறை ஏலத்தில் 420 வீரர்கள் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், இதில் 140 உள்ளூர் வீரர்களும், 266 வெளிநாட்டு வீரர்களும் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நடப்பு சாம்பியனான, B-Love கண்டி அணி உரிமையில் மாற்றம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுரை வெளியாகின்ற நேரத்தில் கண்டி அணியின் உரிமையைத் தக்கவைத்துக் கொள்வதா அல்லது வேறு உரிமையாளருடன் செல்வதா என்பது குறித்த முடிவை இலங்கை கிரிக்கெட் சபை இன்னும் தீர்மானிக்கவில்லை. இதனால் கண்டி அணியின் பெயர் கண்டி ஃபால்கன்ஸ் அல்லது கண்டி ஸ்பார்டன்ஸ் என்று மாற்றமடையலாம் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனிடையே, தம்புள்ளை மற்றும் காலி ஆகிய இரண்டு அணிகளும் புதிய உரிமையாளர்களையும், முகாமைத்துவத்தையும் பெற்றுக் கொண்டுள்ளன, இதன்படி, தம்புள்ளை ஓரா மற்றும் கோல் டைட்டன்ஸ் என்ற பெயரில் கடந்த சீசனில் ஆடிய இந்த 2 அணிகளும் முறையே தம்புள்ளை தண்டர்ஸ் மற்றும் கோல் மாவல்ஸ் என்ற புதிய பெயருடன் இந்த ஆண்டு LPL தொடரில் களமிறங்கவுள்ளன.
நடப்புச் சம்பியனான கண்டி அணியைப் பொறுத்தமட்டில் அணித்தலைவர் வனிந்து ஹஸரங்க, அஞ்செலோ மெத்யூஸ், துஷ்மந்த சமீர, கமிந்து மெண்டிஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்களை தக்கவைத்துக் கொள்ள ஏற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதில் சிறப்பம்வம் என்னவெனில் இம்முறை ஏலத்திற்கு முன்னதாக மேற்கிந்திய தீவுகளின் நட்சத்திர வீரர்களான ஆன்ட்ரே பிளெட்சர் மற்றும் கைல் மேயர்ஸ் ஆகிய இருவரும் நேரடியாக கண்டி அணிக்கு ஒப்பந்தமாகியுள்ளனர்.
LPL தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக வலம் வந்து கொண்டிருக்கின்ற ஜப்னா கிங்ஸ் அணிக்கு 3 தடவைகள் சம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த இலங்கையின் முன்னாள் நட்சத்திர சகலதுறை வீரர் திசர பெரேரா, இம்முறை LPL தொடரில் கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் அணியுடன் இணைந்து கொண்டுள்ளார். பெரும்பாலும் இம்முறை சீசனில் அந்த அணியின் தலைவராக அவர் செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஜப்னா கிங்ஸ் அணியின் வெற்றியில் மிகப் பெரிய பங்களிப்புச் செய்த மற்றுமொரு முன்னணி வீரரான மஹீஷ் தீக்ஷன, இம்முறை LPL தொடரில் கோல் மாவல்ஸ்; அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
கடந்த ஆண்டு LPL தொடரில் இறுதிப்போட்டி வரை வந்த தம்புள்ளை அணியை வழிநடத்திய குசல் மெண்டிஸ் இந்த ஆண்டு LPL தொடரில் ஜப்னா கிங்ஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல, அவிஷ்க பெர்னாண்டோ, ஆப்கானிஸ்தான் வீரர்களான அஸ்மத்துல்லா ஒமர்சாய், மற்றும் நூர் அஹ்மட் ஆகியோரும் இம்முறை சீசனில் ஜப்னா கிங்ஸ் அணிக்காக நேரடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் சதீர சமரவிக்ரம LPL தொடரின் ஐந்தாவது அத்தியாயத்தில் கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக ஒப்ப்நதமாகியுள்ளார். அவருடன் சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்ன மற்றும் இளம் வீரர் நிபுன் தனஞ்சய ஆகிய இருவரும் கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக ஆடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ஏலத்திற்கு முன்பாக பாகிஸ்தானின் சதாப் கான் மற்றும் நியூசிலாந்தின் க்ளென் பிலிப்ஸ் ஆகிய இருவரும் கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக நேரடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
அதேநேரம், கோல் மாவல்ஸ் அணியில் பானுக ராஜபக்ஷ மற்றும் இளம் வீரர் லசித் குரூஸ்புள்ளை ஆகிய இருவரும் தக்க வைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அத்துடன், இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் நியூசிலாந்தின் டிம் சீஃபர்ட் ஆகிய இருவரும் இம்முறை LPL தொடரில் கோல் மாவல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த ஆண்டு LPL தொடர் வீரர்கள் ஏலத்தில் ஜப்னா கிங்ஸ் அணியால் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட இடது கை வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுசங்க, தற்போது நடைபெற்று வருகின்ற IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிய நுவன் துஷார மற்றும் சென்னை சுபர் கிங்ஸ் அணிக்காக ஆடிய பங்களாதேஷ் வீரர் முஸ்தபிசூர் ரஹ்மான் ஆகிய 3 வீரர்களும் இந்த ஆண்டு LPL தொடரில் தம்புள்ள தண்டர்ஸ் அணிக்காக முன்கூட்டியே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
எனவே, இந்த ஆண்டு LPL தொடரில் எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை தக்கவைத்துள்ளனர் எனவும், நேரடியாக ஒப்பந்தம் செய்துள்ளனர் எனவும் இங்கு பார்ப்போம்.
கலம்போஸ்ட்ரைக்கர்ஸ்
சாமிக்க கருணாரத்ன, திசர பெரேரா, சதீர சமரவிக்ரம, நிபுன் தனஞ்சய, சதாப் கான், க்ளென் பிலிப்ஸ்
தம்புள்ளதண்டர்ஸ்
டில்ஷான் மதுசங்க, நுவன் துஷார, துஷான் ஹேமந்த, பிரவீன் ஜெயவிக்ரம, முஸ்தபிசூர் ரஹ்மான், இப்ராஹிம் சத்ரான்
கோல்மாவல்ஸ்
பானுக ராஜபக்ஷ, லசித் குரூஸ்புள்ளே, நிரோஷன் டிக்வெல்ல, மஹீஷ் தீக்ஷன, டிம் சீஃபர்ட், அலெக்ஸ் ஹேல்ஸ்
ஜப்னாகிங்ஸ்
குசல் மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலங்க, விஜயகாந்த் வியாஸ்காந்த், அஸ்மத்துல்லா ஒமர்சாய், நூர் அஹ்மட்
கண்டி
வனிந்து ஹஸரங்க, அஞ்செலோ மெத்யூஸ், துஷ்மந்த சமீர, கமிந்து மெண்டிஸ், ஆன்ட்ரே பிளெட்சர், கைல் மேயர்ஸ்