எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென இலங்கை தமிழ் அரசு கட்சி தீர்மானித்திருந்தாலும், சஜித்தை ஆதரித்து எந்த பிரச்சாரக...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென இலங்கை தமிழ் அரசு கட்சி தீர்மானித்திருந்தாலும், சஜித்தை ஆதரித்து எந்த பிரச்சாரக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளப் போவதில்லையென அந்த கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
நேற்று (1) நடந்த கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் இதனை அவர் அறிவித்திருந்தார்.
நேற்றைய மத்தியகுழு கூட்டத்தில், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென தீர்மானம் எடுக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்றவர்களில் பலர் அந்த தீர்மானத்தை ஆதரித்தனர்.
என்றாலும், கூட்டத்தில் கலந்து கொண்ட 26 பேரில் பலர் சஜித்தை ஆதரித்தனர்.
ஜனாதிபதி தேர்தல் நிலைப்பாடு தொடர்பில் கட்சிக்குள் நடந்த கலந்துரையாடல்களில், யாரையும் ஆதரிக்காமல் மக்கள் விருப்பமானவர்களுக்கு வாக்களிக்கலாமென அறிவிக்கலாமென சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்திருந்தார்.
அதுவே அவரது நிலைப்பாடாகவும் இருந்தது. எனினும், நேற்றைய கூட்டத்தில் சஜித் ஆதரவு நிலைப்பாடு எடுக்கப்பட்டது. நேற்றைய கூட்டத்திற்கு சீ.வீ.கே.சிவஞானமே தலைமைதாங்கினார்.
உடல்நல குறைவினால் மாவை கலந்துகொள்ளாத நிலையில், சீ.வீ.கே தலைமைதாங்கினார். கூட்டத்தின் போது தனது நிலைப்பாட்டை அவர் அறிவித்தார்.
சஜித்தை ஆதரிப்பதாக கட்சி அறிவித்தாலும், நான் சஜித் ஆதரவு பிரச்சாரங்களில் ஈடுபடமாட்டேன். சஜித்தை ஆதரித்து மேடைகளில் பேசமாட்டேன் என்றார்.