புதிய இணைப்பு இலங்கை தனது கடனில் 4.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை மறுசீரமைப்பதற்காக சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியுடனான கடன் உடன்படிக்கை ...
புதிய இணைப்பு
இலங்கை தனது கடனில் 4.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை மறுசீரமைப்பதற்காக சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியுடனான கடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அறிவி்க்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றை மேற்கொண்டுள்ளார்.
அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இந்த நடவடிக்கை நாட்டின் நிதி சவால்களை நிர்வகிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.
இந்த கடன் மறுசீரமைப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் இலங்கைக்கும் சீனாவுக்கும் (China) இடையில் கொழும்பில் (Colombo) கைச்சாத்திடப்பட்டுள்ளது.
கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் அதன் கடன் நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கும் ஒரு முக்கியமான படியாகும்” என மேலும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடனான இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரான்ஸ் (France) தலைநகர் பாரிசில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான பாரிஸ் கழக கூட்டத்தின் போது நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ( Shehan Semasinghe) இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இருதரப்பு கடன் வழங்குவோரின் உத்தியோகபூர்வ குழுவுடன் 5.8 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை இலங்கை எட்டியுள்ளது.
இந்த நிலையில், இலங்கை மற்றும் சீனா இடையிலான இருதரப்பு கடன் மறுசீரமைப்பை ஏற்படுத்திக்கொள்ளவும் நடவடிக்கை எடுத்து வருவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கிய இந்தியா (India) , ஜப்பான் (Japan) சீனா, (China) உள்ளிட்ட நாடுகளுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கை எதிர்நோக்கியுள்ள கடன் நெருக்கடிக்கு தீர்வு காண இது முக்கிய திருப்பு முனையாக அமையும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.